அசால்டாக சம்மர்சால்ட் அடிக்கிற “குளோபுலார் ஸ்ப்ரிங்டெயில் “(Globular springtail)
வெகு சில விளையாட்டு வீரர்களால் மட்டுமே அதுவும் உரிய பயிற்சி பெற்றே குட்டிக்கரணம் அடிக்க முடியும். ஆனால் குட்டியான பூச்சி ஒன்று அசால்டாக சம்மர்சால்ட் அடிக்கிறதென்றால் நம்ப முடிகிறதா? தனது உடலில் உள்ள வால் போன்ற பகுதியால் குளோபுலார் ஸ்ப்ரிங்டெயில் (Globular springtail) என்று நாமகரணம் சூட்டப்பட்ட பூச்சிதான் குட்டிக் கரண கில்லாடி. இது தனக்கு ஆபத்து நேரும் போதெல்லாம் அதிவேகத்தில் தலைகீழாகக் குட்டிக்கரணம் அடித்துத் தப்பித்து விடும். எவ்வளவு வேகம் என்றால், நம்முடைய சாதாரண கேமராக்களால் போட்டோ,வீடியோவே எடுக்க முடியாத வேகம்.
அமெரிக்காவைச் சேர்ந்த வட கரோலினா ஸ்டேட் பல்கலை அதிநவீன கேமராக்களைக் கொண்டு நொடிக்கு 40,000 பிரேம்கள் என்ற கணக்கில் இதைப் படம் எடுத்தது. இந்த வீடியோவை ஆராய்ந்த அறிவியலாளர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். இந்தப் பூச்சி ஒரு நொடியில் ஆயிரத்திலொரு பங்கு நேரத்தில் குட்டிக்கரணம் அடிக்கிறது. தலைகீழாகக் குதித்துத் தரையிறங்குவதற்குள் தனது உடலைக் காற்றில் ஒரு நொடிக்கு 368 சுற்றுகள் சுற்றிவிடுகிறது. இது எந்த உயிரினத்தாலும் செய்ய முடியாத சாதனை.
1-2 மி.மீ., மட்டுமே நீளமுள்ள இந்தப் பூச்சி 62 மி.மீ., உயரம் காற்றில் தாவி, 102 மி.மீ., துாரத்தைக் கடக்கிறது.. இந்தச் சிறிய பூச்சிக்கு இயற்கை இப்படி ஓர் ஆற்றலை அளித்துள்ளது ஆச்சரியமானது தானே?
0
Leave a Reply