.நகரத்தார் பெருமக்களின் பல்லாண்டுகளாகத் தொடரும் கைங்கரியம் காசி ஸ்ரீ விஸ்வநாதருக்குக் குளிர்காலச் சட்டை! ( மக்மல் பட்டால் ஆனது )
"காசியை குறித்துச் செல்லும் கால்களே கால்களாகும்
காசியை வாழ்த்தும் நாவே நாவெனக் கூறலாகும்
காசியின் கதைகள் கேட்கும் செவிகளே செவிகளாகும்
காசியை இனிது காணும் கண்களே கண்களாகும்''
என்று கூறுகிறது கந்த புராணத்தில் "காசிக் காண்டம்' என்னும் பகுதியில் உள்ள ஒரு பாடல்.
காசி ஸ்ரீ விஸ்வநாதருக்குக் குளிர்காலச் சட்டை! ( மக்மல் பட்டால் ஆனது) .காசியில் ஐப்பசி மாதம் முதல் மாசி மகாசிவ ராத்திரி வரை கடும் குளிர்காலம்.நகரத்தார்களுக்குச் சிவபெருமானுடன் உள்ள பிணைப்பு குடும்பப் பிணைப்பு.தாய் குழந்தைக்குக் குளிரடித்தால் சேலை தலைப்பு கொண்டு போர்த்துவது போல்,''காசி விஸ்வநாதருக்குக் குளிரடிக்குதே'' என்று தோளில் துண்டு மட்டும் அணிந்து சட்டை இல்லாத நகரத்தார் , அந்த காலங்களில் ஸ்ரீ விஸ்வநாதருக்கு 'மக்மல் பட்டு' அணிவிக்க ஏற்பாடு செய்து ,அதை நீடித்து கைங்கரியம் செய்ய கட்டளை ஏற்படுத்தி இன்றளவும் அவ்வாறே நடந்து வருகிறது.இஃதன்றி ஏகாதசி நாளில் அல்வாவும்,சோமவார உச்சி காலத்தில் பூரியும் நகரத்தார் நைவேத்திய உபயமாக உள்ளன.ஜோதிர்லிங்கமான காசி விஸ்வநாதருக்கு மூன்று வேளையும் பூஜைப் பொருள்களை வழங்கி பூஜை செய்யும் பேற்றினைப் பெற்றவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர்.
காசி நகரத்தார் சத்திரம் விஸ்வேசர் கோயிலுக்கு அருகேயுள்ள குடோலியா சந்நிதியை அடுத்து அமைந்த கட்டடமாகும். கடந்த 200 ஆண்டுகளாகச் செயல்படும் இந்நிறுவனம் பசு மடம், நந்தவனம் உண்டாக்கி விஸ்வநாதருக்குப் பாலும் மலர்களும் வழங்குகிறது. உஷத் காலத்தில் "பத்தாஸ் மிட்டாய்' எனப்படும் இனிப்புப் பண்டம், உச்சிக் காலத்தில் பருப்புப் பொங்கல், அர்த்த சாமத்தில் சர்க்கரைப் பொங்கலும் நகரத்தார் சத்திரத்தில் இருந்து அனுப்பப்படும் பொருள்களைக் கொண்டு கோயில் மடப்பள்ளியில் செய்து, நைவேத்யம் செய்யப்படுகிறது.தினமும் மூன்று முறை விஸ்வேஸ்வரருக்கான பூஜை, அபிஷேக, அலங்காரப் பொருள்களை நகரத்தார் சத்திரத்திலிருந்து எடுத்துச் செல்லும் போது, மேளம் தாளம் ஒலிக்க, "சம்போ சம்போ சங்கர மகாதேவா' என்று கோஷமிட்டுச் செல்வதைத் தெருக்களில் இருப்பவர்களும், கடைகளில் உள்ளவர்களும், கட்டடங்களில் வசிப்பவர்களும் மரியாதையுடன் சென்று, பார்த்து தலை வணங்குவர்.
ஊரடங்குச் சட்டம் அமலில் இருந்த போதும்கூட "சம்போ'' நேரப்படி தவறாமல் நடைபெறும் என்றும் பஞ்சாப் மெயில் தாமதமானாலும் கூட நகரத்தார் சம்போ நேரப்படி வந்து விடும் என்பதும் காசியில் பழமொழியாகவே வழங்கப்படுகிறது. குளிர் காலத்தில் ஐப்பசி மாதம் வஸந்த பஞ்சமியிலிருந்து மாசி மாதம் சிவராத்திரி வரை குளிர்கால சட்டை (மக்மல் பட்டால் ஆனது) காசி விஸ்வநாதருக்கு அணிவிக்க காசி நகரத்தார் கட்டளை உண்டு என்பதும் சிறப்பாகும்.
காசியில் நகரத்தார் ஏற்படுத்தியுள்ள கட்டளைகள்.
1, பால் கட்டளை.
2, பசுமடக் கட்டளை.
3, நந்தவனக் கட்டளை.
4, வில்வம் அட்ச்சதை அருகம்புல் கட்டளை.
5, புனுகு சட்டக் கட்டளை.
6, கற்பூரக் கட்டளை.
7, அத்தர் கட்டளை.
8, விசாலாட்சி அம்பாள் திருப்பள்ளி எழுச்சிக் கட்டளை.
9 ,விசாலாட்சி அம்பாள் பால் அபிஷேகக் கட்டளை.
10, அன்னபூரணி அம்பாள் பால் அபிஷேகக் கட்டளை.
11, உபதான அரிசிக் கட்டளை.(காப்பு அரிசி)
12, சாதுக்கள் போஜன கட்டளை.
13, பிராமண போஜன கட்டளை.
14, சில்லறை பிராமண போஜன கட்டளை.
15, வெள்ளி சாமான் நல்ல முறையில் பாதுகாக்கக் கட்டளை.
16, சாதுக்கள் ஏழைகளுக்கு நித்தியபடி கட்டளை.
17, சோமவாரக் கட்டளை.
18, அன்னதானக் கட்டளை.
19, நகரேஸ்வரர் கோவில் சிவலிங்க பிரதிஷ்ட கட்டளை.
20, நெய்வேத்ய கட்டளை.
21, வயிரவர் தீபக் கட்டளை.
22, முக்தி மண்டப தீபக் கட்டளை.
23, திருவனந்தல் கட்டளை.
24, வில்வ ஆர கட்டளை.
25, சாம்பிராணிக் கட்டளை.
26, கங்கை அபிசேகக் கட்டளை.
27, அன்ன தானம் அகண்ட தீபக் கட்டளை.
அனைத்து கட்டளைகளுக்கும் தனி தனி நிரந்தர வைப்பு மூலம் வரவு செலவு செய்ய படுகிறது.
சத்திரத்தில் இருந்து விஸ்வநாதர் கோவிலுக்குச் சம்போ கொண்டு செல்லும் அழகு பயம் கலந்த பக்தியோடு நடைபெறும் தினசரி இருவேளை நிகழ்வு.
சம்போவுக்குரிய பொருட்கள் அழகாக கட்டப்படும்,மூடி கொண்டு மூடப்பட்டும் தயாராக சத்திரத்து முதல் மாடியில் அலுவலகத்தில் உள்ள சுப்பிரமணியர் படத்துக்கு முன் வைக்கப்பட்டு சாம்பிராணி போடுவார்கள்,கீழே பாதாள ஈஸ்வரர் கோவிலில் இருந்து தசாங்கம் போட்டு கொண்டுவருவார்கள் ,உடனே நான்கு இந்துஸ்தானி பிராமணர்கள்,நகரத்தார் சாமன்களைத் தூக்கி கொண்டு நாதஸ்வர கோஷ்டி உடன் செல்ல (வாசிப்பு இல்லை)'சம்போ சங்கரா'என்று உரத்த குரலில் சொல்லிக்கொண்டு கடைவீதி வழியாக செல்லும் போது வழியில் கடைக்காரர்கள் பொதுமக்கள் ஓரம் ஒதுங்கி தலை வணங்கி,கை கூப்பி மரியாதை செய்வார்கள்.விஸ்வநாதர் கோவிலில் இரண்டு நேரமும் நகரத்தார் பெயருக்கு அஷ்டோத்திர அர்ச்சனை செய்ய நகரத்தார் நியமித்த அத்தியான குருக்கள் வந்து தயாராக இருப்பார்.
ஷெனாய் இசையே மங்கள இசையாக வாசிக்கப்படும் வடநாட்டுக் கோவில்களில் ,விஸ்வநாதர் கோவிலில் உச்சி காலம்,அர்த்தஜாமம் இரண்டுக்கும் நகரத்தார்கள் ஏற்பாடு செய்துள்ள நாதஸ்வர இசையே வாசிக்கப்படும்.கோவிலில் பாண்டாக்கள் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் நகரத்தார்களுக்கு முதல் மரியாதை செய்து ஆரத்தி செய்வார்கள்.இன்றளவும் 'சம்போ' பார்த்து வட நாட்டு கோடீஸ்வரர்கள் பிர்லா போன்றோர் ஒரு நேரமாவது கைப்பற்றத் துடித்தார்கள்.ஆனால் விஸ்வநாதர் அருளால் நீதிமன்றம் அனைத்தையும் தள்ளுபடி செய்து மூன்று கால பூசை உரிமை நகரத்தார்களுடையதே என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
நன்றி:
காசி சத்திரம் கடந்து வந்த பாதை - நகரத்தார் சத்திரம்,காசி.
காசி ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோயில்
0
Leave a Reply