மூத்த குடிமக்களுக்கு ஓய்வுக்கு பின்பும் ரூ.20,000 வருமானம்.
நிலையான வருமானம் என்பது ஓய்வு பெற்ற பின்னர் வசதியான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) குறிப்பாக மூத்த குடிமக்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சேமிப்புத் திட்டமாகும். இந்த அரசாங்க திட்டம் மற்ற சேமிப்பு திட்டங்களை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. SCSS திட்டத்தில் ரூ.20,000 மாத வருமானம் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்.மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) என்பது மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். அரசாங்க ஆதரவுடன் இருப்பதால், இது மிகவும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் கருதப்படுகிறது. நல்ல வட்டி விகிதங்களுடன் பாதுகாப்பான முதலீட்டைத் தேடும் முதியவர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்தது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட கணக்கை யார் தொடங்கலாம்?: SCSS கணக்கைத் திறக்க, தனிநபர் குறைந்தபட்சம் 60 வயதுடையவராக இருக்க வேண்டும். ஆனால் 55 முதல் 60 வயதுக்குட்பட்ட விருப்ப ஓய்வு அல்லது சிறப்பு VRS பெற்ற நபர்களும் SCSS திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். ஓய்வுபெற்ற பாதுகாப்புப் பணியாளர்கள் 50 வயதிலிருந்து சில நிபந்தனைகளின் கீழ் SCSS கணக்கைத் தொடங்கலாம். ஆனால் இது சிவில் பாதுகாப்பு ஊழியர்களுக்குக் கிடைக்காது. SCSS திட்டத்தில் கூட்டுக் கணக்கையும் தொடங்கலாம், ஆனால் டெபாசிட் செய்யப்பட்ட முழுத் தொகையும் முதன்மைக் கணக்கு வைத்திருப்பவருக்குச் சொந்தமானது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட கணக்கை எவ்வாறு திறப்பது?: மூத்த குடிமக்கள் வங்கி அல்லது தபால் அலுவலகத்திலும் SCSS கணக்கைத் திறக்கலாம். கணக்கைத் திறக்க, குறைந்தபட்சம் ரூ. 1,000 முதல் தொடங்கலாம். அதிகபட்சம் ரூ. 30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்யலாம். கூடுதல் டெபாசிட் அனுமதிக்கப்படாது. அதேபோல பலமுறை தொகையை திரும்பப் பெறவும் முடியாது.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வரி நன்மைகள்: SCSS திட்டத்தில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற தகுதியுடையவை. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம்: 2024-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் SCSS-க்கான வட்டி விகிதம் 8.2 சதவீதமாக உள்ளது. நடப்பு காலாண்டின் கடைசி நாளிலோ அல்லது புதிய காலாண்டின் முதல் வேலை நாளிலோ வட்டி வழங்கப்படும். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் காலம்: SCSS கணக்கு திறக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது. கணக்கு வைத்திருப்பவர்கள் கூடுதலாக 3 ஆண்டுகளுக்கு கணக்கை நீட்டிக்க விருப்பம் உள்ளது. குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் கணக்கை முன்கூட்டியே மூடுவதும் அனுமதிக்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் வருமானம்: தற்போது, SCSS திட்டத்திற்கு 8.2 சதவீத வருடாந்திர வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அப்படியானால் ரூ. 30 லட்சம் அதிகபட்ச முதலீட்டுக்கு, ரூ. 2.46 லட்சம் வருடாந்திர வட்டி கிடைக்கும், இது ரூ. 20,000 மாத வருமானத்திற்கு சமம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் பாதுகாப்பான மற்றும் அதிக வருமானம் ஈட்டும் முதலீட்டை விரும்பும் மூத்த குடிமக்களுக்கு சிறந்த தேர்வாகும். 30 லட்சம் ரூபாயை மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்கள் உங்களுக்கு ஏற்ற தொகையை முதலீடு செய்யலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் 20,000 வருமானம் பெறுவதற்கான ஐடியா மட்டுமே. உங்களுக்கு எவ்வளவு தொகை டெபாசிட் செய்ய முடியுமோ அவற்றை டெபாசிட் செய்து நீங்கள் வருமானம் பெறலாம். அதற்கு SCSS கால்குலேட்டர்களை பயன்படுத்தலாம். மேலே கூறப்பட்டுள்ள விவரங்களை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. எனவே முதலீடு செய்வதற்கு முன்பு தக்க ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பெயரில் முதலீடு செய்யவும்
0
Leave a Reply