‘Coffee With Collector” என்ற 86-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (24.07.2024) சாத்தூர் சன் இந்தியா மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 40 பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களின் திறமைகளை பாராட்டும் விதமாகவும் நடைபெற்ற ‘‘Coffee With Collector” என்ற 86-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் உள்ள அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி,பொதுஅறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மாணவ, மாணவியர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 86-வது முறையாக பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடல் நிகழ்;ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது,அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்ற பல்வேறு காரணங்கள் வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு இந்த காரணங்கள் ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களுடைய லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்களுக்கு பிடித்த விளையாட்டு, வீரர்கள், அவர்களுடைய பொழுதுபோக்கு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மாணவர்களும் தங்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மருத்துவம், வழக்கறிஞர், தொழிலதிபர், விளையாட்டு வீரர், இசையமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படிப்பதற்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது, இப்பொழுது உள்ள சூழ்நிலையில் உங்கள் பெற்றோர்களை காட்டிலும் உங்களுக்கு வாழ்க்கையில் படிப்பதற்கும், உங்கள் இலக்கு, ஆசை, இலட்சியத்தை அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும், அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும், உங்கள் இலட்சியத்தை அடைவதற்கு உங்களுடைய பின்புலமோ, ஏழையா, வசதி படைத்தவரா,நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பது முக்கியமில்லை, நீங்கள் எங்கு போய் சேர்கீர்கள், உங்கள் இலட்சியத்தை எவ்வாறு அடைகிறீர்கள் என்பதுதான் முக்கியம். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். எனவே, வாழ்க்கையில் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் கடினமாக உழைத்தால் வாழ்வில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். வாழ்க்கையில் தோல்வி என்ற ஒன்றை சந்திக்காமல் சாதித்த மனிதரே இங்கே யாரும் இருக்க முடியாது. எனவே வாழ்வில் தோல்வியோ, கஷ்டமோ வரும் போது அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும்.வாழ்க்கையில் தொடர்ந்து நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், இது உங்களை முழுமைபடுத்தும் என்றும், இந்த திறமைகளை கொண்டு பல நபர்களுக்கு உதவ முடியும் என்றும் கூறினார்.
0
Leave a Reply