சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மற்றும் வாக்குச் சாவடிகளை மறுசீரமைத்தல் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்ட அளவிலான பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் .
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மற்றும் வாக்குச் சாவடிகளை மறுசீரமைத்தல் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்ட அளவிலான பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.01.01.2026 தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளைத் தொடங்க இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இதன் ஒரு கட்டமாக வாக்குச் சாவடிகளை மறுசீரமைத்தல் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இதுவரை ஒரு வாக்குச் சாவடியில் 1500 வாக்காளர்கள் வரை இருக்கலாம் என்ற வரம்பினை தற்போது குறைத்து, எந்தவொரு வாக்குச் சாவடியிலும் 1200 வாக்காளர்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும் என ஆணையம் மாற்றி அமைத்துள்ளது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரும் அச்சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி அதற்கான பரிந்துரைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளனர்.
இதன் அடிப்படையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்ட அளவிலான பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.மேலும், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், வட்டாட்சியர்கள், மாநகராட்சிஃநகராட்சி ஆணையர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை 1901 வாக்குச் சாவடிகள் உள்ள நிலையில் தற்போது மறுசீரமைப்பு செய்ய உத்தேசித்துள்ள அடிப்படையில்; கூடுதலாக 98 வாக்குச்சாவடிகள் உருவாக்கம் செய்ய பரிந்துரைகள் வரப்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
போதிய அவகாசம் அளித்து வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தெரிவித்தனர். இதற்கு மாவட்ட ஆட்சியர், எந்தவொரு தகுதியான வாக்காளரும் விடுபடாமலும், தகுதியற்ற ஒருவரது பெயர், வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வகையிலும் இப்பணிகள் நடைபெறும் என்று தெரிவித்ததுடன், வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்து, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை துரிதமாகவும், சரியான முறையிலும் மேற்கொள்வதற்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளைக் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
0
Leave a Reply