ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு பதக்க வேட்டை.
ஜப்பானின் அய்ச்சி மாகாணம் நகோயாவில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பளுதூக்குதல்.
பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு களமிறங்கினார்.
முதலில் நடைபெற்ற ‘ஸ்னாட்ச்’ பிரிவில், மூன்றாவது முயற்சியில் அதிகபட்சமாக 87 கிலோ எடையைத் தூக்கினார். தொடர்ந்து ‘க்ளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில், இரண்டாவது முயற்சியில் 111 கிலோ எடையைத் தூக்கினார்.
இரண்டாவது இடம் உறுதியானதைத் தொடர்ந்து, மூன்றாவது முயற்சியை அவர் பயன்படுத்தவில்லை. மொத்தமாக 198 கிலோ எடையைத் தூக்கிய மீராபாய் சானு, வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
பேட்மிண்டன்.
ஆண்கள் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்–சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் வெய்கெங்–சாங் வாங் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் இந்திய ஜோடி 21-11, 22-20 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் போட்டியின் ஸ்கோர் 1-1 என சமநிலைக்கு வந்தது. இருப்பினும், இறுதியில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.
துப்பாக்கிச் சுடுதல்.
ஆண்களுக்கான ‘ஸ்கீட்’ பிரிவு தகுதிச்சுற்று நடைபெற்றது. இந்தியா சார்பில் பங்கேற்ற அனன்ஜீத் சிங் 119 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்களுக்கான ‘ஸ்கீட்’ பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரைசா தில் லான் மற்றும் பரினாஸ் தலா 111 புள்ளிகள் பெற்று 8 மற்றும் 9-வது இடங்களைப் பிடித்து இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். மகேஷ்வரி 109 புள்ளிகளுடன் 12-வது இடத்தைப் பிடித்தார்.
தகுதிச்சுற்றில் இந்தியாவின் மூன்று வீராங்கனைகளும் இணைந்து 331 புள்ளிகளைப் பெற்றதால், இந்திய பெண்கள் அணி 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றது.
சாப்ட் டென்னிஸ்.
ஆண்கள் ஒற்றையர் சாப்ட் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் ஜெய் மீனா, பிலிப்பைன்ஸ் வீரர் ஷெர்வினை எதிர்கொண்டார்.
முதல் கேமை 0-4 என இழந்த ஜெய், அடுத்த கேமை 4-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். மூன்றாவது கேமை 2-4 என நழுவவிட்ட அவர், அடுத்த இரு கேம்களையும் 4-2, 5-3 என்ற கணக்கில் வென்றார்.
முடிவில் ஜெய் மீனா 4-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் ஆசிய விளையாட்டு சாப்ட் டென்னிஸ் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
டேபிள் டென்னிஸ்.
டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் நடைபெற்ற ‘ரவுண்ட் ஆஃப் 16’ போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்–யாஷஸ் வினி ஜோடி, ஹாங்காங்கின் குவான் டோ–விங் லாம் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் இந்திய ஜோடி 3-1 என்ற கணக்கில் (11-6, 11-5, 10-12, 11-7) வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
ஹாக்கி.
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டில் பெண்கள் ஹாக்கி ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, தாய்லாந்து அணிகள் மோதின.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, தாய்லாந்தை 20-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதற்கு முன்பு உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா அணிகளை வீழ்த்திய இந்தியா, தொடர்ந்து 3-வது வெற்றியைப் பதிவு செய்தது.
இந்தப் போட்டியில் 9 கோல்கள் அடித்த இந்திய வீராங்கனை தீபிகா, சர்வதேச ஹாக்கி அரங்கில் ஒரே போட்டியில் 9 கோல்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். கடந்த 3 போட்டிகளில் மட்டும் அவர் 20 கோல்கள் அடித்துள்ளார்.
0
Leave a Reply