25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


குட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்புக் கலை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்புக் கலை

 போன்சாய் என்னும் குட்டைச் செடிகளின் வளர்ப்புக் கலையானது ஜப்பானில் 13 – ஆம் நூற்றாண்டில் தோன்றி இன்று உலகமெங்கும் பரவிக் காணப்படுகிறது. ஜப்பானிய மொழியில் “போன்” என்றால் “ஆழமற்ற தட்டுகள்” என்னும் “சாய்” என்றால் “செடிகள்” என்றும் பொருள்படும். மற்றும் போன்சாய் கலை மூலம் 100 முதல் 200 வயதான மரங்களையோ, செடிகளையோ கூட தொட்டிகளில் வளர்க்க முடியும். பொதுவாக போன்சாய் செடிகளின் வயது கூடும் போது, விலை மதிப்பு கூடிக்கொண்டே போகிறது.நகர மக்களின் செடி மற்றும் மரம் வளர்க்கும் ஆவலை போன்சாய் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம். செடிகளை வளர்ப்பதற்கு போதிய இடவசதி இவர்களுக்கு இல்லை. குறுகிய இடங்களிலேயே ஓரளவு முயற்சி செய்தாலே போன்சாய் செடிகளை வளர்க்கலாம். வீட்டு மாடிகளிலும் இவற்றை வைத்துப் பராமரிக்கலாம். வரவேற்பு அறைகளில் வைப்பதற்கு உகந்த அழகிய பூக்கும் மரங்களையும், பூஜை அறையில் வைப்பதற்கு ஏற்ற ஆழ் மற்றும் வேல் போன்ற மரங்களையும், சாப்பாட்டு அறையில் விரும்பி வைக்கப்படும் அழகிய பூக்கும் சிறு மற்றும் பெரு மரங்களையும் இந்தக் குட்டைச் செடிகள் வளர்ப்புக் கலையின் மூலம் எளிதாகப் பராமரிக்கலாம். மேலை நாடுகளில் இருப்பது போன்று நமது நாட்டிலும் முக்கிய நகரங்களில் போன்சாய் வளர்ப்போர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அழகுக் கலையாகத் தோன்றி போன்சாய் கலையானது இன்று வணிக ரீதியாக வருமானம் கொடுக்கும் தொழிலாகவும் மாறி வருகின்றது. 


பாறை வெடிப்புகளிலும் பாழடைந்த கட்டிடங்களின் சுவர்களிலும் இயற்கையாக வளரும் செடிகள் இயல்பாகவே குட்டையாகக் காணப்படும். இது போன்ற செடிகளின் குட்டைத் தன்மையை எளிதாகப் பயன்படுத்தி போன்சாய் செடிகளாக மாற்றி விடலாம். மேலும் நாற்றுப் பண்ணைகளில் தொட்டிகளில் நீண்ட நாட்கள் விற்பனையாகாமல் வைக்கப்பட்டிருக்கும் செடிகளும் குட்டையாக வளர்ந்து, முதிர்ந்து காணப்படும். இது போன்று குட்டையாக வளரும் செடிகளை சேகரித்து போன்சாய் கலைக்குப் பயன்படுத்த வேண்டும்.பொதுவாக சிறிய, குறுகலான இலையுதிராத தன்மை கொண்ட மரம் மற்றும் செடி வகைகளே போன்சாய்க்கு மிகவும் உகந்தவை. கனிகள் மற்றும் மலர்கள் கொடுக்கும் மரங்கள் மற்றும் செடிகளை போன்சாய் செய்யும் போது அழகும், மதிப்பும் கூடுதலாக இருக்கின்றன. பழமரங்களில் மாதுளை, சப்போட்டா, ஆரஞ்சு, அத்தி, புளி ஆகியனவும், பாலைவன ரோசா, போகன்வில்லா, குல்மாகர் ஆகிய தாவரங்களும் , வேம்பு, இலுப்பை, வாகை, ஆல், அரச மரம், புங்கம் ஆகிய மரங்களும் பைன், ஜப்பான் டேபிள், பீச், ஆப்ரிகாட், ரோடா டெண்டிரான், சைப்ரஸ் ஆகிய பிரதேச மரவகைகளும் போன்சாய் கலைக்கு மிகவும் ஏற்றவை.


செடி வெட்டும் கத்திரி, அலுமினியம் மற்றும் தாமிரக் கம்பி, கம்பி வெட்டும் கத்தி, குறடு, மண் அள்ளும் கரண்டி போன்ற கருவிகள் போன்சாய் வளர்ப்பில் பெரிதும் பயன்படுவனவாகும். பல்வேறான ஆழமில்லாத பூந்தொட்டிகள் போன்சரய் வளர்ப்புக்குத் தேவைப்படுகின்றன.போன்சாய் வளர்ப்புக்குத் தேவையான பொருத்தமான தொட்டிகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானதாகும். செடிகளின் வடிவங்களுக்கேற்ப முக்கோணம், செவ்வகம், வட்டம், நீண்ட வட்டம் போன்ற வடிவுள்ள ஆழமற்ற தொட்டிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் தொட்டிகளின் உயரம் 15 செ.மீ க்கு மிகாமல் இருக்க வேண்டும். போன்சாய் செடிகளின் வண்ணத்தோடு ஒத்துப்போகும் வகையில் நீலம், கெட்டிப் பச்சை,கரும் பழுப்பு போன்ற நிறமுடன் கூடிய தொட்டிகளையே பயன்படுத்த வேண்டும் அல்லது தேவையான வடிவமுள்ள மண்தொட்டிக்கு பொருத்தமான வர்ணம் பூசியும் இதற்குப் பயன்படுத்தலாம்.போன்சாய் வளர்ப்புக்குத் தொட்டிகளின் அடிமட்டத்தில் உள்ள துளையில் கம்பி வலை அல்லது உடைந்த மண்தொட்டி துண்டு கொண்டு அமைத்து அதிகப்படியான நீர் மட்டும் வெளியேறுமாறு வைக்க வேண்டும். தொட்டிகளில் முதலில் ஒரு வரிசை சிறிய உடைந்த செங்கல் துண்டுகளை வைத்து அதன் மேல் மண் இருபாகம் , மக்கிய சாணம் ஒரு பாகம் மற்றும் இலை மட்கு ஒரு பாகம் என்ற அளவில் கலந்து நிரப்ப வேண்டும். தொட்டி கலவை நிரப்பிய பின்னர் இத்தகைய தொட்டிகளின் செடியை மாற்றி நட வேண்டும். செங்கல், கருங்கல் துண்டுகள் போன்றவற்றையும் எடுத்து நடுவில் போதிய அளவு தோண்டிய பின்னர் மண் கலவை நிரப்பியும் போன்சாய் செடிகளை வளர்க்கலாம்.


போன்சாய் செடிகளைப் பல்வேறு வடிவங்களில் வளர்க்கலாம். குடை வடிவம், சாய்ந்த வடிவம், நீர் வீழ்ச்சி வடிவம், ‘எஸ்’ போன்ற ஆங்கில எழுத்து போன்ற வடிவம் ஆகியவை இவற்றுள் அடங்கும். போன்சாய் மரச் செடிகளைத் தனி மரமாகவும், இயற்கைக் காடுகள் போன்று திட்டமாகவும் வளர்க்கலாம். குடை போன்ற வடிவத்தில் செடிகளைப் பயிற்சி செய்வதற்குக் கிளைகளின் நுனிப் பகுதியில் சிறிய கற்களைக் கட்டித் தொங்க விட வேண்டும். தேவையான வடிவங்களை உருவாக்க தாமிரம் அல்லது அலுமினியக் கம்பிகளைக் கொண்டு கிளைகள் மீது சுற்றி ஏற்ற வடிவங்களில் கிளைகளை மாற்றலாம். சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை கம்பிகளை அப்படியே விட்டு வைத்துப் பின்னர் அகற்றி விட வேண்டும். அப்போது கிளைகள் அந்த வடிவத்திலேயே இருக்கும்.செடிகளை மிகவும் குட்டையாக வளர்ப்பது மிகவும் முக்கியமானதாகும். வளரும் நுனிகளை வாரத்திற்கொருமுறை கிள்ளி விடுவதன் மூலம் உயரம் இரண்டு அடிக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வளர்ச்சிக் குறைப்பான்களான சைக்கோசெல் அல்லது பி.ஏ போன்ற இரசாயனங்களை லிட்டருக்கு 4 மிலி என்ற அளவில் கலந்து தெளிப்பதன் மூலமும் செடிகளைக் குட்டையாக்க முடியும். மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கொருமுறை செடிகளை புதிய தொட்டிகளில் மாற்ற வேண்டும். தொட்டிகளை மாற்றுவதை சூன் – சூலை மாதங்களிலேயே செய்ய வேண்டும். இது சமயம் கூடுதலாக வளர்ந்துள்ள மற்றும் காய்ந்து போன வேர்கள், கிளைகள் அனைத்தையும் வெட்டி அகற்றி விடுதல் வேண்டும்.


போன்சாய் செடிகளுக்கு போன்சாய் வளர்ப்புக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உரக்கலவைகளையே பயன்படுத்த வேண்டும். போன்சாய் செடிகள் மிகவும் சிறிய தொட்டிகளில் வளர்க்கப்படுவதால் மாதம் ஒரு முறை கடலை பிண்ணாக்கு மற்றும் வேப்பம் பிண்ணாக்கை ஊற வைத்த கரைசலை ஊற்ற வேண்டும். புதிய தொட்டிகளில் மாற்றிய ஒரு மாதம் வரை எந்த விதமான இரசாயன உரமும் இடக்கூடாது. கோடையில் தினம் இருமுறையும் இதர பருவங்களில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இடைவெளியிலும் தேவைக்கேற்ப நீர் விட வேண்டும்.                             

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News