மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 6 இலக்குகளை முழுமையாக அடைவதற்கான முழு நிறைவுத் திட்டம் குறித்த ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாம்
விருதுநகர் தங்கச்சி அம்மன் திருமண மண்டபத்தில், மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 6 இலக்குகளை முழுமையாக அடைவதற்கான முழு நிறைவுத் திட்டம் குறித்த ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில் (03.10.2024) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் 3 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மொத்தம் ரூ.3 இலட்சம் கடனுதவிகளையும், மருத்துவத்துறை சார்பில் 15 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், வேளாண்மைத்துறை மூலம் 9 பயனாளிகளுக்கு மண்வள அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்திய அரசினுடைய நிதி ஆயோக் அமைப்பின் மூலம் முன்னேற விழையும் மாவட்டம் மற்றும் முன்னேற விழையும் வட்டாரம் திட்டத்தின் கீழ் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்னேற விழையும் மாவட்டம் மற்றும் முழு நிறைவுத் திட்டத்தின் கீழ் வளரிளம் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோர்களுக்கான ஊட்டச்சத்து உணவுகளை வழங்குவதற்கு முயற்சி எடுத்து பிரசவத்தின் போது ஏற்படும் மரணங்களை தவிர்த்து நல்லமுறையில் குழந்தைப்பேறு அடைந்து தாயும் சேயும் நலமாக இருக்க சீரிய முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
விவசாயிகளுக்கு அவர்களுடைய வாழ்வாதாரம், விவசாயிகள் அதிகமாக உற்பத்தியைப் பெருக்குதல், புதிய பயிர்களை விளைவிப்பதன் மூலமாக விவசாயிகளுடைய வருமானத்தை பெருக்குவது, பெண்கள் சிறு தொழில்களை செய்வதன் மூலமாக, குறிப்பாக கடன் உதவிகளை பெற்று அவர்கள் பகுதியிலேயே சிறிய தொழில்களை தொடங்குவதன் மூலமாக பொருளாதார வாய்ப்புகளை பெறுதல் இதன் நோக்கமாகும்.இது தொடர்பாக முழு நிறைவுத் திட்டத்தின் கீழ் விவசாயம், கல்வி, மருத்துவம், சுகாதாரம், ஊட்டச்சத்து, மகளிர் மேம்பாடு ஆகிய துறைகள் தொடர்புடைய குறிப்பிட்ட ஆறு குறியீடுகளுக்கான 100 சதவிகித இலக்கினை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய மாநில திட்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்து அனைத்து தரப்பு மக்கள், பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் மாணவர்கள் என மக்களினுடைய நலனுக்காக திட்டங்களை எல்லாம் முழுமையாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.இந்த திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் மக்கள் பங்கேற்பும் இருக்க வேண்டும். கருவுற்ற மூன்று மாதங்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். ஏனென்றால் மூன்று மாதத்துக்குள் பதிவு செய்யும் பொழுது தான் அவர்களிடத்தில் இருக்கக்கூடிய ஹீமோகுளோபின் அளவு, ஊட்டச்சத்து குறைபாடுகள் என அனைத்தையும் சரி செய்து, பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல்களை சரிசெய்ய முடியும்.
பெண் குழந்தைகளுக்கு இரத்த சோகை தவிர்க்கும் வகையில், அவர்களுக்கான ஊட்டச்சத்துக்களை உறுதி செய்ய வேண்டும். இரும்புச்சத்து குறைபாடுகள் இருப்பின், முறையாக கண்டறிந்து, அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.18 வயது முன்பாக குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி தவறாகும். அப்படி திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீதும், திருமணம் செய்து கொண்ட ஆணின் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எனவே, குழந்தை திருமணத்தை அனைத்து பெற்றோர்களும் தவிர்க்க வேண்டும். அவ்வாறு கண்டறியப்பட்டால் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விவசாயிகள் மண் பரிசோதனை செய்து, அதற்கு ஏற்றாற்போல் பயிர் செய்ய வேண்டும். மண்ணின் தன்மை, சத்துக்களுக்கு ஏற்ப உரம் இட வேண்டும். இதனால் மகசூல் அதிகமாக கிடைக்கிறது. எனவே, விவசாயிகள் அனைவரும் வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம்.நமது பகுதியில் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன. அந்த சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி அரசு வழங்குகிறது. அந்த நிதியை பெற்று அதன் மூலம் தொழில் செய்து, தங்கள் பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்காக பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இது போன்ற ஒவ்வொரு துறைகளுக்கும் இலக்குகள் உள்ளன. இந்த இலக்குகளை அடைந்த மாவட்டம் மற்றும் வட்டாரமாக விருதுநகர் மாவட்டம் உருவாக வேண்டுமென்றால், இது குறித்து அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு தான் இந்த முழு நிறைவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இந்த திட்டங்களினுடைய பயன்கள் ஏழை, எளிய பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டுமென்றால், முதலில் அது குறித்த புரிதல், விழிப்புணர்வு மிகவும் அவசியம். இவற்றை முறையாக அரசு அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.மேலும், விவசாயம், மருத்துவம் மற்றும் சுகாதாரம், ஊட்டச்சத்து, மகளிர் மேம்பாடு ஆகிய துறைகள் சார்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
0
Leave a Reply