தந்தையின் சொத்தில் மகளுக்கு சமபங்கு உள்ளது. சட்டம் சொல்வது என்ன?
தந்தையின் சொத்தில் சமபங்கு உள்ளது என 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசு சட்டத்தின் கீழ் சட்டபூர்வ உரிமை உறுதி செய்யப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் இன்னும் வாரிசுரிமை அடிப்படையில் ஆண் மற்றும் பெண்களுக்கான பாகுபாடுகள் சில குடும்பங்களில் நீடிக்கத் தான் செய்கிறது. சில பெற்றோர்கள் சொத்து என்று வரும்போது மகள்களை விட மகன்களை தான் அதிகம் ஆதரிக்கின்றனர். என்னதான், சட்டங்கள் சமபங்கு என்று சொன்னாலும், பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு திருமண செலவுகளை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்கள் சொத்து என்று வரும் பட்சத்தில் மகன்களுக்கே அதிக கவனம் செலுத்துகின்றனர். இது போன்ற சில விஷயங்கள், இன்னும் பல குடும்பங்களில் வேரூன்றி உள்ளது எனலாம்.
இதனால் இந்தியாவில் இருக்கும் பல பெண்கள் தங்களது தந்தையின் சொத்துக்களில் தங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று நம்பிக் கொண்டு இருக்கின்றனர். இதற்கான முக்கிய காரணம் தங்களது தந்தையின் சொத்துகளில் சமமான உரிமை உள்ளது என்பதை கூறும் சட்டம் பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் மகள்களுக்கு என பிரத்தியேக சட்டங்கள் உள்ளன. ஆனால் அதை பற்றி தெரியாத சிலர் தங்களுக்கு சொத்தில் பங்கு இல்லை என இன்றளவும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில், 2005 ஆம் ஆண்டில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் தனது தந்தையின் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை உண்டு என சட்ட பூர்வ உரிமையை வழங்கியது. இந்த சட்டத்தின்படி மகன்களைப் போலவே மகள்களும் தங்களது தகப்பனின் சொத்துகளுக்கு உரிமை கோர முடியும் என திருத்தம் செய்யப்பட்டது.
எப்போது மகள்களால் தந்தையின் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது?: இப்பொழுது தந்தை தனது சொந்த முயற்சியால் வீடு மற்றும் நிலங்களை வாங்கி வைத்திருக்கும் பட்சத்தில், அவர் தானாக முன்வந்து தனது மகளுக்கோ அல்லது மகனுக்கோ அதனை எழுதி வைக்க சட்டபூர்வமான சட்டங்கள் உண்டு. ஆனால் அதனை அவர் எழுதி வைக்க மறுத்து தனது மகனுக்கே எழுதி வைக்கும் பட்சத்தில், அந்த மகளால் அவரை எதிர்த்து நடவடிக்கை எடுக்க முடியாது. 2005 ஆம் ஆண்டிற்கும் முன் தனது தந்தையின் மூதாதையர்கள் சொத்தில் மகன்களைப் போலவே மகள்களுக்கும் சம உரிமை உண்டு என்ற சட்டம் இல்லை. அது திருமணமான பெண்கள் ஆனாலும் சரி திருமணம் ஆகாத பெண்கள் ஆனாலும் சரி. ஆனால் 2005 ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்ட இந்து வாரிசு சட்டத்தில் மகன்களைப் போலவே மகள்களுக்கும் சமமான உரிமை உண்டு என திருத்தம் செய்யப்பட்டது. இதனால் திருமணத்திற்கு பிறகும் தங்களது தந்தையின் சொத்துகளில் மகள்களால் உரிமைக் கோர முடியும்.
0
Leave a Reply