ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்
ஆனந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக மதுரையைச் சேர்ந்த திரு. சிவகுமார் கணேசன் அவர்கள் கலந்து கொண்டார். பள்ளி தாளாளர் திருமதி இரா. ஆனந்தி அவர்கள் முன்னிலை வகிக்க பள்ளி முதல்வர் திரு.கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். தாளாளர் திருமதி. ஆனந்தி அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவம் செய்தார்.
எழுத்தாளர், இயற்கை ஆர்வலர் , புகைப்படக் கலைஞர் என பன்முகத்தன்மை கொண்ட திரு.சிவகுமார் கணேசன் அவர்கள் மாணவர்களை அய்யனார் கோவில் சாலையில் அமைந்துள்ள வலக்கட்டு கருப்பசாமி கோவில் முதல் இராஜபாளையம் ஆறாம் மைல் நீர்த்தேக்கம் வரை அழைத்துச் சென்றார். அங்கு பறவை கவனித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மீன்கொத்தி, பனங்காடை, சின்னான், தையல்சிட்டு, வானம்பாடி, அடைக்கல குருவி, உண்ணிக் கொக்கு, தேன்சிட்டு, நீர்க்காகம், கரிச்சான் குருவி, கிளி, பறந்து, மணிப்புறா, கருப்பு-வெள்ளை புதர் சிட்டு, கருப்புவெள்ளை மீன்கொத்தி, பஞ்சுருட்டான் போன்ற பறவைகளை மாணவர்களுக்கு காண்பித்தார். மாணவர்களும் அதை மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து அவர்களுக்கு உண்டான ஐயங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டனர். காலை 6.30 மணி அளவில் தொடங்கி 9 மணி அளவில் முடிந்த இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக திரு சிவகுமார் கணேசன் அவர்கள் தான் கண்டு ரசித்த பல வகையான பறவைகளின் புகைப்படங்களை காணொலி மூலம் போட்டுக் காண்பித்தார். அதில் கரிச்சான், சுடலை குயில், பெரிய கொக்கு, நீர்க்காகம், கிளிகள், குயில், வைரி, தென்துருவ சின்னான், பெரிய மீன் கொத்தி,கதிர்க்குருவி, சிவப்பு மூக்கு ஆள்காட்டி, குக்குறுவான், கொத்தி நாரை போன்ற பறவைகளின் புகைப்படங்களை காண்பித்தார். மேலும் பறவைகள் அடிக்கடி தன் இறகுகளை விரித்து தன் அழகால் அடிக்கடி வருடி விடுகின்றன. அது ஏன் என்று தெரியுமா என வினா எழுப்பி அவர் கூறியதாவது பறவைகளின் வால் பகுதியில் கொழுப்பு போன்ற ஒரு பிசின் உள்ளது அதனை தன் அலகுகளால் எடுத்து இரவுகளின் மீது வீசுகிறது. இதைச் செய்வதன் மூலம் தன் இறகுகளை அது பாதுகாத்துக் கொள்கிறது மற்றும் அது சீராக பறப்பதற்கு உதவுகிறது என கூறினார். இதுபோன்று பறவைகளைப் பற்றி பல தகவல்களை கூறி மாணவர்களின் மனதில் பறவை கவனித்தல் ஆர்வத்தை ஏற்படுத்தினார்.
0
Leave a Reply