செஸ் ஒலிம்பியாட் 4வது சுற்றில் இந்திய அணிகள் வெற்றி பெற்றன.
ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் செஸ் ஒலிம்பியாட் தொடர் 45வது சீசன் நடக்கிறது. ஓபன் பிரிவு நான்காவது சுற்றில் இந்திய ஆண்கள் அணி, செர்பியாவை எதிர்கொண்டது. முதல் போட்டியில் இந்தியாவின் குகேஷ், செர்பியாவின் அலெக்சாண்டர் பிரெட்கே மோதினர். குகேஷ், 85வது நகர்த்தலில் வென்றார்.
இந்தியாவின் பிரக்ஞானந்தா, செர்பியாவின் அலெக்ஸி சரணா மோதிய மற்றொரு போட்டி 23வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்ற போட்டிகளில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி வெற்றி பெற்றனர். முடிவில் இந்திய அணி 3.5- 0.5 என்ற கணக்கில் வரிசையாக 4வது வெற்றியை பதிவு செய்தது. நான்கு சுற்றுகளின் முடிவில் இந்திய அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
பெண்களுக்கான நான்காவது சுற்றில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின. முதல் போட்டியில் இந்தியாவின் ஹரிகா, பிரான்சின் டாலிட்-கார்னெட் டீமான்டே மோதினர் வெள்ளை நிற காய்களுடன் சாமர்த்தியமாக விளையாடிய ஹரிகா, 52வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்தியாவின் வைஷாலி, பிரான்சின் மில்லியட் சோபி மோதிய மற்றொரு போட்டி, 26வது நகர்த்தலின் போது 'டிரா' ஆனது.மற்ற போட்டிகளில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், தனியா சச்தேவ் வெற்றி பெற்றனர். முடிவில் இந்திய அணி 3.5-0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி 8 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறியது.
0
Leave a Reply