M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது
எழுத்தாளர் பாவண்ணன் அவர்களுக்கு 01.09.2024 ஞாயிறு மாலை இராஜபாளையம் P. S.K. ருக்மணி அம்மாள் கலையரங்கில் வாழ்நாள் சாதனையாளர் விருது 2024 வழங்கப்பட்டது.அன்புத் தோழி கவிஞர் ஆனந்தி Bhimaraja Anandhi அவர்களின் நாற்று அமைப்பிலிருந்து இந்த நிகழ்வினை மிகவும் சிறப்புற நடத்தினார்கள்.தனது தம்பி M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக ஒவ்வொரு வருடமும் ஒரு ஆளுமைக்கு இந்த விருதினை ஆனந்தி வழங்கி வருகிறார்.
ஒவ்வொரு முறையும் நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த முறையும் கலந்துகொள்ள இயலாதபடி ஒரு நாள் முழுக்க காய்ச்சல் வாட்டியது. நின்று பேசிவிட முடியுமா என்னும் தயக்கம் இருந்தது. முதல் நாள் இரவும், நிகழ்வு நாளிலும் மாத்திரை எடுத்துக்கொண்டு சென்றேன்.உள்ளே நுழையும் போதே, முழுக்க நனைக்காத, பன்னீர் தெளித்தது போலவே சின்ன தூறல் வரவேற்றது. காற்றினிலே வரும் கீதம் பாடல் பாடி நிகழ்வினை ஆரம்பிக்க ஒரு ஒருமுகப்படுத்தும் மனநிலைக்கு அழைத்துச் சென்றார் பாடகி சுபா.
சிறப்புற வரவேற்புரை அளித்த ஆனந்தியைத் தொடர்ந்து எழுத்தாளர் கவிஞர் கலாப்ரியா அவர்கள் நிறைவான தலைமையுரை அளித்தார்.எழுத்தாளர் நரேந்திர குமார் அவர்கள் மிகவும் பொருத்தமானஅறிமுக உரை அளித்தார். எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களின் வருகை நிகழ்வினை மெருகூட்டியது. அவரும் அன்பு நண்பர் சண்முக சுந்தரம் அவர்களும் வந்திருந்தனர்.எழுத்தாளர் வண்ணதாசன், கொ. மா. கோதண்டம், ராஜேஸ்வரி கோதண்டம், பாவண்ணன் அவர்களின் மனைவி அமுதா மேடையில் இருக்க விருது வழங்கப்பட்டது.
விமர்சகர் சுதா, பாவண்ணன் படைப்பினை வாசித்த அனுபவத்தைப் நிதானமாக நமக்குள் கடத்த, மதுமிதா வாழ்த்துரையில் கதைசொல்லியாக பாவண்ணன் அவர்களின் ஒரு கதையையும் சொல்லி முடித்தார்.எழுத்தாளர் கன்யூட் ராஜ் அவர்களின் கச்சிதமான வாழ்த்துரை முடிந்ததும், எழுத்தாளர் பாவண்ணன் மிகவும் நெகிழ்வான மனநிலையில் அற்புதமான ஏற்புரை அளித்தார். அனைவரும் அந்த மன நிலையில் இருக்க, அன்புப் பரிசு வழங்குதல் முடிந்தது.நிகழ்வினை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கிய தோழி ரமணி நன்றியுரை அளித்தார். தேசிய கீதத்துடன் நிகழ்வு முடிந்தது.
எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களை அவரது தந்தையுடன் இணைந்த சித்திரமாக வரைந்த அந்தச் சிறுவன் சிறந்த ஓவியனாக மலரும் எதிர்காலம் அந்த சித்திரத்தில் மலர்ந்திருந்தது.அன்புத் தோழி எழுத்தாளர் கலாப்ரியாவின் மனைவி எங்கள் அன்பு ஆசிரியையை சந்தித்ததில் மகிழ்ச்சி.கலை இலக்கிய பெருமன்றம், தமுஎச மன்ற உறுப்பினர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள், தோழிகள், உறவினர்கள் என அரங்கு நிறைந்திருந்தது. அனைவரையும் சந்தித்த மகிழ்வு மனதை நிறைத்தது.
அனைவரும் நிகழ்வு முடிந்த பிறகும் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக அங்கே இருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு விடைபெற்றோம்.அன்பு மக்களை சந்திக்கும் வகையில், அன்பில் நிறைந்த ஒரு இனிய மாலையை பரிசளித்த அன்புத் தோழி ஆனந்திக்கு அன்பும் நன்றியும் .
நாற்று நிறைவு.
0
Leave a Reply