சொந்த வீடா? வாடகை வீடா?..
பொதுவாகவே சொந்தவீடு வாங்குவதா? அல்லது வாடகை வீட்டிலேயே இருப்பதா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் எழுவது உண்டு. இந்த சந்தேகத்துக்கு தீர்வு அளிக்கும் வகையில் தி பாம்பே ஷேவின் கம்பெனியின் (The Bombay Shaving Company) தலைமை செயல் அதிகாரியான சாந்தனு தேஷ்பாண்டே தன்னுடைய பாட்கேஸ்ட்டில் விளக்கம் தந்துள்ளார். சாந்தனு தேஷ்பாண்டே, தற்போது குருகிராம் பகுதியில் பிரதான இடத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இதற்காக இவர் செலுத்தும் மாதாந்திர வாடகை மட்டும் 1.50 லட்சம் ரூபாய் ஆகும்.
பெரிய நிறுவனத்தை நடத்தி வரக்கூடிய நபர் ஏன் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருக்கிறார் அதுவும் 1.50 லட்சம் ரூபாய் வாடகை செலுத்துகிறாரே என்ற சந்தேகம் எழலாம். அதற்கு அவரே விரிவான பதிலையும் அளித்துள்ளார். ஹைதராபாத் அடிப்படையாகக் கொண்ட ஏஎஸ்பிஎல்(asbl) என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அஜித்தேஷ் கொருபலு வாடகை வீட்டில் குடியிருந்து மாதந்தோறும் வாடகை செலுத்துவதை விட, அந்த தொகையை ஈஎம்ஐ-ஆக செலுத்தினால் உங்கள் பெயரில் ஒரு சொத்து உருவாகும், எனவே சொந்த வீடு வாங்குங்கள் எனக் கூறியிருந்தார். குறிப்பாக வேலைக்கு செல்வோருக்கு ரியல் எஸ்டேட் என்பது சொத்துக்களை உருவாக்க கூடிய ஒரு வழிமுறை என அவர் கூறியிருந்தார். மாதத்திற்கு ரூ.1 லட்சம் வாடகை செலுத்துகிறீர்கள், நீங்கள் பத்தாண்டு காலத்திற்கு இந்த வாடகை செலுத்தினாலும் உங்களுக்கு அதனால் எந்த ஒரு சொத்தும் உருவாக போவதில்லை, ஆனால் இதுவே நீங்கள் ஒரு வீட்டை வாங்கி அதற்கான ஈஎம்ஐ செலுத்தினால் 10 -15 ஆண்டு காலத்தில் உங்கள் பெயரில் ஒரு சொத்து உருவாகி இருக்கும் எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள தேஷ்பாண்டே "ஒருவேளை ஹைதராபாத் வித்தியாசமாக இருக்கலாம், நான் வசிக்கும் குருகிராமை கணக்கில் கொள்வோம், பராமரிப்பு உட்பட ஒரு மாதத்திற்கு 1.6 லட்சம் ரூபாயை நான் வாடகையாக செலுத்துகிறேன். நான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்பானது தோராயமாக 8 கோடி ரூபாயாக இருக்கும். நான் இந்த அப்பார்ட்மெண்ட்டை வாங்க வேண்டும் என்றால் நான் கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய்க்கு வீட்டு கடன் வாங்க வேண்டியது இருக்கும். இதற்காக நான் மாதாந்திர தவணையாக 6 முதல் 7 லட்சம் ரூபாயை செலுத்த வேண்டியிருக்கும். என்னுடைய வாடகை தொகையை விட இது நான்கு மடங்கு அதிகம். ஆனால் நான் இப்போது ஈஎம்ஐ நான்கில் ஒரு பங்கை தான் வாடகையாக செலுத்துகிறேன். எனவே கடன் வாங்கி சொந்த வீட்டை வாங்குவதைவிட வாடகை வீட்டில் குடியிருப்பது தான் சிறந்தது" என அவர் கூறியுள்ளார்.
"அலுவலகத்திற்கு அருகிலேலேயே வசிப்பதை தான் நான் விரும்புகிறேன். இதுவே சொந்த வீடாக இருந்தால் என்னால் அடிக்கடி வீட்டை மாற்ற முடியாது. குழந்தைகளின் தேவைக்கேற்ப நான் இரண்டு படுக்கையறை அல்லது மூன்று படுக்கை அறை என தேவைக்கேற்ப பெரிய அளவிலான வீட்டிற்கு என்னால் மாற இயலும் ஆனால் சொந்த வீடாக இருக்கும் பட்சத்தில் என்னால் அதனை மாற்ற முடியாது" என தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply