பனங்கிழங்கு உற்பத்தி செயல்முறைகள்
ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை பனை சீஸன் காலம். இந்தச் சீஸனுக்குப் பிறகுதான் பனங்காய்கள், பழுத்து பனம்பழங்களாகக் கீழே விழும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கும் பழங்களைச் சேகரித்து நிழலான பகுதியில் குவித்து வைக்க வேண்டும். பனை தோட்டங்களில் இருந்து பனைவிதைகளைச் சேகரிக்கலாம். சில தோட்டங்களில் பனை விவசாயிகளே பனைவிதைகளை விற்பனை செய்கிறார்கள்.அக்டோபர், நவம்பர் மாதங்களில் விதை நட்டால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடைக்கு வரும்.5 அடி நீளம்,3 அடி அகலம்,1அடிஉயரம்பார்கள்அமைக்கவேண்டும்.பனைவிதைகளின்எண்ணிக்கையைப் பொறுத்து, பார்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க வேண்டும்.
குறைந்தபட்சம்1 அடி உயரத்தில் பார் அமைத்தால்தான் கிழங்கு ஆழமாக வேரூன்றி வளரும். அறுவடையின்போது பிடுங்கி எடுக்கவும் எளிதாக இருக்கும். பார் அமைத்த பிறகு,10 கிலோ எரு,2 கிலோ வேப்பந்தழை,3 கிலோ அடுப்புச்சாம்பலை(ஒரு பாத்திக்கான அளவு) கலவையாக்கிப் பரவலாகத் தூவி விட வேண்டும். அதன் பிறகு, பார்கள் மீது விதைகளை நெருக்கமாக அடுக்க வேண்டும். இடம் வசதி குறைவாக உள்ளவர்கள், ஓர் அடுக்கு விதைப்பு முடிந்தவுடன், அதன் மீது மண் போட்டு மூடி இரண்டு அடுக்குகளாக விதைகளை அடுக்கலாம். ஆனால், இரண்டாம் அடுக்கில் உள்ள கிழங்குகள் திடமாக இருக்காது.விதை ஊன்றும் அன்று பழங்களின் சதைப்பகுதியை கையால் பிதுக்கி விதைகளைத் தனித்தனியே எடுத்துவிட வேண்டும். பனம்பழங்களில் குறைந்தபட்சம் ஒன்றும் அதிகபட்சமாகமூன்று விதைகளும் இருக்கும். இதில் வண்டு துளைத்த கொட்டைகள், மிகச்சிறிய கொட்டைகள் எனச் சேதாரமான கொட்டைகளைக் கழித்து விடவேண்டும். பாத்தியின் மீது 'கண் பாகம்' கீழ் நோக்கி இருக்கும்படி நெருக்கமாக அடுக்க வேண்டும்.
அடுக்கிய பிறகு, அதன் மீது லேசாக மண் தூவி, பாத்தி ஓரங்களில் மண் அணைத்துவிட்டு, பாத்தி முழுவதும் தண்ணீர் ஊற்றவேண்டும்தண்ணீர் ஊற்றும்போது, மேலுள்ள மணல், இரண்டு அடுக்குப் பனை விதைகளின் இடுக்கு களில் சென்று சேரும். மேல் பகுதியில், மண் குறைந்தால், மீண்டும் மண்ணைத் தூவி மீண்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒருநாள் இடைவெளியில் தொடர்ந்து தண்ணீர் தெளிக்க வேண்டும். அதற்குப் பிறகு, ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் தெளிக்கலாம். இந்தப் பாத்திகளின் மீது பனை ஓலைகளை மூடாக்காக மூடினால், நீர் ஆவியாகாது. இதனால், கோழிகளும் பாத்திகளைக் கிளறாது.20 நாள்களுக்குப் பிறகு முளைக்கத் துவங்கும்.40வது நாளுக்கு மேல் வேர் பிடித்து வளரும். இதன் வேர்ப்பகுதி மாவுப்பொருளைச் சேகரித்துக் கிழங்காகிறது.60வது நாளுக்கு மேல் கிழங்கு பருமனாகத் துவங்கும்.90 முதல்110வது நாளுக்குள் அறுவடை செய்யலாம்.90வது நாளுக்கு மேல் பாத்திகளின் மேல் பகுதியில் ஆங்காங்கே வெடிப்புக் காணப்படும். அப்போது ஒரு கிழங்கைத் தோண்டிப் பார்த்தால், தோல் வெடித்த நிலையில் காணப்படும். அதிகபட்சமாக110வது நாளுக்குள் அறுவடை செய்துவிட வேண்டும். அதற்கு மேல் சென்றால், கிழங்கிலிருந்து பச்சை நிறத்தில்'பீலி' வெளிப்படும். இதனால், கிழங்கு சுவையாக இருக்காது.130வது நாளுக்கு மேல் சென்றுவிட்டால், கிழங்கு தன் பதத்தை இழந்து, சுருங்கி பீலி நீண்டு இளம் குருத்துப்பனையாக வளர ஆரம்பித்துவிடும்.
கிழங்கு பிடிக்கத் துவங்கியதும்'கணக்கான்' என்ற வெள்ளைநிறப் புழுவின் தாக்குதல் தாக்கும். இதைக் கட்டுபடுத்திடத்தான் விதை ஊன்றும் போதே, அடுப்புச்சாம்பலும், வேப்ப இலைகளையும் தூவுகிறோம். கிழங்கு வேகமாகவும், பருமனாகவும் வளர, ரசாயன உரத்தை பாத்தியின் மீது தூவியும், தண்ணீரில் கரைத்தும் சில விவசாயிகள் தெளித்து வருகிறார்கள். அறுவடை செய்த கிழங்குகள் தோல் சுருங்காமல்5 நாட்கள் வரை இருக்கும் என்றால், ரசாயன உரம் தெளிக்கப்பட்ட கிழங்குகளின் தோல் மறுநாளே சுருங்க ஆரம்பித்து விடும்.கிழங்குகளைப் பிடுங்கிய பிறகு, தொங்கும் கொட்டையை வெட்டிவிட வேண்டும். இதற்குள், வெள்ளை நிறத்தில் பஞ்சு போன்று தவின் இருக்கும். இனிப்புச் சுவையுடன் இருக்கும் இந்தத் தவினை, சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஆசைப்படுவார்கள். இந்தத் தவினை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனையும் செய்கிறார்கள்.
0
Leave a Reply