. “ராஜளயம்” என்ற ராஜபாளையம்
தமிழ்நாடு தாண்டி கடல் கடந்து தமிழ் மணம் வீசினாலும் ஓரிடத்தில் பேசப்படும் பேச்சு வழக்கு மற்றொரு இடத்தில் பேசப்படுவதில்லை.தமிழ்நாட்டில் குமரி, நெல்லை, மதுரை, கொங்கு மண்டலம், சென்னை போன்ற வட்டாரத்தில் பேச்சு வழக்கு ஒவ்வொரு விதமாக உள்ளது. தமிழ்மொழி. உலகின் தொன்மையான மொழியாக, செம்மொழியாக விளங்குகிறது
தமிழ்நாட்டிற்குள்ளேயே தமிழ் ஒரே மாதிரியாக பேசப்படுவது இல்லை. கன்னியாகுமரியில் பேசப்படுவதும் சென்னையில் பேசப்படுவதும் ஒரே மொழி தான் எனினும் பேச்சு வழக்கு முற்றிலும் மாறுபடும் இதை தான் வட்டார வழக்கு என்கிறோம்.
இதில் விருதுநகர் மதுரைக்கு அருகில் உள்ள மாவட்டம் என்பதால் விருதுநகரின் பேச்சு வழக்கும் பெரும்பாலும் மதுரையை ஒத்தே உள்ளது. அருகில் நெல்லையும் இருப்பதால் இங்கு நெல்லை பேச்சு வழக்கும் கலந்து பரவலாக பேசப்படுகிறது.மொத்தத்தில் 70 சதவிகிதம் மதுரை வழக்கு30 சதவிகிதம் நெல்லை வழக்கு என விருதுநகரை பிரிக்கலாம். அப்படி என்றால் விருதுநகருக்கென தனி வழக்கு இல்லை என நீங்கள் கேட்கலாம். விருதுநகர் மக்கள் தங்களின் ஊர் பெயரை வட்டார வழக்கில் குறிப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
விருதுநகர் என இருந்தாலும் உள்ளூர் மக்கள் தங்களுக்குள் அந்த பெயரை சுருக்கி " விர்நர்" என்று தான் குறிப்பிட்டு வருகின்றனர்.
ஶ்ரீவில்லிபுத்தூர் என்ற திருவில்லிபுத்தூர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருந்தாலும், உள்ளூர் மக்கள் இவ்வூரை " சீலத்தூரு" என்று தான் குறிப்பிட்டு வருகின்றனர். இன்றைய படித்த இளைஞர்கள் ஶ்ரீவி என குறிப்பிட்டு வந்தாலும் இன்றும் கிராமப்புறங்களில் சீல்த்தூரு போயிட்டு வரேன் என்று தான் கூறுகின்றனர்.
ராஜபாளையம் என்றால் உங்களுக்கு நிச்சயம் ராஜபாளையம் நாய்கள் தான் நினைவுக்கு வரும். ராஜபாளையம் என வெளியூர் காரங்க உச்சரித்தாலும் உள்ளூர் மக்கள் நாங்க “ராஜளயம்” என்று தான் சொல்வோம் என்கின்றனர்.
வற்றாத தானிய இருப்பை கொண்டதன் காரணமாக வற்றாத இருப்பு என பெயர் பெற்ற வத்திராயிருப்பை வெள்ளையர்கள் வத்திராப் என அழைக்க அதுவே இப்போது பழக்கமாகி உள்ளூர் மக்கள் வத்திராப்பு என்று அழைத்து வருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அருப்புக்கோட்டை பேருந்து ஏற சென்றால், அங்கு பேருந்து நடத்துனர்கள் அருப்புக்கோட்டை பயணிகளை ஏற்ற ஊர் பெயரை கூறிக்கொண்டு இருப்பர். அதை ஊற்று கேட்டால் “அருப்போட்ட” என்ற வார்த்தை கேட்கும். இது தான் அருப்புக்கோட்டை வழக்கு.
பட்டாசுக்கு பெயர் போன சிவகாசியையும் மக்கள் உள்ளூர் வழக்கில் சிவாசி எனவும் சிலர் செவாசி எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்.
0
Leave a Reply