பயிர் சாகுபடியினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் செங்குன்றாபுரம் கிராமத்தில் விவசாயிகள் விளைநிலங்களில் பயிர் செய்துள்ளதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (01.09.2026) பார்வையிட்டார்.
தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் பரப்பளவு, பயிர் வகைகள், சாகுபடி நிலை உள்ளிட்ட விவரங்களை துல்லியமாக பதிவு செய்யும் வகையில் டிஜிட்டல் முறையில் பயிர் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்னணு முறையில் பயிர்கணக்கெடுப்பு பணியானது நவீன தொழில் நுட்பங்கள் துணையுடன் நிகழ்கால பயிர் கணக்கெடுப்பு விவசாய நிலங்கள் புகைப்படத்தோடு கைப்பேசி செயலி மூலம் அனைத்து விவசாயிகளின் நிலங்களிலும் விடுதலின்றி ஒவ்வொரு பருவத்திலும் பயிர்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி, வத்திராயிருப்பு, திருவல்லிபுத்தூர், சிவகாசி, திருச்சுழி, விருதுநகர், இராஜபாளையம், காரியாபட்டி, வெம்பக்கோட்டை, சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 601 கிராமங்களில் 9,40,138 புல உட்பிரிவுகளில் உள்ள நிலங்களில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 2,35,357 புல எண்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,04,781 புல எண்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு பணிகளில், களப்பணியாளர்கள் அலைபேசி செயலி வாயிலாக பயிர் வகை, சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பளவு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும், கணக்கெடுப்பு பணிகளின்போது விவசாயிகளிடமிருந்து பெறப்படும் தகவல்கள் சரியாகவும், முழுமையாகவும் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், கள ஆய்வின்போது நிலத்தின் உண்மை நிலவரத்துடன் பதிவுகள் பொருந்துவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயிர் கணக்கெடுப்பு மூலம் பெறப்படும் தரவுகள், மாவட்டத்தில் வேளாண் சாகுபடி நிலவரத்தை துல்லியமாக அறிந்து கொள்வதற்கும், விவசாயிகளுக்கான அரசு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கும், வங்கிக்கடன் பெறுவதற்கும், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் பாதிப்புகளுக்கான நிவாரணம், பயிர் காப்பீடு மற்றும் வேளாண்மை தொடர்பான திட்டமிடல் பணிகளுக்கும் முக்கிய ஆதாரமாக அமையும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அ.அம்சவேணி, தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.ஆறுமுகம், வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
0
Leave a Reply