கூட்டுறவுத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் (24.2.2025) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மக்களுக்கு பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தெற்குத் தெருவில் கூட்டுறவுத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.மாணிக்கம்தாகூர் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்து, விற்பனையை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.08.2024 அன்று நிகழ்த்திய சுதந்திர தினவிழா உரையில், தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களுக்கான மருந்துகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாலும், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கு தொடர்ந்து மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாலும் அதிக செலவுகள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வாக பொது மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் கிடைக்க செய்யும் வகையில் “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும், இதை சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுநர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் மானியம் மற்றும் தேவையான கடனுதவி அரசால் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விருப்பமுள்ள B.Pharm / D.Pharm சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் தமிழ்நாடு முழுவதும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து 1000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொழில்முனைவோருக்கு தலா ரூ.3 இலட்சம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு தலா ரூ.2 இலட்சம் மானியமாக உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரொக்கமாகவும், மருந்துகளாகவும் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில், பந்தல்குடி, சூலக்கரை, மேட்டமலை-சாத்தூர், முகவூர், கிருஷ்ணன்கோவில், வீரசோழன், சின்னமூப்பன்பட்டி, தாயில்பட்டி, மல்லாங்கிணறு, வத்திராயிருப்பு, வன்னியம்பட்டி விலக்கு, அருப்புக்கோட்டை தெற்கு தெரு, அய்யனாபுரம், ஆனையூர், அருப்புக்கோட்டை பந்தல்குடி சாலை, எம்.ரெட்டியாபட்டி, காமராஜர் நகர் - இராஜபாளையம், சாத்தூர், கிருஷ்ணாபுரம், மேலையூர், திருவில்லிபுத்தூர், எம்.புதுப்பட்டி, செங்கமலநாச்சியார்புரம், அழகாபுரி-இராஜபாளையம், அல்லம்பட்டி, வெள்;ர், முடங்கியார் சாலை - இராஜபாளையம் என மொத்தம் 27 முதல்வர் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மருந்தகத்திற்கு தேவைப்படும் மருந்துகளில் ஜெனிரிக் மருந்துகளை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமும், பிராண்டட் மருந்துகள், சர்ஜிக்கல், நியுட்ராசூட்டிகல்ஸ் மற்றும் இந்திய மருந்துகளை டாம்ப்கால் மற்றும் இம்காப்ஸ்-இடமிருந்து கொள்முதல் செய்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலமாகவும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக சென்னை, சாலிகிராமத்தில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தால் மத்திய மருந்து கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், கொள்முதல் செய்து வழங்கும் மருந்துகள் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பு வைக்க ஏதுவாக 38 மாவட்டங்களில் மாவட்ட மருந்து கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மருந்து கிடங்குகள் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளான குளிர்சாதன வசதி, குளிர்சாதனப்பெட்டி, ரேக்குகள் மற்றும் கணினி ஆகியவையுடன் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகங்களுக்கு தேவைக்கு ஏற்ப மருந்துகள் உடனடியாக அனுப்பும் வகையில் மாவட்ட மருந்து கிடங்குகளில் மூன்று மாதத்திற்கு தேவையான மருந்துகளின் இருப்பு பராமரிக்கப்படுகிறது. மாவட்ட மருந்து கிடங்கிலிருந்து முதல்வர் மருந்தகங்களுக்கு நகர்வு செய்ய தனியே வாகன வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகத்திற்கு தேவைப்படும் மருந்துகளை கணினி மூலம் ஆன்லைனில் மருந்தாளுநர்/ தொழில்முனைவோர் கேட்பு பட்டியல் ஏற்படுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த முதல்வர் மருந்தகத்தினை பயன்படுத்தி குறைந்த விலையில் மருந்துகளை பெற்று பயன்பெறுமாறு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.பா.செந்தில்குமார், அருப்புக்கோட்டை சரக துணைப்பதிவாளர் திரு.ஐ.அந்தோனி மரிய டயஸ், அருப்புக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திருமதி சுந்தரலட்சுமி உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply