கரிசல் இலக்கியத் திருவிழா - 2024 சிறந்த இளம் படைப்பாளர் விருதுக்கு படைப்புகளை அனுப்பலாம்
விருதுநகர் மாவட்ட கரிசல் இலக்கிய கழகத்தின் 2வது செயற்குழு கூட்டம் கரிசல் இலக்கியக் கழகத் தலைவர் / மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2வது கரிசல் இலக்கியத் திருவிழா - 2024 - டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் சிவகாசியில் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கரிசல் இலக்கிய கழகத்தின் வாயிலாக நடத்தப்படும் இக்கரிசல் இலக்கிய திருவிழாவினை முன்னிட்டு சிறந்த இளம் படைப்பாளர் விருது வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்விருதுக்கு சிறுகதைத் தொகுப்பு, நாவல், ஆய்வுக் கட்டுரை போன்ற படைப்புகளை அனுப்பலாம். படைப்பாளர்கள் 35 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளராக இருக்க வேண்டும். படைப்புகள் வெளிவந்த காலம் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சிறந்த இளம் படைப்பாளர் விருதுக்கான படைப்புகளை தங்களது விவரத்துடன் 30 நவம்பர் 2024- க்;குள் சனி, ஞாயிறு, அரசுவிடுமுறை நாள்கள் தவிர்த்து இதர வேலைநாள்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர். தொலைபேசி: 04562- 225596 என்ற அலுவலகத்தில் நேரிலோ ஃ அஞ்சல் வாயிலாகவோ சமர்ப்பிக்கலாம்.
மேற்கண்ட இளம் படைப்பாளர் விருதுக்கான படைப்புகள் அனைத்தும் கரிசல் மண் சார்ந்த படைப்புகளாக இருக்க வேண்டும். கரிசல் நிலவியல், வாழ்வியல், பண்பாடு, வழக்காறுகள், தொழில்கள், சமூகங்கள் மற்றும் இலக்கியங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட படைப்புகளாக இருக்க வேண்டும்.சிறந்த படைப்புகள் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, படைப்பாளர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்படும் நூலுக்கு ரூ.50,000- பரிசு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply