இராஜபாளையம் அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு கட்டடப்பிரிவுகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அரசு தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும், பல்நோக்கு கட்டடப்பிரிவுகளை தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ராணி ஸ்ரீகுமார் அவர்கள் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கப்பாண்டியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள்(23.10.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் வழங்கப்படும் மருத்துவ வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டு முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு, ஏற்கனவே தமிழ்நாடு முழுவதிலும் 19 அரசு தலைமை மருத்துவமனைகள் மட்டுமே இருந்த நிலையில், அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய முக்கிய நகரங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைய வேண்டும் என்கின்ற நோக்கில் 25 புதிய மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளை உருவாக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் ரூ.1018.85 கோடி மதிப்பீட்டில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தமிழ்நாடு முழுவதிலும் 25 இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமையும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
அந்த வகையில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு மருத்துவமனைகளும் பல்வேறு புதிய மருத்துவக் கட்டமைப்புகள் என்பது தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை இரண்டு இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் அமைய அனுமதி வழங்கப்பட்டது.
அதில் அருப்புக்கோட்டை மற்றும் இராஜபாளையம் மருத்துவமனை கட்டும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் குறிப்பாக இராஜபாளையம் பகுதியில் சுமார் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 1.8 ஏக்கர் நிலப்பரப்பில் 227 புதிய படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.மேலும், அருப்புக்கோட்டையில் சுமார் ரூ.30 கோடி மதிப்பில் மருத்துவமனை பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்தார்.
பின்னர், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடனான ஆய்வு கூட்டம் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த ஆய்வு கூட்டத்தில் மருத்துவமனை மேம்படுத்துவதற்கான கருத்துக்கள் மற்றும் குறைகள் தொடர்பான கோரிக்கைகளை கேட்டறிந்தார்.இக்கூட்டத்தில், இராஜபாளையம் நகர்மன்ற தலைவர் திருமதி பவித்ரா ஷியாம், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) திரு. பாபுஜி, மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply