விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான கூட்டம்
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் 2025-ன் முன் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக வாக்குசாவடிகள் பகுப்பாய்வு மறுசீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாக (20.09.2024) மாலை 03.30 மணியளவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு மற்றும் மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஏற்கெனவே நடத்தப்பட்ட கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பொதுமக்களின் நலன் ஆகியவற்றின் அடிப்படையில் வாக்குச்சாவடி மையங்கள் நேரிடையாக பார்வையிடப்பட்டு வாக்காளர் பதிவு அலுவலர்கள் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட வாக்குச்சாவடி இடமாற்றம்/கட்டிடம் மாற்றம், வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, வாக்குச்சாவடி பெயர் மாற்றம், புதிய வாக்குச்சாவடி உருவாக்கம் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு, அவர்களது ஒப்புதல் பெறப்பட்டது.
மறுசீராய்வு பணியில் 202-இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி, 205-சிவகாசி சட்டமன்ற தொகுதியில் இரண்டு வாக்குச்சாவடிகள், 206-விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் மூன்று வாக்குச்சாவடிகள், 208-திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 08 வாக்குச்சாவடிகள் புதியதாக ஏற்படுத்தப்பட உள்ளன.வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு மற்றும் மறுசீராய்வு பணிகளுக்குப் பிறகு விருதுநகர் மாவட்டத்தின் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1893-ல் இருந்து 1901 ஆக உயரும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply