விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு உடனடித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து, அம்மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் விதமாக உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் (05.09.2024) நடைபெற்றது.தமிழக அரசு, மாணவர்களின் உயர்கல்வி பயிலும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களை அதிகமாக உயர்கல்விக்கு சேர்க்கை பெறும் நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 2023-2024 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 97 சதவீத மாணவர்கள், உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அந்த வகையில் 12-ஆம் வகுப்பு உடனடித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் விதமாக இன்று நடைபெற்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இம்மாணவர்களிடம்; தனித்தனியாக உயர்கல்விக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதற்கான காரணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், சரியான வழிகாட்டியின்மை, பாடப்பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடர முடியாமல் இருப்பதாக தெரிவித்த மாணவ, மாணவியர்களிடம், அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பாடப்பிரிவு துறைகளை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்தும், தீர்வுகளை எடுத்துக்கூறியும், உயர்கல்வி தொடர்வதற்கான உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களில் 11 மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 5 மாணவர்கள் தனியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 11 மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் என முதற்கட்டமாக மொத்தம் 27 மாணவர்கள் உயர்கல்வி பயில கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான முதலாமாண்டு கல்வி கட்டணம் விருதுநகர் கல்வி அறக்கட்டளையின் மூலம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மீதமுள்ள மாணவர்களையும், உயர்கல்வியில் சேர்க்கை பெற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி அனிதா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டிசெல்வன், அரசு அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் (தன்னாட்சி) கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை கல்லூரி மாணவியரிடம் சந்தைப்படுத்தும் நோக்குடன் நடைபெற்று வரும் கல்லூரிச் சந்தை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் (05.09.2024) நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் 04.09.2024 முதல் 06.09.2024 வரை நடைபெறும் இக்கண்காட்சியில் விருதுநகர் மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய வெளி மாவட்டங்களில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களான காட்டன் சேலைகள், சுடிதார் டாப்ஸ், சணல் நார் பொருட்கள், மர பொம்மைகள், செயற்கை ஆபரணங்கள், கிறிஸ்டல் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பேன்ஸி பொருட்கள், மசாலா பொருட்கள் மற்றம் திண்பண்டங்கள் உள்ளிட்ட உற்பத்திப்பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரகஃநகர்புர வாழ்வாதார இயக்கம்) திரு.ஜே.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், கல்லூரி நிர்வாகிகள், துணைமுதல்வா,பேராசிரியர்கள், உதவி திட்ட அலுவலர்கள், வட்டார இயக்க மேலாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், சமுதாய அமைப்பாளர்கள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் மூளிப்பட்டி கிராமத்தில், பேங்க் ஆப் இந்தியா மதுரை மண்டலம் சார்பில், "தாயின் பெயரில் மரம் நடுதல் (Plant For Mother Campaign)" என்ற பிரச்சார திட்டத்தின் கீழ் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் (05.09.2024) மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (05.09.2024) ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், 74 அரசுப்பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்களும், 51 அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்களும், 65 தனியார் பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்களும் என மொத்தம் 190 பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.ஆசிரியர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் வழங்க வேண்டும். மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களுக்கு ஏற்ப துறைகளை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் அந்தந்த பகுதியில் இருக்கக்கூடிய அங்கீகாரம் பெறாத சில கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை பெறுவது தவிர்க்க முடியும்.ஆசிரியர்களாகிய நீங்கள் மாணவ, மாணவியர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்க வேண்டும். பெற்றோர்களின் விருப்பம் இல்லை என்றாலும், அவர்களின் அனுமதி கிடைக்கவில்லை என்றாலும், பெற்றோர்களுக்கு உயர்கல்வி படிப்பது குறித்த உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்.மேலும், மாவட்டத்தில் உயர்கல்வி சேராமல் இருக்கும் மாணவர்களின் குடும்பங்களில் பொதுவாக 99 சதவிகிதம் அவர்களின் முந்தைய தலைமுறையினர் பட்டதாரிகளாக இருக்க மாட்டார்கள். தற்பொழுதும் உயர்கல்வி படிக்கவில்லை என்றால் இன்னும் அவர்கள் ஒரு தலைமுறை காலம் காத்திருக்க வேண்டும். அதனால், நாளைய வாழ்க்கை சிரமங்களை எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமாக இருக்கும்.ஒரு ஆசிரியர் பணியில் குறிப்பாக உயர்கல்விக்கு மாணவர்களை பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவுடனே அவர்களை வழிகாட்டுவது மட்டுமல்ல, அவர்களை நீண்டகாலமாக அவர்களுக்கான பிரச்சினைகளை எடுத்துக்கூறி வழிகாட்டுவதும் தான். மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை தவிர அதிகமான விஷயங்கள் பற்றி எடுத்துச்சொல்ல வேண்டியுள்ளது.மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து எந்த துறையை தேர்வு செய்து படித்தாலும் அவர்களுக்கு வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வரும். இது எல்லாவற்றையும் எடுத்துக் கூறி மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவதோடு, வாழ்க்கை குறித்து புரிதல்கள் ஏற்படுத்துவதிலும் ஆசிரியர்களுக்கான பணியில் மிகப்பெரிய தேவை இருக்கிறது.மாணவர்களை சரியான வழியில் ஆற்றுப்படுத்துவதற்கும், எதிர்கால வாழ்வியல் சிக்கல்களை எதிர்கொள்வதற்கும் தொடர்ச்சியாக செயல்படுவதற்கு தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.எனவே, மாணவர்களின் வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற முடியும் என்பது குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி, அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நாம் செயல்பட வேண்டும் எனவும், இந்த ஆண்டும் நமது மாவட்டத்தில் 100 சதவிகிதம் அனைத்து பள்ளிகளிலும் தேர்ச்சி பெற அனைத்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டுமென எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மூன்றாவது புத்தகத்திருவிழா, விருதுநகரில் அமைந்துள்ள கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாக பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 07.10.2024 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது. இப்புத்தகத் திருவிழாவின் மைய நோக்கம் "மரமும், மரபும்", அதாவது சுற்றுச்சூழலையும், நமது பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகும். இதனடிப்படையில் இப்புத்தகக் கண்காட்சியில், நூறாண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைக் காட்சிப்படுத்தும் கலைக்காட்சி அரங்கம் அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விருதுநகர் மாவட்டத்தின் வரலாறு, வளர்ச்சி, பண்பாடு, பின்பற்றிய பழக்க வழக்கங்கள், நடைமுறைகள்,தொழில்கள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் உள்ள நூறாண்டுகளுக்கு முந்தைய, அரிய புகைப்படங்கள் மற்றும் பழமையான, அரிய ஆவணங்கள், ஆகியவை பொது மக்களிடம் இருந்து வரவேற்கப் படுகின்றன.மேலும், பொதுமக்களால் வழங்கப்படும் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் காட்சிப் படுத்துவதற்காக உரிய முறையில் படியெடுக்கப்பட்டு மீண்டும் உரியவரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும். பழமையான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை, செப்டம்பர் 20-ம் தேதிக்குள், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வேலை நாள்களிலும் நேரில் வந்து கொடுக்கலாம். இது தொடர்பாக 73977-15688 -என்ற கைப்பேசி எண்ணில் மாவட்ட சுற்றுலா அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம்.மேலும் காட்சிப்படுத்தப்படும் சிறந்த புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் பெரும் முயற்சிகளில் ஒன்றாக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காகவும், சமூக பங்களிப்பு மற்றும் தனிப்பட்ட பங்களிப்புகளை ஒருங்கிணைக்கவும் 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது பங்களிப்புகளை பொருளாகவோ பணமாகவோ அல்லது களப்பணி செய்வதன் மூலமாகவோ பங்களிக்கலாம்.இத்திட்டத்தின் வாயிலாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள், மற்றும் தனிநபர்கள் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பங்களிக்கலாம். நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 11.09.2024 அன்று பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினம் அனுசரித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள மற்றும் சமூதாய தலைவர்களுடன் சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் (04.09.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நிபந்தனைகள் குறித்து தெரிவிக்கையில்:-1. அஞ்சலி செலுத்த செல்பவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது. வாடகை வாகனங்கள் (T.Board) மற்றும் திறந்த வெளி வாகனங்களில் (Open type) செல்ல அனுமதி இல்லை.. இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், டாடா ஏஸ் (TATA ACE) சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை.2. சொந்த வாகனங்கள் மூலம் (கார், வேன் மற்றும் பிற இலகு வாகனங்கள் மட்டும்) வருகை தருபவர்கள்; வாகன எண், வாகனத்தில் பயணம் செய்வோர் விபரங்களை 08.09.2024 ஆம் தேதிக்கு முன்பாக விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அலுவலக மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில் அளித்து வாகன அனுமதி சீட்டு (Vehicle Pass) பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. 3. சொந்த வாகனங்களில் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு சென்றுவர வேண்டும். புதிதாக வேறு வழித்தடத்தில் சென்றுவர அனுமதியில்லை.4. வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக் கூடாது.5. வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக் கூடாது. வரும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.6. வாகனங்களில் சாதி மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது.7. வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது. வாகனங்களில் செல்பவர்கள் மேளதாளம் அடித்துச் செல்லக்கூடாது. வாகனங்களில் செல்பவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபடும் பட்சத்தில் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.8. சட்டம் ஒழுங்கை கருத்திற்கொண்டு காவல்துறையினர் ஏற்படுத்திய சோதனைச் சாவடிகளில் வாகனங்களை சோதனைக்குட்படுத்தி காவல்துறையினரின் பணிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.9. பரமக்குடி நகருக்குள் சந்தைப்பேட்டை சந்திப்பு முதல் காட்டுப்பரமக்குடி வரை தேசிய நெடுஞ்சாலையில் எந்த ஒரு வாகனத்தையும் நிறுத்தி வைக்க அனுமதி கிடையாது.10. வாகனங்களில் வரும்பொழுது வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடங்களில் நிறுத்தக் கூடாது.11. அஞ்சலி செலுத்துவதற்காக கிராமங்களிலிருந்து பேருந்துகளில் வருபவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து காலை 08.00 மணிக்குள் புறப்பட வேண்டும்.12. வாகனங்களில் (பேருந்துகள் உட்பட) பிளக்ஸ் போர்டு, பேனர், கட்சி கொடிகள் மற்றும் ஒலிபெருக்கி ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. மேலும் ஜோதி தொடர்பான உபகரணங்களை பேருந்துகளில் எடுத்து வரக்கூடாது.13. வாகனங்களில் (பேருந்துகள் உட்பட) படிக்கட்டு மற்றும் மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது.14. பேருந்துகளில் அனைவரும் முறையாக பயணச் சீட்டு பெற்று வர வேண்டும்.15. அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் செல்லும் பொழுது உடன் 3 சொந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும், மேலும் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு செல்ல வேண்டும்.16. நடைபயணமாக அஞ்சலி செலுத்த செல்லக்கூடாது. 17. மேற்படி பேனர்களை நிகழ்ச்சி முதல் நாளும் நிகழ்ச்சி நாளன்றும் மட்டுமே வைக்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்த மறுநாள் சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக பேனர்களை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றத்தவறும் பேனர்களை காவல்துறையினர் எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றுவார்கள். அதற்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது.18. ஜோதி, முளைப்பாரி மற்றும் பால்குடம் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை. நினைவிடத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவிற்குள் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும்.19. செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முந்தைய தினமோ, பிந்தைய தினமோ எவ்வித நிகழ்ச்சிகள் கொண்டாடவும், ஒலிபெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது. செப்டம்பர் 11-ஆம் தேதி மட்டும் அவரவர்களது சொந்த ஊரில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம். பரமக்குடி நினைவிடத்தில் செப்டம்பர் 11-ஆம் தேதி மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும்.20. மேற்படி நிகழ்ச்சி தொடர்பாக பேனர் மற்றும் கட்அவுட்கள் வைக்கக் காவல் துறையினர் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினரிடம் முன்அனுமதி பெற்ற பின்னரே வைக்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் வைக்கப்படும் கட்அவுட்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றப்படும். மேலும் சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரம் செய்வதற்கு அனுமதி இல்லை21. அலங்கார ஊர்தி அணிவகுப்பு மாட்டு வண்டியில் வருதல், சாதித் தலைவர்கள் வேடமணிந்து வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை22. நினைவிடத்தில் தேவேந்திர பண்பாட்டுக் கழகம் சார்பாக மட்டுமே கூட்டத்தை முறைப்படுத்த ஒரு ஒலிபெருக்கி மட்டும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும். நினைவிடத்திற்குள் தலைவர்கள் ஒலிபெருக்கியில் பேசுவதற்கு அனுமதி கிடையாது.23. பரமக்குடி நினைவிடத்தில் 11.09.2024 ஆம் தேதி அன்று மாலை 04.00 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொள்ள வேண்டும்.24. அஞ்சலி செலுத்த வருபவர்களில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் (Registered Political Parties) தலைவர்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 06.09.2024 ஆம் தேதி மாலை 5.45மணிக்கு முன்பாக விண்ணப்பத்தினை அளிக்க வேண்டும்.மேற்கூறிய இயக்க நடைமுறைகளை மீறும்பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர்களின் மீதும், அமைப்புகள் மீதும் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் (04.09.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன்படி சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், கே.மேட்டுப்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டங்களின் கீழ் ரூ.25.11 இலட்சம் மற்றும் ரூ.12 இலட்சம் மதிப்பில் இரண்டு சமுதாய நீர் சேகரிப்பு புதிய குளங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,என்.மேட்டுபட்டி கிராமத்தில்; மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.96 இலட்சம் மதிப்பில் ஆடு மற்றும் மாட்டுக் கொட்டகைகள் கட்டப்பட்டுள்ளதையும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அரசு மானியத்தில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,என்.மேட்டுபட்டி கிராமத்தில்; உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.49.30 இலட்சம் மதிப்பில் பள்ளி வளாக சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,எம்.நாகலாபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.72 இலட்சம் மதிப்பில் சமுதாய நீர் சேகரிப்பு புதிய குளம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும்,நென்மேனி ஊராட்சி வன்னிமடை கிராமத்தில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.1.81 கோடி மதிப்பில் பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் (04.09.2024) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அலங்கார மீன்வளர்ப்பு குறித்து, தொழில்நுட்ப வளர்ப்பு முறைகளை அறிந்து கொள்ளும் வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்கார மீன் வளர்ப்பு பண்ணைகளை பார்வையிட்டு பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பட்டறிவு பயண வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.அலங்கார மீன் வளர்ப்பு பிரபல பொழுதுபோக்காக கருதப்பட்ட நிலையில் தற்போது வளர்ந்து நன்கு லாபம் தரும் தொழிலாக மாறி உள்ளது. இத்தொழில் ஏற்றுமதி துறையிலும் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் குறிப்பாக பெண்கள் தங்களது வீட்டிற்கு அருகாமையில் வண்ண மீன் வளர்த்து லாபம் அடையலாம்.மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வீட்டிற்கு அருகாமையில் 300 சதுர அடியில் அலங்கார மீன் வளர்ப்பு மேற்கொள்ள மகளிர்களுக்கு1.8 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. பெண்கள் வீட்டில் இருந்தவாறு அலங்கார மீன் வளர்ப்பு மேற்கொண்டு மாதம் ரூபாய் 15,000/ வரை சம்பாதிக்கலாம்.விருதுநகர் மாவட்டத்தில் அலங்கார மீன் வளர்ப்பினை ஊக்குவிக்கும் வகையில் அலங்கார மீன் வளர்ப்பு குறித்து தொழில்நுட்ப வளர்ப்பு முறைகளை அறிந்து கொண்டு, அலங்கார மீன் வளர்ப்பில் பெண்கள் ஈடுபடும் வகையில் விருதுநகர் மாவட்ட மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களை மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்கார மீன் வளர்ப்பு பண்ணைகளை நேரில் சென்று பார்வையிட்டு மீன் வளர்ப்பு குறித்து அறிந்து கொள்ள ஏதுவாக இன்று; அலங்கார மீன் வளர்ப்பு குறித்த பட்டறிவு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் முதற்கட்டமாக விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 50 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, இணை இயக்குநர்ஃதிட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு. ஜார்ஜ் மைக்கேல் ஆன்டனி, விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் திரு.கு.இராஜேந்திரன், உதவி திட்ட அலுவலர் திருமதி.வனிதா, மீன்வள ஆய்வாளர்கள் திருமதி அம்சா காந்தி மற்றும் திருமதி சுபானா, மகளிர் சுய உதவி உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,(04.09.2024) இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், சொக்கநாதன்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, 7.5 சதவிகித இடஒதுக்கீட்டில், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துகம் பயில தேர்வாகியுள்ள செல்வன் ஜெ.அரவிந்த் என்பவரை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.