25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 10, 2024

இரயில்வே துறை அமைச்சகத்தின் கீழ் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் வெளியிட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு நடைபெற்ற ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், இரயில்வே துறை அமைச்சகத்தின் கீழ் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் வெளியிட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு  விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு நடைபெற்ற ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (09.08.2024) தொடங்கி வைத்தார்.இரயில்வே துறை அமைச்சகத்தின் கீழ் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் மூலம்  வெளியிட்டுள்ள 7951 பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு  அறிவிக்கப்பட்டுள்ள போட்டித்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பயன்பெறும் வகையில் இந்த ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.போட்டித் தேர்வு என்பது பயிற்சி பெற்றவர்களுக்கும், மற்றவர்களுக்குமான ஒரு போட்டியாகும். வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றி பெறாதவர்களுக்கும் இடையில் உழைப்பு, படிப்பு ஆகியவற்றில் பெரியதாக வேறுபாடுகள் இருக்காது. ஆனால் அவர்கள் பெற்றிருக்கக் கூடிய மதிப்பெண்களில்  சிறு இடைவெளி தான் இருக்கின்றன.ஆனால் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு உள்ள தனித்தன்மை என்ன என்று எடுத்து பார்த்தால், சில நுணுக்கங்களை அவர்கள் கற்றுக் கொண்டிருப்பார்கள். அந்த நுணுக்கங்களை கற்றுக் கொள்ளவில்லை என்றால் மறுபடியும் அந்த தேர்வு எழுதுவதற்கு ஓராண்டு ஆகிவிடும். இதனால் கால தாமதமாகும். கல்லூரி படித்தவர்களில் அவர்களுடைய மிக முக்கியமான வாழ்க்கை காலகட்டத்தில் ஓராண்டு என்பது மிகவும் முக்கியமானதாகும்.சில நேரங்களில் அடுத்து அதற்காக தயார் செய்வதற்கான வாய்ப்பு இல்லாமல் கூட போகலாம். அதனால் தான் எந்த ஒரு இது மாதிரியான சிறப்பு வேலைக்கு சென்றாலும் ஒரு உயர் கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும் என்றாலும், போட்டித் தேர்வுகள் தயார் செய்யக்கூடிய மாணவர்களுக்கு பயிற்சி மிக முக்கியமானது. விளையாட்டு, படிப்பு என எந்த ஒரு போட்டிக்கும் சிறப்பான நுணுக்கங்கள் இருக்கும். அந்த நுணுக்கங்களை தாங்களாகவே தவறுகள் மூலம் கற்றுக் கொண்டு, தேர்ச்சி பெறுவதற்கு காலம் ஆகும்.அதற்கான கால விரையத்தை குறைக்க வேண்டும். இந்த பயிற்சியின் மூலம் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இப்பயிற்சிகள் மூலம் கவனக் குறைவு, தவறுகளை தவிர்த்தல் போன்றவைகள் பற்றி பயிற்சி அளிக்கும் போது அவர்கள் நல்ல முறையாக தேர்வு எழுத முடியும் என்பதற்காக தான் இந்த பயிற்சி.பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், கல்லூரி முடித்து போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கும் நான் முதல்வன் என்ற முக்கியமான திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சிகளை தமிழ்நாடு அரசு வழங்குகிறது.அதில் குறிப்பாக இத்திட்டத்தில் போட்டித் தேர்வுக்கு என்று தனி ஒரு அமைப்பு மூலமாக நான் முதல்வன் போட்டி தேர்வு பிரிவில் நிறைய பயிற்சிகள் வழங்குகின்றார்கள்.இந்தியா முழுவதும் ரயில்வே, எஸ்.எஸ்.சி, வங்கி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மூலமாக பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.இதில் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் நிறைய பேர் ஆங்கிலம் கணிதம் கடினமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். இந்த இடைவெளியை நாம் நீக்க வேண்டும் என்ற நோக்கில் இணையதள பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.குறிப்பாக தமிழ்நாடு அரசினுடைய வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, நான் முதல்வன் இணையதளம், அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ஆகியவற்றின் இணையதளம் மற்றும் யூ-டியூப் மூலம் நடத்தப்படும் 20 மணி நேர ஆங்கிலம், திறனறிவு உள்ளிட்ட வகுப்புகளில் பயிற்சி செய்யும் போது நீங்கள் நிறைய கற்றுக் கொள்ளலாம்.அதில் நீங்கள் அதிகமான வினாக்களுக்கு பதில் அளிக்கக் கூடிய அளவிற்கு இந்த பயிற்சிகள் உங்களுக்கு உதவி செய்யும். இன்றைக்கு நிறைய பேர் கடந்த ஆண்டு வெற்றி பெற்ற மாணவர்களை பார்க்கும்போது, முழுக்க இணைய வழியில் பயிற்சி செய்து இணைய வழியில் மாதிரி வினாத்தாள்களை எடுத்து அதில் முறையாக பயிற்சி எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆகையால் இதன் மூலமாக மூலமாக தெரிந்து கொள்ள வேண்டியது முறையாக நீங்கள் பயிற்சி பெற்று, அந்த பயிற்சியில் வழங்கக்கூடிய நுணுக்கங்கள் அடிப்படையில் கடினமாக உழைத்தால் நிச்சயமாக போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் ஒரு நாள் அடிப்படை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கு தேவையான இலவச பாடக்குறிப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார்.

Aug 10, 2024

மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் மாவட்டம், தேசப்பந்து மைதானத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மழைநீர் சேரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள்  (09.08.2024) துவக்கி வைத்தார்.பின்னர், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், அதிநவீன மின்னணு விளம்பரத்திரை வாகனம் மூலமாக மழைநீர் சேகரிப்பு தொடர்பான  குறும்படங்கள்/குறும்பாடல்கள் மூலம் பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின் படி, வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு,   தமிழ்நாடு  முழுவதும் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஆண்டுதோறும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படுகிறது.மழைநீர் சேகரிப்பு என்பது  மழைநீரை  வீணாக்காமல் சேமித்து வைப்பதாகும். மேலும், மழைநீரை சேமிப்பதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, வீடுகள் , நிறுவனம், கடைகள் , பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கட்டிடங்களில் வரும் மழைநீரை சேகரிப்பதால், கோடைகாலங்களில் வரும் தண்ணீர் பிரச்சினையை தவிர்க்க முடியும்.மேலும், திறந்தவெளிக் கிணறுகள் இல்லாத வீடுகளில் மொட்டை மாடியில் இருந்து கொண்டுவரப்படும் மழைநீரை சிறு கால்வாய் மூலம், வடிகட்டும் தொட்டிக்குள் பாய்ச்சுவதால், சிறு தொட்டிக்குள் மழைநீரைச் செலுத்தி சேகரிக்கவும், கிராமப்புறங்களில் கிணறுகள் மூலமும், தூர்வாரப்பட்ட குளங்கள் மூலமும் மழைநீர் சேகரிக்க முடிகிறது.  நம் மக்களிடையே பல்வேறு வகையான நோய்கள் அதாவது, காலரா, காய்ச்சல் , வயிற்றுபோக்கு, வயிற்றுவலி, இருமல், வாந்தி போன்ற நோய்கள் நீரின் மூலம் பரவுகின்றன.அதனை தடுப்பதற்கு, குடிக்கும் நீரை காய்ச்சி குடிக்க வேண்டும். திறந்த வெளியில் இருக்கும் நீரை குடிப்பதை  தவிர்க்க வேண்டும். வீட்டில் உள்ள பழைய டயர்கள் மற்றும் காலி பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள் ஆகியவற்றை சேர்த்து வைக்காமல் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி மழைநீர் மற்றும் சாக்கடை தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், மழைநீர் சேகரிப்பு தொடர்பான துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் திரு.த.கென்னடி மற்றும் உதவி நிர்வாகப் பொறியாளர்கள், இளநிலை நீர் பகுப்பாய்வாளர், பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 10, 2024

"தமிழ் புதல்வன்" பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டை(

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்  (09.08.2024) கோயம்புத்தூர் மாவட்டத்தில் சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் தமிழ் புதல்வன் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து,விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர்கள் துவக்கி வைத்து, 8431 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன், வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம், தமிழ்  பெருமிதம் புத்தகம் அடங்கிய "தமிழ் புதல்வன்" பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டை(Debit Card)களை வழங்கினார்கள்.தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக புதுமைப் பெண் திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போதைய சூழலுக்கேற்ப பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் சமூகநலன் மற்றும் மகளிர்; உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில்  அரசு பள்ளிகளில் 6 முதல் 12 - ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக ஒவ்வொரு மாணவியருக்கும் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டமானது தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்ற மாணவிகளும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயின்ற 5968 மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று மாதாந்திரம் ரூ.1000/- அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகின்றது.இதனை தொடர்ந்து, தற்போது ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும் தமிழ் புதல்வன் என்னும் மாபெரும் திட்டமானது 09.08.2024 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி அவர்களது கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இத்தகைய முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி அவர்கள் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழ்வார்கள். இத்திட்டத்திற்காக 2024-2025 ஆம் நிதியாண்டில் 360 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் 6 முதல் 12 - ஆம் வகுப்பு வரை அரசு மற்றும்  அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பயின்று, கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம் உள்ளிட்ட 50 கல்லூரிகளில் உயர்கல்வி பயின்று வரும் 8431 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/-உதவித்தொகை பெற்று பயனடையும் வகையில் இத்திட்டம்தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என  அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தார்கள்.

Aug 10, 2024

Coffee With Collector” என்ற 92-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (08.08.2024) சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலிருந்து  சிறந்து விளங்கக்கூடிய 30 கல்லூரி மாணவர்களுடனான ""Coffee With Collector”  என்ற 92- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ / மாணவியர்களுடன் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு,  92-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.கல்லூரி மாணவ மாணவர்கள் போட்டித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது  தொடர்பாக மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Aug 10, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.08.2024 அன்று காலை 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது

விருதுநகர் மாவட்டத்தில் ஆகஸ்ட்-2024 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 16.08.2024 அன்று காலை 11.00 மணியளவில்; விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.மேற்படி கூட்டத்தில், விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறுமாறு   மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள்   கேட்டுக் கொள்கிறார்கள்.

Aug 10, 2024

Coffee With Collector” என்ற 93-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (09.08.2024)  ராஜபாளையம் ஸ்ரீ ரமணா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலிருந்து  11 மற்றும் 12-ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 42 பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector”    என்ற 93- வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 93-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.12-ஆம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.

Aug 10, 2024

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு 25.08.2024-க்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் விருதுநகர் மாவட்டம் சார்பாக 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான போட்டிகளில் பல்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ ,மாணவியர், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட உள்ளது.மேலும், மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1  இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதல் முறையாக நான்காம் இடம் பெற்றவர்களுக்கும் மூன்றாம் பரிசிற்கு இணையாக வழங்கிட உள்ளது.இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும். விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணாக்கர்களுக்கும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணக்கர்களுக்கும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுப்பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களான நிரந்தரப் பணியாளர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விவரத்தினை http://sdat.tn.gov.in  என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்திடலாம்.போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள் 25.08.2024 ஆகும். இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். மேலும் விபரங்களுக்கு  மாவட்ட விளையாட்டு அலுவலகம் மற்றும் ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 95140-00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 10, 2024

வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக செயல்படுத்தி வரும் சொந்த நூலகங்களுக்கு விருது

சட்டமன்ற பேரவையில் 2024-ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கீழ்காணும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.தமிழ்நாடு அரசு வீடுதோறும் நூலகங்கள் அமைக்கவேண்டும்” என்ற உயரிய நோக்கத்தோடு மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடு தோறும் நூலகங்கள் அமைத்துச் சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களைக் கண்டறிந்து ஊக்குவித்து “சொந்த நூலகங்களுக்கு விருது” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.மேற்கண்ட அறிவிப்பின்படி, பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் செயல்படுத்தி வரும் நூலகங்களின் விவரங்களை நூல்களின் எண்ணிக்கை, எந்த வகையான நூல்கள், தங்களிடமுள்ள அரியவகை நூல்கள், நூலகம் எந்த ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது. வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள், நூலகத்தின் புகைப்படம் போன்றவற்றை 9442060835, 9894923725 என்ற  அலைபேசி எண்களிலும், dloviruthunagar@gmail.com என்ற இணையதள முகவரியிலும் தெரிவிக்கலாம். மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படுத்தி வரும் தனிநபருக்கு ”சொந்த நூலகங்களுக்கு விருது” விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் மூன்றாவது புத்தக கண்காட்சியில் வைத்து   மாவட்ட ஆட்சியர் அவர்களால் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் இல்லங்கள் தோறும் நூலகங்கள் அமைத்து வாசிப்பு பழக்கத்தை விரிவுபடுத்திட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Aug 10, 2024

சுதந்திரத தினமான 15.08.2024 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினமான 15.08.2024 - அன்று கிராம சபை கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். (01.04.2024 முதல் 31.07.2024 வரை) கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல். தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல். இணையவழி வரி செலுத்தும் சேவை குறித்து விவாதித்தல். இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் குறித்து விவாதித்தல். சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் குறித்து விவாதித்தல். தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு (TNPASS)  -குறித்து விவாதித்தல். தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியம்  - உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழு குறித்து விவாதித்தல். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து விவாதித்தல். தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) சுகாதாரம் குறித்து விவாதித்தல். ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதித்தல்.இதர பொருட்கள்  குறித்து விவாதித்தல்.எனவே, 15.08.2024 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 09, 2024

சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுக்குள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுக்குள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம்  3  ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டு மற்றும் தொழிற்சாலைக்கான கட்டிடங்கள் ) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு, மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும், அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.மேற்படி திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில்  14.08.2024 அன்று  பிற்பகல் 03.30 மணியளவில்  விருதுநகர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கத்தில் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் முனைவோர்கள், ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்கள், வளரும் தொழில் முனைவோர்கள் ஆகியோர் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 36 37 38 39 40 41 42 ... 74 75

AD's



More News