25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Mar 04, 2026

11 வட்டாரங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.

விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு மற்றும் காரியாபட்டி ஆகிய 11 வட்டாரங்களில் காலியாக உள்ள 23 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடம் பூர்த்தி செய்யப்பட உள்ளது.வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தகுதிகள்:1)     ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி மற்றும் MS Office-ல் குறைந்தது 03 மாத சான்றிதழ் வகுப்பு (Certificate Course) சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்.2) 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.3) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் SHG/PLF போன்றவற்றில் குறைந்தது 05 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.4) வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் பணியிடமுள்ள வட்டாரத்தின் எல்கை பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.(Residence in same block)5) இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். இருசக்கர வாகனம் நன்றாக இயக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.6) சிறந்த நன்னடத்தையுடன் இருக்க வேண்டும்.7) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டம்/புதுவாழ்வு திட்டம்/IFAD திட்டம் போன்றவற்றின் கீழ் பணிபுரிந்து நிரந்தர பணிநீக்கம்/தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவராக இருக்கக்கூடாது. விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்வதற்கான இணையதள முகவரி www.virudhunagar.nic.in 1) விண்ணப்பதாரர்கள் பிறந்ததேதி, பணிபுரிந்ததற்கான பணிஅனுபவச் சான்று,கல்வித் தகுதிச் சான்று, சாதிச் சான்று ஆகியவற்றின் ஒளிநகல் (Xerox Copy) கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.2) விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.3) தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலக வேலை நாட்களில், காலை 10.00 மணிமுதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலக வளாகம், விருதுநகர் அஞ்சல் 626 002, விருதுநகர் மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 06.03.2026 பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 03, 2026

நரிக்குடி ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 302 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியங்களில்  (02.03.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்களின் தலைமையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ்  நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 302 பயனாளிகளுக்கு ரூ.10.56 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.கலைஞர் கனவு இல்லம் திட்டம், 2030-க்குள் தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்ற கிராமப்புற ஏழைகளுக்கு இலவச கான்கிரீட் வீடுகளை வழங்கும் தமிழக அரசின் திட்டமாகும்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ரூ.35.38 கோடி மதிப்பில் 1011 வீடுகளும்,  2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.76.37 கோடி மதிப்பில் 2182 வீடுகளும், மேலும், கூடுதலாக 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.35 கோடி மதிப்பில் 1000 வீடுகளும் என மொத்தம் 4193 வீடுகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ரூ.1.82 கோடி மதிப்பில் 52 வீடுகளும்,  2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.9.66 கோடி மதிப்பில் 276 வீடுகளும், மேலும், கூடுதலாக 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.3.53 கோடி மதிப்பில் 101 வீடுகளும் என மொத்தம் 429 வீடுகளும்தொடர்ந்து, திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ரூ.91 இலட்சம் மதிப்பில் 26 வீடுகளும்,  2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.4.34 கோடி மதிப்பில் 124 வீடுகளும், மேலும், கூடுதலாக 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.3.50 கோடி மதிப்பில் 100 வீடுகளும் என மொத்தம் 250 வீடுகளும்,மேலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கு ரூ.5.18 கோடி மதிப்பில் 148 வீடுகளும்,  2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.8.50 கோடி மதிப்பில் 243 வீடுகளும், மேலும், கூடுதலாக 2025-2026 ஆம் ஆண்டிற்கு ரூ.3.53 கோடி மதிப்பில் 101 வீடுகளும் என மொத்தம் 492 வீடுகளுக்கும் வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து, இன்றைய தினம் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-2026 ஆம் ஆண்டில் கூடுதலாக வீடு கட்டுவதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ள 302 பயனாளிகளுக்கு ரூ.10.56 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான வேலை உத்தரவுகளை   நிதி,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Mar 03, 2026

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் 2026 - னை முன்னிட்டு அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், மற்றும் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி.

விருதுநகர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  (02.03.2026) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் 2026 - னை முன்னிட்டு அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், மற்றும் வாக்களிப்பதின் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு உறுதிமொழியினை (SVEEP)  மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா., I A S ., அவர்கள் தலைமையில் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், 01.01.2026 - ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளர்  பட்டியல் சிறப்பு  தீவிரத் திருத்தம்-2026- மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியலானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி  பிரதிநிதிகள் முன்னிலையில் 23.02.2026 அன்று வெளியிடப்பட்டது.அதனைத்தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தலில் அனைவரது பங்களிப்பினை உறுதி செய்திடவும், வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் “இந்திய குடிமக்களாகிய நாங்கள், ஜனநாயகத்தில் நிலையான நம்பிக்கை கொண்டு, நமது நாட்டின் ஜனநாயக மரபுகளையும் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலைநிறுத்தவும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி, மதம், இனம், சாதி, சமூகம் மொழி அல்லது எந்த தூண்டுதலாலும் பாதிக்கப்படாமல் வாக்களிக்கவும் இதன் மூலம் உறுதியளிக்கிறோம்.”என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள், கிராமப்புற செவிலியர்கள், பொதுமக்களுடன் இணைந்து ஏற்றுக்கொண்டார்.மேலும், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தைப் மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் தப்பாட்டம் வாயிலாகக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து, "எனது வாக்கு, எனது மாவட்டம், எனது பொறுப்பு" என்ற மையக்கருத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதல் கையெழுத்திட்டுப் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், வட்டாட்சியர்( தேர்தல்) திரு.சீனிவாசன், பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 03, 2026

மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள்  (02.03.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.2025-2026 ஆம் ஆண்டுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வானது விருதுநகர் மாவட்டத்தில் 99 தேர்வு மையங்களில் 9,855 மாணவர்களும், 11,715 மாணவியர்களும் மற்றும் தனித்தேர்வர்களாக  553 மாணவர்கள்  என ஆக மொத்தம் 22,123 பள்ளி மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்.தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சாரம் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடங்களில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இத்தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு மையங்களில் 103 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 103 துறை அலுவலர்கள், 1235 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு தேர்வுப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களைக் கொண்டு பறக்கும் படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு, தேர்வு மையங்களில் மாணாக்கர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடும், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் கோரிக்கைக்கேற்ப 146 பேர் சொல்வதை எழுதுபவர் பணிக்கு நியமிக்கப்பட்டு இவர்களுக்கு கூடுதல் நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆய்வு அலுவலர், ஊர்காவல் படைத்தலைவர் மற்றும் பிறத்துறை அலுவலர்களை கொண்டு மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் திடீர் ஆய்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.2025-2026 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் முழுதேர்ச்சி பெற வேண்டும் எனவும், அதிக மதிப்பெண்களை  பெற வேண்டும் எனவும் மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர். 

Mar 03, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தலைமையில் (02.03.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில், பல்வேறு விபத்துகளில் பெற்றோரை இழந்த 5 மாணவ/மாணவிகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் மதிப்பிலான காப்பீட்டுப் பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 02, 2026

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, வத்திராயிருப்பு நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அமையவுள்ள புதிய புறவழிச்சாலைத் திட்டத்திற்கு  வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள்  அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார். இத்திட்டமானது 2026-2027ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் (CRIDP) கீழ் செயல்படுத்தப்படுகிறது.இச்சாலையில் நீரோடைகள் மற்றும் குறுக்கீடுகளைக் கடக்க 25 பெட்டிப்பாலங்கள் (Box Culverts) மற்றும் 3 சிறு பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.போக்குவரத்து சீராக நடைபெற ஏதுவாக, டி-சந்திப்பு (T-Junction), நான்கு முனைச் சந்திப்பு மற்றும் மூன்று இடங்களில் ரவுண்டானாக்கள் (Roundabouts) என மொத்தம் 5 சந்திப்புகள் உருவாக்கப்படவுள்ளன.இத்திட்டத்தின் மூலம் வத்திராயிருப்பு, சதுரகிரி, கூமாபட்டி, கான்சாபுரம், அர்ஜுனாபுரம், புதுப்பட்டி, கிழவன்கோவில், பிளவக்கல் மற்றும் அத்திகோவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேரடியாகப் பயனடைவார்கள். குறிப்பாக சதுரகிரி போன்ற ஆன்மீகத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்குப் போக்குவரத்து எளிதாகும்.இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி, நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mar 02, 2026

விருதுநகர் மாவட்ட த்தில் உள்ள முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில், கல்லூரி மாணவ , மாணவியர்களுக்கு சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (27.02.2026) மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் இந்த நிதியாண்டில்  மூன்றாவது முறையாக கல்லூரி மாணவ / மாணவியர்களுக்கு சிறப்பு  கல்விக்கடன் வழங்கும் முகாம்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இம்முகாமில் கலந்துகொண்ட மாணவர்களில் 144 மாணவர்களுக்கு ரூ.8.49 கோடி கல்விக்கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார்.இம்முகாமில் மாவட்டத்திலுள்ள 200 தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கி கிளைகளின் மாவட்ட அளவிலான வங்கி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.அனைத்து வங்கிகள் சார்பாகவும் அரங்குகள் அமைக்கப்பட்டு கல்விக்கடன் தொடர்பாக விசாரிக்க வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்விக்கடன் சம்பந்தமான சந்தேகங்களை நிவர்த்திசெய்தனர்.மேலும் மாணவர்களிடம் நேரடியாக கல்விக்கடன் விண்ணப்பங்கள் வங்கிகளின் மூலம் பெறப்பட்டன. இந்த முகாமின் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வங்கிக்கிளைகளில் பரிசீலனை செய்யப்பட்டு, 20 நாட்களுக்குள் தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கடன் வழங்கப்படும் என்று மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அவர்கள் தெரிவித்தார்.நடப்பு நிதி ஆண்டிற்கு கல்வி கடன் இலக்காக ரூ.38.11 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் நமது மாவட்டத்திலுள்ள வங்கிகள் டிசம்பர் மாதம் வரை 1932 மாணவர்களுக்கு ரூ.37.68 கோடி கல்விக்கடனாக வழங்கி மாணவர்களுக்கு கடன் தொகை விடுக்கப்பட்டுள்ளது.இம்முகாமில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.சு.பாண்டிச்செல்வன் அனைத்து வங்கிகளின் மாவட்ட பிரதிநிதிகள்,  பெற்றோர்கள் மற்றும்  மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Mar 02, 2026

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழா.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய இடங்களில் (28.02.2026)  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில்,  நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அருப்புக்கோட்டை,சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரங்களைச் சேர்ந்த 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான, தமிழக அரசின் சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு இன்றைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரத்தில் உள்ள 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதன பொருட்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தையின் வளர்ச்சி, கருவாக உருவான நாளிலிருந்தே ஆரம்பமாகிறது. இதனை மனதிற்கொண்டு கர்ப்பிணி பெண்கள், கர்ப்பகாலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமான, அறிவான குழந்தையாக இருக்கும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறிவியல் பூர்வமான நிகழ்ச்சியாகும்.வசதி வாய்ப்பு குறைவால் இந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத குடும்பத்தில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த வாய்ப்பும் நன்மையும் கிடைக்காமல், அவர்களின் குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான திட்டம் இந்த வளைகாப்பு திட்டமாகும். சாதி மத வேறுபாடின்றி அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கர்ப்பகால பராமரிப்பு குறித்த தகவல்கள் கர்ப்பிணித் தாய்மார்களை சென்றடைய செய்து, அவர்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், கர்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறப்பதை உயர்த்துதல், குழந்தைகளின் பிறப்பு எடை 3 கிலோவாக இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் குறித்து விழிப்புணர்வு எற்படுத்துதல், மருத்துவமனையில் பிரசவம் பார்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியத்தை உணர்த்துதல், குழந்தைகளின் வளர்ச்சிப் படிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகப்பேறு உதவித் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தாய்ப்பாலின் அவசியம், நன்மைகள், இணை உணவின் அவசியம், குழந்தைகள் நோய் வாய்ப்படும் போது அளிக்கப்பட வேண்டிய கவனிப்பு போன்ற பல விவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் முன்னேறியிருக்கிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு கட்டணமில்லா பேருந்து, மகளிர் உரிமைத்தொகை, புதுமைபெண் திட்டங்கள் மூலம் மாதந்தோறும் ரூ.1000- வழங்குதல் உள்ளிட்ட பெண்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.அதன் ஒரு பகுதியாக இன்று அருப்புக்கோட்டை, சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரங்களைச் சேர்ந்த 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.எனவே, இந்த வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட வருங்கால சந்ததியரை உருவாக்கும் அனைத்து கர்ப்பணிதாய்மார்களும், இந்த கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமான குழந்தைகளை பெற்று, வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என  வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்.இவ்விழாவில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர்  திருமதி இராஜ ராஜேஸ்வரி, அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர் திருமதி சுந்தரலட்சுமி சிவப்பிரவேசம்,  சாத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.குருசாமி,  குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி சண்முகசுந்தரி,   உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் பலர் கலந்து கொண்டனர்.

Mar 02, 2026

ரூ.6.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய திருச்சுழி ஊராட்சி ஒன்றிய பேருந்து நிலையத்தை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் (28.02.2026) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில்   ஒட்டுமொத்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.6.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளபுதிய திருச்சுழிஊராட்சி ஒன்றிய பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள்   திறந்து வைத்தார்.திருச்சுழி ஒன்றியப்பகுதியில் நீண்ட நெடுங்காலமாக மக்களுடைய கோரிக்கையாக இருந்து வந்த பேருந்து நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.திருச்சுழி பகுதியானது இன்றைக்கு வேகமாக முன்னேற்றம் காணக்கூடிய வளர்ந்து வரும் தொகுதியாக இருந்து வருகிறது. ஒரு காலத்தில் சாலைகள் இல்லாமல் இருந்த இந்த பகுதி, தற்போது ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரங்களுக்கு இடையில் மாவட்ட சாலைகள் மற்றும் மாநில நெஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.திருச்சுழி தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மருத்துவமனை, தொழிற்பயிற்சி நிலையம், சமூக சுகாதாரக் கூடங்கள், மகளிர் காவல் நிலையங்கள் என அனைத்து வசதிகளிலும் முன்னேறி இருக்கக்கூடிய பகுதியாக மாறி வருகிறது. திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.6.18 கோடி மதிப்பில் 1097.22 சதுர மீட்டர் பரப்பளவில் பேருந்து நிற்கும் இடம், கடைகள், ஓய்வறை, மழைநீர் வடிகால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, இருசக்கர வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ஊராட்சி ஒன்றிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியில் சாலைகளாக இருந்தாலும் சரி, குடிநீராக இருந்தாலும் சரி அல்லது ஒவ்வொரு கிராமங்களுக்கும் இருக்கக்கூடிய அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் என அனைத்தையும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.இதுபோன்ற மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என  அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) வீ.கேசவதாசன்,  உதவி செயற்பொறியாளர் திருமதி அனிதா, முன்னாள் திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.பொன்னுத்தம்பி,   முக்கிய பிரமுகர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,  உள்ளாட்சி பிரதிநிதிகள், உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Mar 02, 2026

நெடுஞ்சாலைத்துறை சார்பில், மல்லாங்கிணர் நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணரில்  (28.02.2026) நெடுஞ்சாலைத்துறை சார்பில்,  ரூ.39.95 கோடி மதிப்பில் மல்லாங்கிணர் நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில்,   நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள்  அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான  ஆட்சியில் எண்ணற்ற சமுதாய முன்னேற்றத்திற்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்பதை நாம் அறிவோம்.ஒரு சமுதாயம் என்றிருக்கின்ற போது  அதில் பல்வேறு தரப்பு மக்கள் இருப்பார்கள். அதில் அடித்தட்டு நிலையில் உள்ள மக்களை கை தூக்கி விடுவது தான் ஒரு சிறந்த அரசாங்கத்திற்கு  இலக்கணமாக இருக்க முடியும்.அதுவும் குறிப்பாக பெண்கள் நம்முடைய சமுதாயத்திலே மிக கவனமாக அவர்களுடைய உயர்வினை கையாள்வது ஒவ்வொரு அரசுக்கும் மிக மிக முக்கியம். பெண்கள் நலத்திட்டங்கள் என்றால் பொதுவான திட்டங்களை தாண்டி அவர்கள் பொருளாதாரத்திலேயே தற்சார்பை பெற வேண்டும், யார் கையையும் எதிர்பார்த்து இருக்க கூடிய சூழ்நிலையில் இருக்கக் கூடாது. அவர்கள் சுயதொழில் செய்து முன்னேற வேண்டும் என்கின்ற பல்வேறு திட்டங்களுக்கு மத்தியில் நம்முடைய  முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த மகத்தான திட்டம் கலைஞர் மகளிர் உரிமை திட்டம்.இன்றைக்கு தமிழ்நாட்டிலேயே ஒரு கோடி 31 இலட்சம் மகளிர்கள் இந்த திட்டத்தில் பயன் பெறுகிறார்கள்.ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருந்த முதலமைச்சர் அவர்கள், திடீரென்று  இன்ப அதிர்ச்சியாக நம்முடைய மகளிர்களுக்கு ரூ.5000  முன்பணமாக வழங்கி உங்களை கௌரவப்படுத்தினார்கள்.சமூக நலத்திட்டங்களை  நிறைவேற்றுவதில் எந்த அளவிற்கு இந்த அரசு ஆர்வம் காட்டுகிறதோ, அதே போல ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றுவதிலும் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்  தனி கவனம் செலுத்தி வருகிறார்கள்.அப்படி பல துறைகளை நாம் எடுத்துச் சொல்ல முடியும்.மக்களுடைய அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு நம்முடைய இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் மல்லாங்கிணறு பேரூராட்சியில் எண்ணற்ற திட்டங்களை நாம் நிறைவேற்றி இருக்கின்றோம். குளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. மல்லாங்கிணர்  பெரியகுளம் கண்மாய்க்கும், மல்லாங்கிணரை சுற்றி இருக்கக்கூடிய    கிராமங்களில் நாம் இன்றைக்கு பாசன வசதிகளை கொண்டு வருவதற்காக சென்னம்பட்டியினுடைய வலது பிரதான கால்வாய் சீரமைக்கப்பட்டு ஏறத்தாழ 40 வருடங்களுக்குப் பிறகு தண்ணீர் கொண்டு வரக்கூடிய முயற்சியில் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம்.அந்த வகையில் நம்முடைய நீண்ட கால கோரிக்கையாக இருந்த  மல்லாங்கிணரில் இருந்து விருதுநகருக்கும் காரியாபட்டிக்கும் செல்லக்கூடிய சாலை ஒரு காலத்தில் இந்த சாலையை பார்த்தோம் என்று சொன்னால் மிகுந்த போக்குவரத்துக்கு சிரமமான சாலையாக இருந்தது. கலைஞர் அவர்களுடைய  தலைமையிலான ஆட்சி அமைந்த பொழுது தான், இந்த சாலையை 7 மீட்டர்  சாலையாக  அகலப்படுத்தினோம். இன்றைக்கு கலைஞருடைய மகன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்  ஆட்சியில் தான் அந்த ஏழு மீட்டர் சாலை என்பது 10 மீட்டர் சாலையாக இன்னும் அகலப்படுத்தி அந்த பணிகள் நடைபெற்றுக் கூறிக் கொண்டிருக்கின்றது.காரணம் ஊர் வளர்ந்து கொண்டிருக்கின்றது. நம்முடைய கிழக்குப்  பகுதியான  காரியாபட்டி, மாவட்ட  தலைநகராக இருக்கக்கூடிய  விருதுநகரை இணைக்கக்கூடிய ஒரு  கேந்திரமான சாலையில் அமைந்திருக்கக் கூடிய ஒரு பேரூராட்சி இது.வருங்கால போக்குவரத்தை நாம் கருத்தில் கொண்டு அதை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டபோது, முதலமைச்சர் அவர்களும்,  நெடுஞ்சாலை துறை அமைச்சர் அவர்களும் மிகுந்த அன்போடு ஏறத்தாழ 16 கிலோமீட்டர் இருக்கக்கூடிய அந்த சாலையை ஏறத்தாழ ரூபாய்  55 கோடி  ஒதுக்கப்பட்டு அந்த பணிகள் நடந்து கொண்டிருப்பதை நாம் காண முடியும்.  மல்லாங்கிணர் ஊருக்குள் செல்லும் பொழுது காலையில் போக்குவரத்து நெரிசல் இருப்பதை நான் பார்க்கிறோம். இந்த வழியாக செல்லக்கூடிய கனரக வாகனமாக இருந்தாலும்,  பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் காலை மாலை வேலைகளிலே  போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இன்றைக்கு இப்படி இருந்தால் வரக்கூடிய காலங்களில் எப்படி ஊர் விரிவடைந்து கொண்டே போகின்ற பொழுது  ஒரு  புறவழிச் சாலை தேவை என்று நாம் நம்முடைய முதலமைச்சர் அவர்களிடம் கேட்டபோது   அதற்கும் உடனடியாக ஆணைகளை வழங்கி, ஏறத்தாழ 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஏறத்தாழ ரூ.40 கோடி  செலவில் இன்றைக்கு பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.எனவே  மல்லாங்கிணரை மையப்படுத்தி  சாலை வசதிக்காக மட்டும் ஏறத்தாழ ரூ.100 கோடி வழங்கப்பட்டிருக்கிறது என்பது மிகவும் முக்கியம்.நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி தொகுதி என்பது மாபெரும் வளர்ச்சியை கண்டு வருகிறது. குடிநீர் வழங்கும் பணிகளுக்கு ஏற்கனவே தாமிரபரணியில் இருக்கக்கூடிய தண்ணீரை தாண்டி ரூபாய் 75 கோடி  செலவில்  மல்லாங்கிணர்   பேரூராட்சியில் இருக்கக்கூடிய கிராமங்களுக்கும், காரியாபட்டி  பேரூராட்சியில் இருக்கக்கூடிய கிராமங்களுக்கும் புதிதாக குடிநீர்  திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது.அந்த பணிகள் இப்பொழுது முழுமையாக முடிவடைந்து இருக்கிறது. வரக்கூடிய  சில நாட்களில் வைகையில் இருந்து வரக்கூடிய தண்ணீரும் நம்முடைய பகுதி மக்களை வந்து அடைவதற்குரிய திட்டத்தினை நாம் இன்றைக்கு முழுமையாக மக்களுக்கு ஒப்படைக்க காத்திருக்கிறோம்.குடிநீராக, சாலை, போக்குவரத்து அடிப்படை வசதிகளாக இருந்தாலும்   இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்திருக்கக் கூடிய ஒரு அரசாக நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய அரசு இருக்கிறது. இந்த திட்டங்களை எல்லாம் செய்வதற்கு அடிப்படை காரணம் ஒரே ஒருவர் நான் அவர் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக இருக்கக்கூடிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தான்.எனவே  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றும் ஆதரவோடு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி, மல்லாங்கிணர் பேரூராட்சி தலைவர்  திரு.துளசிதாஸ், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 ... 37 38 39 40 41 42 43 ... 140 141

AD's



More News