25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jul 05, 2024

விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் நீர்நிலைகளிலிருந்து கட்டணமில்லாமல் வண்டல் மண் / களிமண் எடுக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு வட்டத்தில் 49 நீர்நிலைகளும், சிவகாசி வட்டத்தில் 11 நீர்நிலைகளும், இராஜபாளையம் வட்டத்தில் 44 நீர்நிலைகளும், காரியாபட்டி வட்டத்தில் 16 நீர்நிலைகளும், திருச்சுழி வட்டத்தில் 47 நீர்நிலைகளும், விருதுநகர் வட்டத்தில் 13 நீர்நிலைகளும், சாத்தூர் வட்டத்தில் 28 நீர்நிலைகளும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 46 நீர்நிலைகளும்;, அருப்புக்கோட்டை வட்டத்தில் 17 நீர்நிலைகளும், வெம்பக்கோட்டை வட்டத்தில் 12 நீர்நிலைகளும் என மொத்தம் 283 நீர் நிலைகள் தகுதி வாய்ந்த நீர் நிலைகளாக கண்டறியப்பட்டு விருதுநகர் மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.4, நாள்:29.06.2024 மற்றும்; மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.5, நாள்:01.07.2024-ன்படி அனுமதி அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே, விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் மேற்குறிப்பிட்டுள்ள அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள தகுதி வாய்ந்த நீர்நிலைகளிலிருந்து கட்டணமில்லாமல் வண்டல் மண் / களிமண் எடுக்க அனுமதி வேண்டி tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே இணைய வழியில் அனுமதி பெற்று பயன்பெறலாம் என மவாட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 05, 2024

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை

2024-ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களான விருதுநகர் / அருப்புக்கோட்டை / சாத்தூர் / திருச்சுழி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி பயிற்சியாளர்கள் சேர்க்கை (Spot Admission)  01.07.2024 முதல் 15.07.2024 வரை நடைபெறுகிறது.ஏற்கனவே விண்ணப்பித்து ஒதுக்கீடு கிடைக்கப்பெறாதாவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவ/ மாணவிகள், அரசு நிர்ணயித்துள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவுகளான1. Fitter                 2. Industrial Robotics and Digital manufacturing Technician3. Turner                 4. Fire Technology and Industrial Safety Management5. Machinist    6. Refrigeration and Air Conditioning Technician7. Wireman      8. Interior Design and Decoration9. Welder    10. Motor Mechanic Vehicle11. Surveyor        12. Mechanic Electric Vehicle   13. Advanced CNC Mechanic Technician ஆகிய பயிற்சிகளுக்கு  தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை அணுகி நேரடி சேர்க்கை மூலம் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து கொள்ளலாம்.பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு விலையில்லா சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக்கருவிகள், காலணி, பஸ் பாஸ் வழங்கப்படும். மேலும் மாதந்திர உதவித்தொகை ரூ.750/- மேலும் அரசு பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மூவலூர் இராமமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை வழங்கப்படும்.  மேலும், பயிற்சி முடித்தபின், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 04, 2024

சர்வதேச நெகிழி பை இல்லா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் ஷத்திரிய வித்யாசாலா நூற்றாண்டு பள்ளியில் மாவட்டம் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம்  சர்வதேச நெகிழி பை இல்லா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S அவர்கள்  (03.07.2024) துவக்கி வைத்தார்.சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் என்பது ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 3ம் தேதி சர்வதேச பிளாஸ்டிக் பை இல்லாத தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்,  நிலையான மாற்றுகளைப் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதும் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், இன்று நெகிழி பை பயன்பாட்டை ஒழித்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு  இல்லாத துணிப்பையின் உபயோகத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பள்ளி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை   மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.இப்பேரணியில் 300 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு மாசினை குறைப்போம், சுற்றுச்சூழலை காப்போம் துணிப்பை என்பது எளிதானது, தூர எறிந்தால் உரமாகுது போன்ற விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, முக்கிய வீதிகள் வழியாக, பாண்டியன் நகர் தபால் நிலையம் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இப்பேரணியில், மீண்டும் மஞ்சப்பை திட்டம் மூலம், நெகிழி பயன்பாட்டை தவிர்த்து, அதற்கு மாற்றாக துணிப்பைகளை உபயோகிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், மஞ்சப்பைகளை மாணவ, மாணவிகளுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (தமிழ்நாடு மாசுக்கட்டுபாடு வாரியம்) திரு.ராமராஜ், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jul 04, 2024

பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் தேர்வைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் தேர்வைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் (03.07.2024) தலைமையில் நடைபெற்றது. இந்த போதைப் பொருட்கள் என்பது உடலில் வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு தற்காலிக மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. போதை பொருட்களில் இருந்து நமக்கு மகிழ்ச்சி வருவதில்லை. போதைப் பொருட்களை உட்கொள்வதால் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய விரும்பத்தகாத மாற்றங்களா அந்த மகிழ்ச்சி வருகிறது.துருவப்பகுதிகளில் வாழும் மனிதர்களுக்கு உணவுப்பொருட்கள் எளிதாக கிடைப்பதில்லை. அவர்கள் நெடுதூரம் சென்று வேட்டையாடி உணவினை பெறுவது கடினம். அதற்கு ஒரு நுட்பத்தை கையாண்டு வேட்டையாடுகின்றனர். கூர்மையான கத்தியின் மீது பனிக்கட்டியினை வைத்து, அதன் மீது மற்ற விலங்கின் இரத்தத்தை ஊற்றி விடுவார்கள். அதை அந்த விலங்கு இரத்தம் என நினைத்து சாப்பிடும் போது, அதன் நாக்கு கூர்மையான கத்தியினால் அறுபட்டு, இரத்தம் வரும். அப்படி வரக்கூடியது தன்னுடைய இரத்தம் என அறியாமலேயே அதனை சுவைக்கும் போது, முழுவதுமாக இரத்தம் வெளியேறி இறந்து விடும். இதை ஒரு மனிதன் பயன்படுத்தக்கூடிய போதைக்கு உதாரணமாக கூறலாம்.இரத்தம் எவ்வாறு விலங்கிற்கு சுவையாக இருக்கிறதோ அதே போல் போதைப்பொருட்களிலிருந்து வரும் இன்பம் என்பது அந்த போதைப்பொருட்களினால் கிடைக்கக்கூடிய இன்பம் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. அது உங்கள் உடலில் உள்ள வேதி மாற்றங்களால் உங்கள் உடல் உறுப்புகள் சிதைந்து, உங்களுடைய பொருளாதாரம் அழிந்து, அதன் மூலமாக வரக்கூடிய இன்பம் தான் போதைப்பொருட்களுக்கான இன்பம் ஆகும்.எனவே, இந்த போதைப் பொருளுக்கு எதிரானவர்களாக மாணவர்கள் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டும். இந்த மகிழ்ச்சியை விட நாம் அனுபவிப்பதற்கு உலகம் முழுவதும் மகிழ்ச்சிகள் நிறைய இருக்கின்றன. நீங்கள் புதிதாக பிடித்த ஒரு செயலை செய்கின்ற போதும், விளையாட்டு, கலை, இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வம் இருந்தால் அதில் ஈடுபடும் போதும், பொழுது போக்கான மலை ஏறும் பயிற்சி மேற்கொள்ளுதல், பிடித்த இடங்களுக்கு பயணம் செய்தல் போன்றவைகள் மூலம் நிறைய மகிழ்ச்சிகளை பெற முடியும். அப்படிப்பட்ட மகிழ்ச்சிகளை நீங்கள் புரிந்து கொண்டு, போதைப் பொருட்கள் மூலம் கிடைக்கக்கூடிய தற்கால மகிழ்ச்சிகளை ஒதுக்கக்கூடிய, அவற்றை நீங்கள் சமூகத்திற்கு எடுத்துச் சொல்ல கூடியவர்களாக இருக்க வேண்டும்.மேலும், 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்றிலிருந்து ஒன்பது மாதத்தில் பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது.தமிழ்நாட்டில மருத்துவம், பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், அறிவியல், மீன்வளம் சார்ந்த அரசு கல்லூரிகளில் உள்ள ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இடங்களில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவச் செல்வங்களுக்கு 7.5 சதவிகித இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.இந்த இடங்களுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் மற்ற ஒதுக்கீடுகளை விட குறைவாக இருக்கும். தமிழ்நாட்டினுடைய தலைசிறந்த அரசு கல்லூரிகளில் சென்று சேர வேண்டும் என்றால் இதெல்லாம் மிகப்பெரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பு எவ்வளவு பெரியது என்பதை நிச்சயமாக இங்கு இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தெரிவதில்லை. ஆனால் இது குறித்து, ஒரு மருத்துவம் அல்லது பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வில் ஓரிரு மதிப்பெண்கள் வித்தியாசத்தில் வாய்ப்பை தவற விட்ட மாணவர்களுக்கு தான் தெரியும். இது குறித்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்.

Jul 04, 2024

முற்கால பாண்டியர்களின் குடவரை கோவிலினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் செவல்பட்டியில் (03.07.2024) கி.பி 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட முற்கால பாண்டியர்களின் குடவரை கோவிலினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப.ஜெயசீலன், I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு ஆய்வு செய்தார்.

Jul 04, 2024

சிறந்த மருத்துவர்களுக்கான விருது பெற்ற மருத்துவ அலுவலர்களை ஆட்சித்தலைவர் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  (02.07.2024) உலக மருத்துவர் தினம் -2024 முன்னிட்டு, மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்களால் சிறந்த மருத்துவர்களுக்கான விருது பெற்ற கன்னிச்சேரி புதூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு மரு.பி.ஆரோக்கிய ரூபன் ராஜ்,தாயில்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் மரு மரு.சி.செந்தட்டிக்காளை  அவர்களை . மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

Jul 04, 2024

கால்நடை பராமரிப்புத்துறை- ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் மூலம் மானிய விலையில் பசுந்தீவனப் பயிரிட விண்ணப்பிக்கலாம்

கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது மிகவும்இன்றியமையாதது.கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 70 விழுக்காடு தீவன மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது.  ஆகவே, தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.      அதன்படி நடப்பு நிதியாண்டில், ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் 2024-2025-ன் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 225 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கால்நடை வளர்ப்போர் பயன் பெறும் பொருட்டு நீர்ப்பாசன வசதி கொண்ட தென்னை, பழத்தோட்டங்களில் 0.5 ஏக்கர் முதல் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர்களான தீவன சோளம், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், பல்லாண்டு பயிர் வகைகள், பல்லாண்டு தீவன புல் வகைகளில் ஏதேனும் ஒன்றை ஊடுபயிராக பயிரிட்டு மூன்று வருட காலம் பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3000-/மும், ஒரு ஹெக்டேருக்கு ரூ.7500/- வரை மானியமாக வழங்கப்படவுள்ளது.  மேலும், இத்திட்டத்தில், சிறு, குறு விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  மேற்காணும், திட்டத்தின் மூலம், பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில், ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள, கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி எழுத்து மூலமாக விண்ணப்பத்தை வருகிற 20.07.2024-க்குள் அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 03, 2024

கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கல்லூரியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கல்லூரியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி (01.07.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.2024-25 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி வாய்ப்புகள் நுழைவு தேர்வுகளுக்கு தங்களை எவ்வாறு தயார் செய்வது கொள்வது என்பது குறித்த வழிகாட்டுதல் வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளி விரிவுரையாளர்கள் (ம) ஆசிரியர்கள் மூலம் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் தலா 2500 மாணவர்கள் வீதம் 7 நாட்கள் சுமார் 17,398 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி 26.06.2024 அன்று தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.ஐந்தாம் கட்டமாக இன்று கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கல்லூரியில், விருதுநகர் கல்வி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள், நீட், கிளாட், ஜே.இ.இ, மத்திய பல்கலைக்கழக சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளைஎவ்வாறு எதிர்கொள்வது, அதற்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது, அதற்கான கட் ஆப் மதிப்பெண்கள், உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.மதிப்பெண்கள் எடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட எடுத்த மதிப்பெண்கள் மூலம் கிடைக்கும் வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு மாணவர்களுக்கு இருக்க வேண்டும்.ஆனால், நீங்கள் எடுக்கக்கூடிய சிறிய முயற்சியில் மிகப் பெரிய வாய்ப்புகள் இருக்கின்றது. நீங்கள் எந்த துறையில் சேர்ந்து படித்தாலும் அதில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.ஐஐடி, நீட், கிளாட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு தயார் செய்வது என்பது மிகப்பெரிய காரியம் அல்ல. வருடத்திற்கு 100 மணி நேரம் ஒதுக்கி அதை தொடர்ச்சியாக முயற்சி செய்தாலே போதும். ஆனால் இதனை ஆரம்பிப்பது எளிதாக உள்ளது. ஆனால் அதனை பெரும்பாலான மாணவர்கள் தொடர்ச்சியாக செய்வதில்லை.இதனை வள்ளுவர் உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர் என்ற குறள் மூலம் யார் தன் நோக்கத்தோடு செயல்படாமல் ஒரு செயலை ஆரம்பித்துவிட்டு, பாதியில் விட்டு தோல்வியடைந்தவர்கள் பல பேர் என குறிப்பிடுகிறார். திறமை என்று தனியாக எந்த ஒரு உணர்வுகளும் இல்லை. ஒரு செயலை தொடர்ச்சியாக செய்து, அதன் மூலமாக வெற்றியடைவதே திறமை.7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் செல்ல கட் ஆப் மதிப்பெண்கள் என்னென்ன, பாடம் வாரியாக எத்தனை மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று ஆராய்ந்து செயல்பட வேண்டும். நீங்கள் செய்கின்ற சிறு முயற்சிகள் மூலமாக உங்களுடைய குடும்பம் கடினமான பொருளாதார நிலையில் இருந்து மிகவும் உயர்ந்த பொருளாதாரம் நிலைக்கு உயர முடியும்.இன்னும் நிறைய பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நிறைய செலவு செய்தால் தான் உயர் கல்வி படிக்க முடியும் என்ற கற்பிதங்கள் உள்ளன. மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. உயர்கல்வி பயில்வதற்கு அரசு நலத்திட்டங்களும், உதவிகளும், கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீடு, பெண்களுக்கு புதுமை பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது. அரசு கல்லூரியில் படிக்க வருபவர்களுக்கு சில ஆயிரங்களில் மட்டும் தான். அதிலும் அவர்களுக்கு உதவித்தொகையும் கிடைக்கின்றன. இந்த அரசு திட்டங்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அதனை பெறுவதற்கு முதலில் மதிப்பெண்கள் எவ்வளவு பெற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நுழைவுத் தேர்வு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சிகளை மேற்கொண்டீர்கள் என்றால், இது போன்ற வாய்ப்புகளை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அப்படி வாய்ப்புகளை பெற்று கல்வியின் மூலமாக சிறந்த உயரங்களை அடைவதற்கான மாணவ, மாணவிகளாக நீங்கள் வரவேண்டும். வாழ்க்கையில் வெற்றி அடைவதற்காக பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. இருப்பதிலேயே மிகவும் எளிதான வாய்ப்பு என்பது என்பது 12-ம் வகுப்பு படிக்கும் போது ஓரளவிற்கு முயற்சி செய்து நன்றாக படித்து, இந்த கல்வியின் மூலமாக கடின உழைப்பின் மூலமாக நீங்கள் பெறக்கூடிய வாய்ப்புகள் தான் வாய்ப்புகளிலேயே மிக எளிய வாய்ப்பு. இந்த நிகழ்ச்சியை நீங்கள் பயன்படுத்தி உங்களுடைய வாய்ப்புகளை தெரிந்து கொண்டு அந்த இலக்கை அடைந்து வெற்றியாளர்களாக மாற வேண்டும் என தெரிவித்தார்.

Jul 03, 2024

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் (02.07.2024) நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், கீழசேகரநல்லூர் ஊராட்சி மேலகண்டமங்களம் கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.25.64 இலட்சம் மற்றும் ரூ.47 இலட்சம் மதிப்பீட்டில் இரண்டு சிறுபாலங்கள் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு, பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.அதனை தொடர்ந்து, கீழகண்டமங்களம் ஊராட்சி சித்தலக்குண்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.12.73 இலட்சம் மதிப்பில் புணரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளியில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு எளிதாக பாடங்களை புரிந்து கொள்ளும் வகையில் வில்லுப்பாட்டு மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருவதை பார்வையிட்டார்.பின்னர், கொட்டம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.3.57 இலட்சம் மதிப்பில் புணரமைப்பு பணிகள்  செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அங்கு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

Jul 03, 2024

‘Coffee With Collector” என்ற 74-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (02.07.2024) விருதுநகர் பி.எஸ்.சிதம்பர நாடார் பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பிலிருந்து சிறந்து விளங்கக்கூடிய 40 பள்ளி மாணவர்களுடனான "Coffee With Collector”  என்ற 74-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள்  மாணவிகளுடன் கலந்துரையாடினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 74-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு அனைத்து நுழைவு தேர்வுகளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் எந்த படிப்பு சேரவேண்டும் என்பதை முடிவு செய்து விடா முயற்சியுடன் படிக்க வேண்டும். மருத்துவ படிப்பு சேர விரும்பும் மாணவர்கள் நுழைவு தேர்வை மனதில் வைத்து படிக்க வேண்டும். மேலும் நீட் தேர்வில் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் மதிப்பெண்களை வழங்குகிறது. அதே நேரத்தில், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் மதிப்பெண் கழிக்கப்படுகிறது. இதனை  மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.12-ஆம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.12-ஆம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

1 2 ... 38 39 40 41 42 43 44 ... 69 70

AD's



More News