விருதுநகர் மாவட்டம் பள்ளி குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்படுத்தும் நோக்கில் பழங்கள், சிறுதானியங்கள், காய்கறிகளை வழங்க விரும்பும் நன்கொடையாளர்கள் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுகி நன்கொடை வழங்கலாம்
விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஊரகப் பகுதியில் உள்ள 768 அரசு தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 15.07.2024 முதல் ஊரகப் பகுதியில் 255 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மொத்தம் 45,583 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.இத்திட்டத்தில் குழந்தைகளுக்கு தரமான சுவையான காலை உணவு வழங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
சிறுதானியங்கள் அடங்கிய உணவு வகைகள் மற்றும் வாழைப்பழம், கொய்யாப்பழம் போன்ற அந்தந்த பருவ காலங்களில் பழங்களை குழந்தைகளுக்கு வழங்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. தன்னார்வலர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், புரவலர்களின் பிறந்த நாள் போன்ற சிறப்பு நாட்களில் குழந்தைகளுக்கு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உ,ள் ஊரில் கிடைக்கக்கூடிய சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு மற்றும் வாழைப்பழம், கொய்யாப்பழம் போன்ற பருவ காலங்களில் கிடைக்கும் பழங்களை வழங்கவும், சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை வழங்கி குழந்தைகளின் ஊட்டச்சத்தினை மேம்படுத்திட முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பள்ளிகளுக்கு பழங்கள், சிறுதானியங்கள், காய்கறிகளை நன்கொடையாக வழங்க விரும்பும் நன்கொடையாளர்கள் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுகுமாறும், இத்திட்டத்தினை தலைமை ஆசிரியர்கள் கண்காணித்து குழந்தைகளின் ஊட்டச்சத்து மேம்படுவதை உறுதி செய்யுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I.A.S. அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply