வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் மற்றும் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் விண்ணப்பங்களை 18.01.2026 வரை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் ஆகியவற்றில் அளிக்கலாம்.
2026-ஆம் ஆண்டு சனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி 04.11.2025 முதல் நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முன்பாக 27.10.2025 அன்று இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,31,157 வாக்காளர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2,43,752 வாக்காளர்களும், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2,41,074 வாக்காளர்களும், சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் 2,43,782 வாக்காளர்களும், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் 2,26,140 வாக்காளர்களும், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 2,22,248 வாக்காளர்களும், திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் 2,18,332 வாக்காளர்களும், ஆக மொத்தம் 16,26,485 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவருக்கும் கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு, 14.12.2025 வரை பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்ட படிவங்கள் அதற்கான செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு (19.12.2025) வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,01,901 வாக்காளர்களும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2,13,655 வாக்காளர்களும், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2,18,801 வாக்காளர்களும், சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் 2,14,544 வாக்காளர்களும், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் 1,90,824 வாக்காளர்களும், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,98,996 வாக்காளர்களும், திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் 1,97,790 வாக்காளர்களும், ஆக மொத்தம் 14,36,521 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும், நிரந்தர முகவரி மாற்றம், தொடர்பு கொள்ள இயலாதவர்கள், இறப்பு, இரட்டைப் பதிவு இனங்கள் மற்றும் இதர காரணங்களுக்காக 1,89,964 வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்த கணக்கெடுப்புப் படிவங்களைப் பெற இயலாத நிலையில் அவர்களது பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் விபரங்களை https://erolls.tn.gov.in/asd/ என்ற வலைதளத்தின் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தின் மூலம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெயர் சேர்க்கப்படாதவர்களின் பட்டியல்களை பார்த்துக் கொள்ள இயலும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலராலும் நடத்தப்பட்ட கூட்ட விபரத்தையும் இந்த வலைதளத்தின் மூலம் பார்க்க இயலும்.வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் மற்றும் 01.01.2026 அன்று 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்கு படிவம் 6 -ல் விண்ணப்பங்களை 18.01.2026 வரை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் ஆகியவற்றில் அளிக்கலாம்.
அதே போன்று வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-8 ல் விண்ணப்பம் அளிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள ஒருவரது பெயரை நீக்கம் செய்ய வேண்டியிருப்பின் படிவம்-7 ல் விண்ணப்பம் அளிக்கலாம். இந்த விண்ணப்பங்களை https://voters.ec.gov.in என்ற வலைதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பமாகவும் பதிவு செய்யலாம். மேலும், 2026 -ம் ஆண்டில் ஏப்ரல்-1, ஜூலை-1, அக்டோபர்-1 ஆகிய எதிர்வரும் தகுதி ஏற்படுத்தும் நாட்களில் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் தற்போதே படிவம்-6 ல் முன்கூட்டிய விண்ணப்பத்தை அளிக்க இயலும். இவ்விண்ணப்பங்கள் அந்தந்த தகுதி ஏற்படுத்தும் நாட்களில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.விருதுநகர் மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1901 ஆக இருந்த நிலையில், ஒரு வாக்குச்சாவடிக்கு 1200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்று வரம்பு மாற்றியமைக்கப்பட்டதால் மேற்கொள்ளப்பட்ட வாக்குச்சாவடி மறு சீரமைப்புக்கு பின்னர் 98 வாக்குச்சாவடிகள் அதிகரித்து, தற்போது விருதுநகர் மாவட்டத்திலுள்ள எழு தொகுதிகளிலும் மொத்தம் 1999 வாக்குச்சாவடிகள் உள்ளது. இவை 1009 வாக்குச்சாவடி அமைவிடங்களில் அமைந்துள்ளன.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக 29.10.2025, 24.11.2025, 08.12.2025 மற்றும் 10.12.2025 ஆகிய தேதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியரால் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. 14.12.2025 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு பார்வையாளர் (Special Roll Observer) தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டது.மேலும், விருதுநகர் மாவட்டத்திலுள்ள எழு சட்டமன்றத் தொகுதிகளிலும் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலரால் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், திரும்பப் பெற இயலாத கணக்கெடுப்புப் படிவங்கள் குறித்து கூட்டம் நடத்தி அப்பட்டியல்களை அளித்துள்ளனர். இவ்வாறு அனைத்து நிலைகளிலும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சார்ந்த 1901 அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக பணியாற்றினர். மேலும், வருவாய்த் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் இதர துறைகளின் 199 அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலைக் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்றினர். மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழான தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள் 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த தீவிரத் திருத்தப் பணியில் பங்காற்றியுள்ளனர் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply