அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் சுமார் 17,398 மாணவர்களுக்கு, உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், விருதுநகர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பாண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் சுமார் 17,398 மாணவ, மாணவிகள் பயன்பெறும் விதமாக உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.
அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல்கள் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.அதன் ஒரு பகுதியாக 2024-25 கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல் வழங்கும் வகையில் ஒவ்வொரு நாளும் தலா 2500 மாணவர்கள் வீதம் 7 நாட்கள் சுமார் 17,398 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள், நீட், கிளாட், ஜே.இ.இ, மத்திய பல்கலைக்கழக சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத்தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது, அதற்கு எவ்வாறு தயார்படுத்திக் கொள்வது, அதற்கான கட் ஆப் மதிப்பெண்கள், உள்ளிட்ட வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களின் பெற்றோர்களுக்கு இன்றைய சூழ்நிலையில் ரூபாய் பத்தாயிரம் சம்பளமாக பெறுவது எவ்வளவு பெரிய விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவும் உடல்நிலை சரியில்லாமல், போக முடியவில்லை என்றால் அந்த சம்பளமும் குறையும்.ஆனால், நீங்கள் எடுக்கக்கூடிய சிறிய முயற்சியில் மிகப் பெரிய வாய்ப்புகள் இருக்கின்றது. நீங்கள் எந்த துறையை சேர்ந்து படித்தாலும் அதில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஐஐடி, நீட், கிளாட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு தயார் செய்வது என்பது மிகப்பெரிய காரியம் அல்ல. வருடத்திற்கு 100 மணி நேரம் ஒதுக்கி அதை தொடர்ச்சியாக முயற்சி செய்தாலே போதும். ஆனால் இதனை ஆரம்பிப்பது எளிதாக உள்ளது. ஆனால் அதனை பெரும்பாலான மாணவர்கள் தொடர்ச்சியாக செய்வதில்லை.இதனை வள்ளுவர் உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர் என்ற குறள் மூலம் யார் தன் நோக்கத்தோடு செயல்படாமல் ஒரு செயலை ஆரம்பித்துவிட்டு, பாதியில் விட்டு தோல்வியடைந்தவர்கள் பல பேர் என குறிப்பிடுகிறார். திறமை என்று தனியாக எந்த ஒரு உணர்வுகளும் இல்லை. ஒரு செயலை தொடர்ச்சியாக செய்து, அதன் மூலமாக வெற்றியடைவதே திறமை.7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் செல்ல கட் ஆப் மதிப்பெண்கள் என்னென்ன, பாடம் வாரியாக எத்தனை மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று ஆராய்ந்து செயல்பட வேண்டும். நீங்கள் செய்கின்ற சிறு முயற்சிகள் மூலமாக உங்களுடைய குடும்பம் கடினமான பொருளாதார நிலையில் இருந்து மிகவும் உயர்ந்த பொருளாதாரம் நிலைக்கு உயர முடியும்.
இன்னும் நிறைய பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நிறைய செலவு செய்தால் தான் உயர் கல்வி படிக்க முடியும் என்ற கற்பிதங்கள் உள்ளன. மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் சேருவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. உயர்கல்வி பயில்வதற்கு அரசு நலத்திட்டங்களும், உதவிகளும், கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீடு, பெண்களுக்கு புதுமை பெண் திட்டம், மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம் பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது. உங்களுக்கான வாய்ப்பை சரியாக தேர்ந்தெடுத்து செயல்படுவதன் மூலம் நீங்கள் ஒரு ஐந்து வருடம் கழித்து இந்த வாய்ப்புகளை எல்லாம் இழந்திருக்கிறோமே என்று நீங்கள் திரும்பி பார்க்கின்ற போது ஏற்படுகின்ற வருத்தத்தை தவிக்க முடியும். ஆனால் அந்த வருத்தத்தை நீங்கள் இப்போது புரிந்து கொண்டால் நீங்கள் எதிர்காலத்தில் நல்ல நிலைமையில் இருப்பீர்கள்.
இதில் பெரிய சிக்கல் என்னவென்றால் 16, 17 வயதில் 90 சதவீதம் மாணவர்களுக்கு இது புரிவதில்லை. இதனை மாணவர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நோக்கில் தான் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இந்நிகழ்ச்சியில், விரிவுரையாளர்கள், உயர்கல்வி வழிகாட்டுதல் ஆசிரியர்கள் மூலம் உயர்கல்வியில் உள்ள வாய்ப்புகள், நுழைவுத்தேர்வுகள், தேர்வுகளுக்கு தயார் செய்து எதிர்கொள்ளுதல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.மேலும், இந்நிகழ்ச்சியில், விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து, வழிகாட்டுதல் வழங்கும் விதமாக தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
0
Leave a Reply