விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் (21.06.2024) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திரு.ஜெயராமன் த/பெ.மூர்த்தி, இராஜபாளையம் பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் இனத்தின்கீழ் ரூ.100000/- ஒரு இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் ஒரு விவசாயிக்கு வழங்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொடுக்காபுளி கன்றுகள் ஒரு விவசாயிக்கு வழங்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பழ மர கன்றுகள் அடங்கிய தொகுப்பு இரண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காய்கறி விதைகள் இரண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மின்சாரத்தினால் இயங்கும் புல் வெட்டும் கருவி 50 சதவீத மானியத்தில் இரண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.கண்மாய்கள் மற்றும் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதிக்குரிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் இணைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சீமைக் கருவேல மரங்களை அரசு ஆணையின்படி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீமை கருவேல மரங்களை அகற்றினால் மட்டுமே வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தினை தடுக்க முடியும் என தெரிவித்தார்.வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் இ- வாடகை திட்டத்தின் கீழ் விவசாய கருவிகளான உழுகை இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், களைகருவிகள் உள்ளிட்ட அனைத்து இயந்திரங்களும் முன் பதிவு செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.வன விலங்குகளால் பயிர்சேதம் ஏற்படும் பட்சத்தில் வனத்துறையினர் முன்னுரிமை அடிப்படையில் கள ஆய்வு செய்து இழப்பீடு விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ராஜீக்கள் கல்லூரியில் (21.06.2024) தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.சிறந்த கவிஞர்கள்,பேச்சாளர்கள், இலக்கிய ஆர்வம் மிக்க மாணவர்களுக்கு படைப்பு ஊக்கத்தை தருவதற்காக தமிழ்நாடு அரசு நடத்தக்கூடிய நிகழ்ச்சியின் தான் இளையோர் இலக்கிய பாசறை நிகழ்ச்சி. தமிழ்நாட்டின் திசைகள்தோறும் தமிழை கொண்டு செல்வதற்கும், மாணவர்கள் தங்களின் படைப்பாற்றல் மூலமாக புதிய எழுத்தாளராக, கவிஞர்களாக, படைப்பாளராக உருமாற்றம் பெறுவதற்கும் மிக முக்கிய வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது.அதனடிப்படையில் இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரியில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.ஒரு சாதாரண அறிவியல் கருத்தையோ அல்லது ஒரு செய்தியையோ கருத்து மாறாமல் ஒரு அழகிய நடையில் மாற்றுவதற்கு, தெரிந்த சொற்களை எப்படி லாபகரமாக கையாளுகிறீர்கள் என்பதுதான் இலக்கியமும், கவிதைகளும்.எந்த ஒரு படைப்பும் இந்த சமூகத்தில் பேசப்படாத சுமைகளை, குரல்களை பேசுகிறதா ,விளிம்பு நிலை மக்களின் குரலாக அவை பதிவு செய்யப்படுகின்றனவா என்பது முக்கியம்.மேலும், பத்தாண்டுகளுக்கு முன்பாக மிகப்பெரிய பஞ்சத்தை எல்லாம் நமது ஊர் பார்த்தது. அதாவது, அன்று தஞ்சையில் ‘நன்செய் நிலம் கொண்டு சாகுபடி ஆனது. இன்று நஞ்சை உண்டு சாகும்படி ஆனது” என்ற கருத்தை கவிஞன் எழுதியிருந்தார். ஒரு சில எழுத்துக்களை மாற்றி,ஒரு பெரிய கருத்தை, வலியை இலக்கியத்தின் மூலம் மனிதர்களுக்கு காட்ட வேண்டும் என்பது தான் இதனுடைய நோக்கமாக இருந்தது. நமது கரிசல் பூமியில் எழுதப்பட்ட எத்தனையோ கவிதைகளும், கதைகளும் உள்ளன.நமது மண்ணில் இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரிய பங்கு வகித்த சிறு கிராமம் என்றால், இந்திய அளவில் இரண்டு ஊர்களை நினைவு வைத்துள்ளது. அதில் ஒன்று இராஜபாளையம் மற்றொன்று தூத்துக்குடி என்பதாகும். 1920,1930,1940 ஆகிய காலகட்டத்தில் சுதந்திரத்தில் முக்கியமான போராட்ட காலமாக கருதப்படுகிறது. அதில் இந்த இரண்டு ஊர்களும் முக்கியத்துவம் ஆற்றியுள்ளது. இதுபோன்ற மக்களுடைய போராட்டங்களை இலக்கியங்கள் அந்தந்த கால கட்டங்களில் பதிவு செய்வது அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக இருக்கிறது.சங்க இலக்கியங்கள் மற்றும் அதற்கு பிறகு மருவி வந்த சங்ககால இலக்கியங்களும், நீதிநூல் இலக்கியங்கள், 2000 ஆண்டுகளுக்கு முன்பாக பரவியுள்ள தமிழ் சங்கம் ஆகியவை எல்லா சிக்கல்களையும் தன்னுடைய கல்வி அறிவின் மூலமாக தான் தீர்வு கண்டுள்ளது.இலக்கியங்களில் நாம் படித்து தெரிந்து கொள்வதற்கும், இலக்கியங்களின் மூலமாக அந்த காலகட்டத்தினை புரிந்து கொண்டு அதன் மூலமாக இந்த சமூகத்தில் விழுமியங்களை புரிந்து கொள்வதற்கும், விழுமியங்கள் நிறைந்த படைப்பாளர்களாக உருவாவதற்கும், இந்த சமூகத்தின் வலியை ஏழை எளிய மக்களினுடைய பாடுகளை பதிவு செய்வதற்கும், அதைவிட இலக்கியம் என்பது எப்போதும் குறிக்கோளோடும் இலக்கியத்தோடும் மட்டும் இருப்பதில்லை அது மன மகிழ்ச்சிக்கும் உரியது.தற்காலிகமாக போதைப் பொருட்கள் தரக்கூடிய மகிழ்ச்சியை விட வாசிப்பு அனுபவமும் இலக்கியமும் அதில் இருக்கக்கூடிய செல்வங்களும் நிறைய மகிழ்ச்சியை தருகின்றன. அவற்றை புரிந்து கொள்வதும் அந்த மகிழ்ச்சியினை எல்லோருக்கும் கடத்துவதும் படைப்பாளர்கள் உடைய நோக்கம். அப்படிப்பட்ட படைப்பாளர்களாக நீங்கள் இருக்கும் இடங்களில் குடும்பத்தை, சமூகத்தை சில அங்குலங்கள் உயர்த்துவதற்கு ஊக்கத்தை தரக்கூடிய படைப்பாளியாக உருவாக வேண்டும். உங்களை சிறந்த படைப்பாளர்களாகவும் அதைவிட மேம்பட்ட படிப்பாளிகளாகவும் உருவாக்குவதற்கு இந்த இலக்கியப் பட்டறை பயன்படுமேயானால் அதுதான் இந்த பட்டறையினுடைய வெற்றி என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், பேராசிரியர் சிவகாசி திரு.ராமச்சந்திரன் அவர்கள் ‘மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்” என்ற தலைப்பிலும், கலைமாமணி கவிஞர் கலாப்ரியா அவர்கள் “புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்” என்ற தலைப்பிலும், ஒருங்கிணைப்பு அலுவலர்/திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் “நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்” என்ற தலைப்பிலும், ஆசிரியர் திருமதி இந்திரா ஜெயச்சந்திரன் அவர்கள் “கண்களைத் திறந்த கதை உலகம்” என்ற தலைப்பிலும், கவிஞர் திருமதி கவிதா ஜவகர் அவர்கள் “அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும் தலைவர்களும்” என்ற தலைப்பிலும், கல்லூரி இணைப் பேராசிரியர் முனைவர் சோ.சிதம்பரநாதன் அவர்கள் ‘செம்மொழித் தமிழின் சிறப்பு” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் முனைவர் ரமேஷ் குமார் அவர்கள் வரவேற்புரையும், கல்லூரி செயலர் முனைவர் சிங்கராஜ் அவர்கள் வாழ்த்துரையும் வழங்கினார்கள். அரியலூர் மாவட்டப் பதிவாளர் திரு.சு.பாலசுப்பிரமணியன் அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி நிறைவுரை வழங்கினார். பின்னர், இராஜூக்கள் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் திரு.மைதிலிராஜ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
இந்திய விமானப் படை ஆள்சேர்ப்பில் அக்னிவீர்வாயுத் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு 08.07.2024 முதல் 28.07.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு 03.07.2004 முதல் 03.01.2008 வயது வரையுள்ள திருமணமாகாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் தேர்ச்சி அல்லது மூன்று வருடம் டிப்ளோ என்ஜீனியரிங் துறையில் 50 சதவீதம் தேர்ச்சி அல்லது 2 வருடம் கணிதம் மற்றும் இயற்பியல் தொடர்பான தொழில்துறையில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு உடல்தகுதி ஆண்களுக்கு 152.5 செ.மீ , பெண்களுக்கு 152 செ.மீ வும் உடலுக்கேற்ற எடை இருத்தல் அவசியம். இந்த பணியிடத்திற்கு மேற்கண்ட தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வினில் முதல் தகுதிச்சுற்று ஆன்லைனில் கொள்குறித்தேர்வாகவும் இரண்டாம் தகுதிச்சுற்று உடற்தகுதித் தேர்வாகவும் நடைபெறும்.இத்தேர்வுக்கு சம்பளமாக முதல் வருடம் 30,000 லிருந்து நான்காம் வருடம் 40,000 வரை வழங்கப்படுகிறது.மேற்கண்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.550 (ஜி.எஸ்.டி உட்பட) ஆன்லைனில் செலுத்த வேண்டும். இதில் தகுதியுள்ள பெண்கள் / ஆண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 90 காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-I (குரூப் 1) தேர்வு வரும் 13.07.2024 அன்று நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் 24.06.2024, 27.06.2024, 02.07.2024 மற்றும் 05.07.2024 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சூலக்கரையில் நடைபெற உள்ளது.இந்த மாதிரி தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் வாயிலாக https://forms.gle/pYLMnf9T38E3DZJB8 என்ற GOOGLE FORM -ஐ பூர்த்தி செய்து தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள மகளிர் சுய உதவிகுழுக்களின் உறுப்பினர்களுக்கு தேவையின் அடிப்படையில் தையல், ஆரி ஒர்க்ஸ், எம்ராய்டர் மற்றும் தாங்கள் தயாரிக்கும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு பேக்கிங் மற்றும் சந்தை வாய்ப்புகள் ஆகியவை பற்றிய பயிற்சிகள் கொடுக்கப்பட்டு சுழல் நிதி, சமுதாய முதலீட்டு நிதி மற்றும் வங்கி மூலம் தொழில் கடன்கள் கொடுக்கப்பட்டு பல்வேறு வகையான தொழில்கள் செய்து வருகின்றனர்.இம்மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் புல்லலக் கோட்டை ரோட்டில் அமைந்துள்ள மாவட்ட பூமாலை வணிக வளாகத்தில் உள்ள கடைகள் வாடகைக்கு விடப்படுகிறது. இதில் குழு உறுப்பினராக இருந்தால் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர், முதியோர் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.மேலும் இப்பூமாலை வணிக வளாகத்தில் உணவு பொருட்கள், அலங்கார பொருட்கள், மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் விற்பனை செய்யகூடியவர்கள், சிற்றுண்டி தயாரிப்பாளர்கள், சூடான மற்றும் குளிர்பானங்களை விற்பனையாளர்கள், பலசரக்கு விற்பனை மற்றும் பியூட்டி பார்லர், பூ விற்பனை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், பழுது நீக்கம் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கடை வாடகைக்கு விடப்படும்.பெண்கள் குழுவாக பொருட்கள் உற்பத்தி செய்தால் விற்பனை செய்ய முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் தினசரி, மாதம் மற்றும் ஆறு மாத காலம் ஆகியவற்றிக்கு மட்டுமே வாடகைக்கு விடப்படும்.எனவே விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பெண்கள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் நடைபெற்று வரும் வரும் ஆய்வுப்பணிகளில் (20.06.2024) சாத்தூர் நகராட்சியில் நுண் உயிர் உரம் தயாரிக்கும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் பார்வையிட்டு, நகராட்சிப் பகுதி ஒவ்வொரு வார்டுகளில் இருந்து பெறப்படும் திடக்கழிவுகள் பிரிக்கப் பட்டு உரம் தயாரிக்கும் பணிகளை ஆய்வு செய்தார்
பன்முக திறமைக்கான விருதான ‘பத்ம விருது” குடியரசு தின விழா 2025 ஆம் ஆண்டிற்கு விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் (ஆண்/பெண்) உடன் விண்ணப்பிக்கலாம்.2025 ஆம் ஆண்டிற்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு மற்றும் மருத்துவத் துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவர்களுக்கு 26.01.2025 அன்று குடியரசு தின விழாவில் மாநில அளவில் விருது வழங்கப்படவுள்ளது. மேற்படி விருதிற்கு பன்முக திறமை புரிந்த நபர்களிடமிருந்து கருத்துரு 15.09.2024-க்குள் இணையதளம் (www.padmaawards.gov.in) மூலம் வரவேற்கப்படுகிறது.15.09.2024-க்குள் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்த விபரத்தினை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறும், மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தினை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின், விருதுநகர் மாவட்டத்தில் பதிவுசெய்து, 18 வயது நிரம்பிய முதிர்வுத்தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகளுக்கு முதிர்வுத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ், - முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, 18 வயது நிரம்பிய முதிர்வுத்தொகை கிடைக்கப்பெறாமல் உள்ள பயனாளிகள் கீழ்க்காணும் ஆவணங்களோடு சம்பந்தப்பட்ட வட்டாரவளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலர்களிடம் முதிர்வுத் தொகைக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்: 1. வைப்பு நிதிப்பத்திரம். 2. பத்தாம் வகுப்புமதிப்பெண் சான்றிதழ் - நகல். 3. பயனாளியின் வங்கிக்கணக்குப் புத்தகம் - நகல். 4. பயனாளியின் வண்ணப் புகைப்படம்.
விருதுநகர் மாவட்டத்தில், சுமார் 1098 பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் சுமார் 3000 பட்டாசு கடைகள் என மொத்தம் 4000-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழில் தொடர்பான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகளில் விபத்துக்களை தவிர்த்திடும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெடி மருந்துகள் கையாளுதல் தொடர்பாக, பட்டாசு தொழிற்சாலையில் பணிபுரியும் போர்மேன்கள், தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு சிவகாசியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் பயிற்சி மையத்தில், பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த பயிற்சியில் கலந்து கொள்ள முதல் முறை கட்டணமின்றியும், முதல்முறை கலந்து கொள்ளாத பட்டாசு தொழிற்சாலைகளுக்கு இரண்டாம் முறை கலந்து கொள்ள ரூ.5,000/- அபராதமாக செலுத்தவும், மேலும் இரண்டாம் முறை கலந்து கொள்ளாமல் மூன்றாம் முறை பயிற்சியில் கலந்து கொள்ளும் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ரூ.10,000/- அபராதம் செலுத்திட வேண்டும் என மாவட்ட அளவிலான பாதுகாப்புக் குழு கூட்டத்தில் முடிவு செய்யபட்டு, மேற்படி முதல் பயிற்சியில் கலந்து கொள்ளாத 57 பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ரூ.5000/-வீதம், இதுவரை சுமார் ரூ.2,85,000/-அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மூன்று முறையிலும் பயிற்சிகள் பெறாமல் தவிர்த்த பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மையம் வாயிலாக ஜனவரி-2024 முதல் மே 2024 வரையிலான காலத்தில், பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் மொத்தம் 1977 நபர்களுக்கும், போர்மேன்கள்/ சூப்பிரவைசர்கள் மொத்தம் 428 நபர்களுக்கும் மற்றும் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள் சுமார் 30 நபர்களுக்கும் என ஆகமொத்தம் 2435 நபர்களுக்கு இதுநாள் வரையிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில், வெடிபொருள் சட்ட விதிகளை மீறி பட்டாசு உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலைகளை கண்டறிந்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக விருதுநகர், மாவட்ட ஆட்சியர் அவர்களால் நான்கு சிறப்பு ஆய்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு, தினந்தோறும் பட்டாசு தொழிற்சாலைகள் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேற்படி சிறப்பு ஆய்வுக்குழுக்களால் இவ்வாண்டில் மட்டும் இதுநாள் வரையிலும் சுமார் 504 பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளபட்டு, அதில், 102 பட்டாசு தொழிற்சாலைகளின் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, உரிமங்கள் தற்காலிக இடைநிறுத்தம் செய்யவும், நிரந்தரமாக இரத்து செய்யவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும், இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளின் உரிமையாளர்களும், வெடிபொருள் சட்ட விதிகளுக்கு உட்பட்டும், மாண்பமை உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி பட்டாசு உற்பத்தி பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விதிமுறைகளை மீறி பட்டாசு உற்பத்திகள் மேற்கொள்ளும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுத்திட பட்டாசு தொழிற்சாலைகள் சிறப்பு ஆய்வுக் குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள், வெடிபொருள் சட்ட விதிகளுக்கு புறம்பாக உள் குத்தகை, உள் வாடகை விடுதல் மற்றும் மனித உயிர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படும் விதத்தில் பட்டாசு தயாரிப்பில்; பட்டாசு தொழிற்சாலைகள் ஈடுபடுவதாக தெரியவந்தாலோ அல்லது உரிமமின்றி சட்ட விரோதமான முறையில் பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தாலோ, அது தொடர்பான விபரங்களை பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் பட்டாசு தொழில் நல அமைப்புகள், மாவட்ட நிர்வாகத்திற்கு வாட்ஸ் அப் எண். 94439 67578 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்ட முகாமானது 19.06.2024 இன்று காலை 9 மணி முதல் மறுநாள் 20.06.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமின் கீழ், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சாத்தூர் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலக வளாகத்தில், புதிய அலுவலகம் கட்டுவது தொடர்பான ஆய்வு மேற்கொண்டும், மேல காந்திபுரம் அரசு மேல்நிலைபள்ளியில் கற்பிக்கும் முறைகள், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உயர்கல்வியில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்து எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பின்னர், துணைமின் நிலையத்தை பார்வையிட்டு, நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மின் உபகரணங்களை முறையாக பராமரிப்பு செய்து, தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய அலுவலர்களை அறிவுறுத்தினார்.சாத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, நிலையத்தின் செயல்பாடுகள், ஊர்தி மற்றும் உபகரணங்களின் பராமரிப்பு, தீயணைப்பு வீரர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், நிலையத்தில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிசிடிவி கண்காணிப்பு பணிகள் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாத்தூர் நியாயவிலைக்கடையில் உள்ள பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நியாயவிலைகடையில் மாற்று நபர் மூலம் பொருட்கள் வாங்குவதற்கு தடையின்மை சான்று பெறுவதற்கான தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்டார்.அதனைத்தொடர்ந்து, இ-சேவை மையத்தினை ஆய்வு செய்து, அங்கு வரும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் வழங்கப்படும் சேவைகளுக்காக பெறப்படும் கட்டண விவரங்கள் குறித்து கேட்டறிந்தார் மற்றும் இ-சேவை மையத்தில் ஆதார் அட்டையை புதுப்பிக்க வந்த பள்ளி மாணவனிடம் தங்களது பள்ளிகளிலேயே ஆதார் அட்டை புதுப்பிக்க தேவையான ஏற்பாடுகள் செய்துள்ளதாக தெரிவித்தார்.மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தை ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்வுகள் குறித்து கேட்டறிந்து, பெறப்படும் மனுக்களுக்கு தேக்கநிலை இல்லாமல் விரைந்து தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தனது மாற்றுத்திறனாளி மகனுக்கு உதவித்தொகை வேண்டி வந்த மனுதாரருக்கு உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.பின்னர், சாத்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு, கிராம கணக்கு பதிவேடுகள் மற்றும் கோப்புகளை ஆய்வு செய்தார். சாத்தூர் நகராட்சியில் நடைபெற்று வரும் ஒப்பந்தப்பணிகள், குடிநீர் மற்றும் சுகாதாரம் தொடர்பான கோப்புகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தும்,அயன்சத்திரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தையல் இயந்திரம் வேண்டிய விண்ணப்பித்த மனுதாரருக்கு உடனடியாக தையல் இயந்திரம் வழங்க் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். சாத்தூரில் உள்ள அங்கன்வாடி மையத்தினை ஆய்வு செய்து, பயன்பெறும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடை உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார்.தமிழ்நாடு அரசின் கலைஞரின் மகளிர் உரிமை திட்டம் மூலம் மாதந்தோறும் ரூ.1000/- பெறும் குடும்பத்தலைவிகளிடம் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.அதனை தொடர்ந்து, அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மேலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றுக் கொண்டார்.பின்னர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.13,464/- மதிப்பிலான மானியத்துடன் கூடிய விதைகள் மற்றும் பண்ணைக்கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.