பிளவுக்கல் பாசன திட்டம் - தண்ணீர் திறப்பு விவரம்
விருதுநகர் மாவட்டத்திலுள்ள வேளாண் பெருங்குடி மக்களின் கோரிக்கைகளை ஏற்று பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்கு 16.05.2024 முதல் தண்ணீர் திறந்து விட அரசாணை (அரசாணை எண். (வாலாயம்) 254 நாள். 15.05.2024) வெளியிடப்பட்டுள்ளது.
பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகள் முறையே 13.90 சதுர மைல் 9.57 சதுர மைல் நீர்ப்பிடிப்பு பகுதி கொண்டவை. 192.00 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பெரியாறு அணையில் தற்பொழுது 62.27 மில்லியன் கனஅடி நீரும், 133 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கோவிலாறு அணையில் தற்பொழுது 81.96 மில்லியன் கனஅடி நீரும் இருப்பில் உள்ளது. மேலும், பெரியாறு அணைக்கு வினாடிக்கு 8.53 கனஅடி நீரும், கோவிலாறு அணைக்கு 4.13 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. பிளவுக்கல் பாசன திட்டத்தின் பயன்பெறும் பாசன பரப்பு மொத்தம் 8531.17 ஏக்கர் (3452.515 ஹெக்டேர்) ஆகும்.
தற்பொழுது இரண்டாம் போக பாசனத்திற்காக பிளவுக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து 16.05.2024 முதல் 6 நாட்களுக்கு வினாடிக்கு 150 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இத்தண்ணீர் திறப்பினால் பிளவுக்கல் திட்டத்தின் கீழ் உள்ள 5 கண்மாய்களின் 926 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையவுள்ளன. இதன் மூலம் கொடிக்குளம், கான்சாபுரம், வத்திராயிருப்பு, கூமாபட்டி ஆகிய 4 வருவாய் கிராமங்கள் பயனடையவுள்ளது.விவசாயிகள் அனைவரும் அதிக மகசூலைப் பெறும் நோக்கத்துடன் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0
Leave a Reply