கனடாவில் நடைபெற்ற உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங், எகிப்தின் ருகையா சலெமை 11-3, 11-7, 11-9 என்ற நேர் செட்களில் 3-0 என வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.இதன் மூலம் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை அனாஹத் சிங் படைத்துள்ளார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பான ('பிடே') அமைப்பின் இடைக்கால தலைவராக இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பொறுப்பேற்றுள்ளார். இதன்மூலம், 'பிடே' அமைப்பின் தலைமை பொறுப்பை வகிக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.2018 முதல் 'பிடே' தலைவராக செயல்பட்டு வந்த ரஷ்யாவின் ஆர்காடி டிவோர்கோவிச்சுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து, இந்த பொறுப்பு ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐந்து முறை உலக சாம்பியனான ஆனந்த், 2022 முதல் 'பிடே' துணைத் தலைவராக இருந்து வந்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிவோர்கோவிச்சின் தலைமையையும் அர்ப்பணிப்பையும் மதிக்கிறேன். அவர் உருவாக்கிய வலுவான அணியுடன் இணைந்து உலகளவில் செஸ் விளையாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
கனடாவில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனாஹத் சிங் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் எகிப்தின் ஹபிபா ரிஸ்கை எதிர்கொண்ட அனாஹத், 11-7, 11-5, 6-11, 11-9 என்ற செட் கணக்கில் 3-1 என்ற வெற்றியைப் பதிவு செய்தார்.இந்த வெற்றியின் மூலம், உலக ஜூனியர் ஸ்குவாஷ் தொடரில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் (2025, 2026) அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அனாஹத் படைத்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி வண்ணமயமான துவக்க விழாவுடன் தொடங்கியது. பசுமை சூழ்ந்த அரங்கில் இசை, நடனம், கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற விழாவில், இந்திய தேசியக் கொடியை மீராபாய் சானு மற்றும் லவ்லினா போர்கோஹைன் ஏந்தி அணிவகுத்தனர்.இந்தியாவிலிருந்து ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 123 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டியை பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.மாற்றுத் திறனாளிகளுக்கான பவர் லிப்டிங் போட்டியில் இங்கிலாந்தின் மார்க் ஸ்வான் 153.9 புள்ளிகளுடன் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். நைஜீரியாவின் ரோலண்ட் வெள்ளியும், மலேசியாவின் கஸ்டின் வெண்கலமும் வென்றனர்.பெண்கள் பிரிவில் இந்தியாவின் ஜஸ்பிரீத் கவுர் 'பி' பிரிவில் 100 கிலோ எடையை தூக்கி 96.4 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்தார். 'ஏ' பிரிவில் விளையாடிய சுமன் தேவி 100 கிலோ தூக்கி 88.4 புள்ளிகளுடன் 6வது இடத்தைப் பெற்றார். ஒட்டுமொத்த தரவரிசையில் ஜஸ்பிரீத் 6வது இடமும், சுமன் 7வது இடமும் பிடித்தனர்.இதேவேளை, நைஜீரியாவின் எஸ்தர் 123 கிலோ எடையை தூக்கி 119.0 புள்ளிகளுடன் புதிய காமன்வெல்த் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கியது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் இலக்கை விரட்டிய இந்தியா, 13.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
கனடாவில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனாஹத் சிங் காலிறுதிக்குத் தகுதி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவு 'ரவுண்ட்-16' ஆட்டத்தில் மலேசியாவின் டாய்ஸ் யே சான் லீயை 11-4, 11-8, 11-3 என்ற நேர் செட்களில் 3-0 என வீழ்த்திய முதல் நிலை வீராங்கனையான அனாஹத், அடுத்த சுற்றில் எகிப்தின் ஹபிபா ரிஸ்கை சந்திக்கிறார். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஆர்யவீர் தேவன், அமெரிக்காவின் யாசீன் ஷலாபியிடம் 0-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் ஐந்து வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றதால், லவ்லினாவுக்கு முதல் சுற்றில் 'பை' வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இந்தியா சார்பில் மொத்தம் 14 குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கின்றனர்.
சீனாவில் நடைபெற்று வரும் சீன ஓபன் சூப்பர் 1000 பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் பி.வி. சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.முதல் சுற்றில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடாவை எதிர்கொண்ட சிந்து, 21-14, 9-21, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 56 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில், தீர்மானிக்கும் செட்டில் ஆதிக்கம் செலுத்திய சிந்து வெற்றியை உறுதி செய்தார்.
கனடாவில் நடைபெறும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.பெண்கள் பிரிவு 'ரவுண்டு-32' போட்டியில் அனாஹத் சிங், ஹாங்காங்கின் புய்யின் சோலேலோவை 11-3, 11-1, 11-3 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.ஆண்கள் பிரிவில் ஆர்யவீர் தேவன், தென் ஆப்ரிக்காவின் ஜோசப் பியஸ்டை 11-4, 11-3, 11-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 'ரவுண்டு-16' சுற்றுக்கு தகுதி பெற்றார்.
சென்னையில் நடைபெற்ற 4-வது கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.கடைசி சுற்றில் பிரான்சின் அலிரேசாவுடன் மோதிய அர்ஜுனின் ஆட்டம் டிராவில் முடிந்தது. அதேபோல் குகேஷ்-நைமான் மற்றும் நிகால் சரின்-பிரனேஷ் மோதல்களும் சமநிலையில் நிறைவடைந்தன.இறுதியில் 4.5 புள்ளிகளுடன் அலிரேசா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். டிமிட்ரி 2-வது இடத்தையும், அர்ஜுன் 3-வது இடத்தையும் பிடித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய உலக சாம்பியன் குகேஷ் 8-வது இடத்தில் நிறைவு செய்தார்.