Coffee With Collector” என்ற 206-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (25.06.2025) மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் அளித்து விருதுநகர் கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி கட்டணத்திற்கான உதவிகள் பெற்று பயனடைந்த மாணவர்களுடனான 206-வது காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் கலந்துரையாடினார்.இந்நிகழ்ச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் உயர்கல்வி பயில்வதற்காக கல்வி கட்டணத்திற்கான உதவித்தொகை வேண்டி மனு அளித்த 14 மாணவர்களுக்கு ரூ.1,65,778/- மதிப்பில் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 206-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.கல்லூரி மாணவ மாணவர்கள் போட்டித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்
0
Leave a Reply