தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் - 2025, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு செய்திட 20.08.2025 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் - 2025 (Chief Minister’s Trophy Games - 2025) அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் வருகின்ற 22.8.2025 முதல் 12.9.2025 வரை நடத்தப்படவுள்ளன.
இப்போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.
தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் சிறப்பு மதிப்பெண்கள் மற்றும் சலுகைகள் பெற இயலும்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 25 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய அரசு பணியாளர்கள் ஆகியோருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
எனவே முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான https://cmtrophy.sdat.in/https://sdat.tn.gov.in வாயிலாக 16.8.2025 க்குள் முன்பதிவு செய்து தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை முன்பதிவில் கிடைக்கப்பெற்ற வரவேற்பினை தொடர்ந்து, பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் அனைத்து தரப்பு மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் இணையதள முன்பதிவு செய்திட கால அவகாசம் 20.08.2025 இரவு 08.00 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாணாக்கர்கள் தாங்களாகவோ, தங்கள் பள்ளி, கல்லூரி மூலமாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
0
Leave a Reply