25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


“காபி வித் கலெக்டர்” கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த 175  மாணவர்களுடன், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

“காபி வித் கலெக்டர்” கலந்துரையாடல் நிகழ்ச்சி மூலம் நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த 175 மாணவர்களுடன், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். கல்லூரி மற்றும் சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், நடைபெற்று வரும் சிறப்பு உடனடி மறுத்தேர்வுக்காக ஒரு வாரம் உண்டு உறைவிட பயிற்சி முகாமில், நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த  175 மாணவர்களுடன் இரண்டு குழுக்களாக நடைபெற்ற 188 மற்றும் 189 ஆவது சிறப்பு காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள்  (26.05.2025) மாணவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடி ஊக்கப்படுத்தினார்.              

மேலும், குடும்ப சூழ்நிலை, பொருளாதாரம், சரியான வழிகாட்டியின்மை, பாடப்பிரிவு கிடைக்காத நிலை போன்ற காரணங்களால் உயர்கல்வி தொடர முடியாமல் இருப்பதாக தெரிவித்த மாணவ, மாணவியர்களிடம், அரசின் மூலம் வழங்கப்படும் திட்டங்கள், சலுகைகள், ஊக்கத்தொகைகள், எதிர்கால வேலைவாய்ப்புகள், மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பாடப்பிரிவு துறைகளை தேர்ந்தெடுப்பது உள்ளிட்டவை குறித்தும், தீர்வுகளை எடுத்துக்கூறியும், உயர்கல்வி தொடர்வதற்கான உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

 பள்ளிப்படிப்பை முடித்து சிறந்த கல்லூரிகளில் பயின்று சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கக்கூடியவர்களின் புள்ளி விவரங்களை சற்று ஆராய்ந்து பார்த்தால், அது அதிக மதிப்பெண்கள் பெற்றவரோ, சராசரியாக படித்தவரோ என எந்தவொரு பொதுப்பண்புகளும் இல்லை. தங்களுக்கான வாய்ப்புகள் குறித்து முன்கூட்டியே சரியான நேரத்தில் விழிப்புணர்வும், அதற்கான முயற்சியும் எடுப்பவரே வெற்றியடைகிறார்கள்.ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து அவன் இந்த உலக வாழ்க்கையை முடிக்கின்ற வரை வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். நீங்கள் படிக்கின்ற போது, வேலைக்கு செல்லும் போது என வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெற்றி தோல்வி என்பது நீண்ட கால பயணத்தில் மாறி மாறி வரும். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிகழ்வு.

தோல்வி என்பது நேற்றோடு முடிந்துவிட்டது. அடுத்து வெற்றிக்கான தொடக்கம். இதை எப்படி வெற்றியாக மாற்றுவது என்று சிந்திக்க வேண்டும். மிகவும் முக்கியமான காலகட்டத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.தேர்ச்சி பெறாத மாணாவர்களுக்காக நடத்தப்படும் தனித்தேர்வுகளில் வெற்றி பெறுவதன் மூலம் இந்த நடப்பு கல்வி ஆண்டிலேயே உயர்கல்வியில் சேரலாம். நான் முதல்வன் திட்டம் மூலம் கல்லூரிகளில் உள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ளலாம்.மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலமும், அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு தமிழ்புதல்வன்; திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000- ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதோடு உங்களுக்கான கல்வி உதவித்தொகையும் கிடைக்கிறது.பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறும் அனைவருக்கும் கல்லூரியில் இடம் உண்டு. வசதி வாய்ப்பு குறைவாக உள்ள மாணவர்களுக்கு வங்கிக் கடன் மற்றும் அரசினுடைய கல்வி உதவித்தொகை பெற வழிவகை உள்ளது.

  அரசு திட்டங்களில் தகுதி இல்லாதவர்களுக்கு கூட நன்கொடையாளர்கள் மூலமாக உதவிகள் செய்வதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.படிப்பது மிகவும் கடினமாகத்தான் இருக்கும். தேர்ச்சி பெறாத பாடங்களை மறுபடியும் தேர்வு எழுதுவது என்பதும் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் நீங்கள் தற்போது எடுக்கும் முயற்சிகள் உங்களின் நீண்ட காலத்திற்கு நீங்கள் எதிர்பார்க்க முடியாத அளவிற்கான இன்பத்தையும் வெற்றிகளையும் தரும்.அதனால் நீங்கள் குறிப்பிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல் போனதற்கு வருத்தப்பட வேண்டாம். தோல்வி என்பது நேற்றோடு முடிந்து விட்டது. நீங்கள் அடுத்த வெற்றிக்கான முதற்படியில் இருக்கிறீர்கள். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த தோல்வியை நீங்கள் வெற்றியாக மாற்ற முடியும். இந்த ஆண்டே நீங்கள் மற்ற உங்களுடைய நண்பர்களை போல உயர்கல்விக்கு கல்லூரியில் சேர முடியும். அனைத்து வகையிலும் உதவி செய்வதற்கு அரசு நிர்வாகமும், அரசு அலுவலர்களும் எப்பொழுதும் உங்களோடு உறுதுணையாக இருப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.உங்களுக்கான இந்த ஒரு வார கால உண்டு உறைவிட பயிற்சி  வகுப்புகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஆசிரியர்களின் அறிவுரைகளை பின்பற்றி பாடங்களை கற்றுக் கொண்டால், நிச்சயமாக நீங்கள் வெற்றி பெற்று, இந்த ஆண்டே கல்லூரியில் சேர முடியும். எனவே 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இது வாழ்க்கையின் தொடக்கமே என்பதை மனதில் கொண்டு எதிர்வரும் காலங்களில் சிறப்பாக செயல்பட தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News