நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் நக்சா திட்டத்தின் கீழ் விருதுநகர் நகராட்சியில் ஆளில்லா வானுர்தியை பயன்படுத்தி நிலஅளவை மேற்கொள்ளும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.
விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் (18.02.2025) நகர நில ஆவணங்களை நவீன மயமாக்கும் நக்சா திட்டத்தின் கீழ் விருதுநகர் நகராட்சியில் ஆளில்லா வானுர்தியை பயன்படுத்தி நிலஅளவை மேற்கொள்ளும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்தியாவில் மொத்தம் 152 நகராட்களில், தமிழ்நாட்டில் மட்டும் 10 நகராட்சியில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா (NAtional geospatial Knowledge – based land Survey of Urban HAbitations – NAKSHA) திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம், விருதுநகர் நகரம் முன்னோடி திட்டமாக வார்டு 23, பிளாக்:133, மொத்த நகர புல எண்கள். 29, 320-ல் (6.600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்) இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆளில்லா வானுர்தியை பயன்படுத்தி நிலஅளவை மேற்கொள்வதால் நில உடைமை தகராறுகள் மற்றும் நீண்டகால சட்ட வழக்குகளைத் தீர்ப்பதற்காகவும், உள்கட்டமைப்பு திட்டங்களில் உள்ள தடைகளை நிவர்த்தி செய்யவும், நிலப்பதிவுகளை வெளிப்படையாகவும், துல்லியமாகவும், அனைவரும் அணுகக்கூடியதாகவும் மாற்றுதல் செய்ய பயன்படுகிறது. புவிசார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சொத்துவரி செலுத்துவதற்கு பயன்படுகிறது.
இன்று ஒரு பகுதியில் நடக்கக்கூடிய பல்வேறு வளர்ச்சிப் பணிகள், நகரத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் சேவைகள், வழங்கக்கூடிய பல்வேறு பணிகளுக்கும், சொத்து வரி உள்ளிட்ட வரி விதிப்புகளுக்கும் செய்யப்பட வேண்டிய நில அளவு, சொத்தினுடைய அளவீடுகள் அனைத்தும் பழங்கால முறைகள் தான் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் பொது மக்களுக்கு அந்த சேவைகளை வழங்கக்கூடிய அளவிற்கு நிறைய கால விரையமும், நகராட்சியினுடைய வருவாயும் பாதிக்கப்படுகிறது.
அதனை சரி செய்வதற்கு நிறைய நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இவற்றிற்கான தீர்வு தான் இந்த திட்டம். இதன் மூலமாக நகர் பகுதிகளில் இந்த ஆளில்லா வானூர்திகள் என்று சொல்லக்கூடிய ட்ரோன் கேமராக்கள் மூலமாக துல்லியமாக சர்வே செய்து, அந்த சர்வே செய்யப்பட்ட ஒளி அச்சுக்களை வைத்து, அவற்றை முறையாக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மென்பொருள்களை வைத்து, அதனுடைய தரவுகளை எல்லாம் ஆய்வு செய்து சரியான விகிதத்தில் அவற்றை ஜி.பி.எஸ் என்று சொல்லக்கூடிய சரியான புவியியல் துல்லியத்தின் அடிப்படையில் அந்த இடங்களை துல்லியமாக வரையறுக்க முடியும்.
அந்த புவியியல் வரையறைக்கு மொத்தமாக நகரை முழுமையாக சர்வே செய்து அனைத்து விவரங்களும் பொதுமக்களுக்கு வெளியிடப்படும். அதில் குறைபாடு இருந்தால் மேல்முறையீடு செய்ய முடியும். மேல்முறையீடு செய்வதை அந்த குழு சென்று பார்வையிட்டு, புகார்கள் சரியாக இருந்தால் அந்த ஐயப்பாடுகளை கலைவதற்கும் இந்த திட்டத்தில், நடைமுறையில் உரிய வாய்ப்பு இருக்கிறது.வான்வழி ஆய்வுகள் மூலம் துல்லியமான மேப்பிங் வரைவதற்கும், மாநில அரசுகள் மற்றும் குடிமக்கள் பங்கேற்புடன் நிலப்பதிவுகளைச் சரிபார்ப்பதற்கும், டிஜிட்டல் தளங்கள் வழியாக எளிதாக அணுகவும், புவியில் தரவுகளுடன் துல்லியமாக திட்டமிடலுக்கு பயன்படுகிறது.
வான்வழி ஆய்வு துல்லியமாக மற்றும் வேகமான தரவு சேகரிப்பதற்கும், படம் பிடிப்பதற்கும், செங்குத்து நகரங்களுக்கு சாய் கோண கேமரா மூலம் நிலஅளவை செய்வதற்கும், மலைப்பாங்கான நெரிசலான இடம் மற்றும் மர அடர்த்தியாக உள்ள இடங்களில் LiDAR சென்சார் மூலம் நிலஅளவை செய்வதற்கு பயன்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட நிலபதிவுகள் இல்லாதது, காலாவதியான மற்றும் முழுமையடையாத தரவு காரணமாக அரசாங்க ஆவணங்களுக்கும், உண்மையான நில உரிமைக்கும் இடையிலான முரண்பாடுகளை தவிர்க்கவும் பயன்படுகிறது. மாநிலங்கள் முழுவதும் ஒரே மாதிரியான அமைப்பு இல்லாதது, உரிமை தகராறுகள் மற்றும் சட்ட விரோத ஆக்கிரமிப்பு தொடர்பான சிக்கல்களை தவிர்க்க பயன்படுகிறது.
துல்லியமான மற்றும் ஆன்லைன் நிலப்பதிவுகள் கிடைக்கும். நகர்ப்புற நில மேலாண்மையை மேம்படுத்துதல் மற்றும் மேம்பட்ட நகர்ப்புற நில நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கும், வெளிப்படையான மற்றும் வேகமான நிலம் தொடர்பான செயல்முறைகள் கிடைக்கவும் பயன்படுகிறது.எனவே இவற்றை தொடர்ச்சியாக செய்து முழுமையாக நிறைவேற்றுகின்ற போது பொது மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளுடைய சேவைகள் விரைவாக கிடைப்பதற்கும், நீதிமன்ற வழக்குகள், கால விரயங்கள் அவற்றையெல்லாம் தவிர்ப்பதற்கும் இந்த தொழில்நுட்பத்தின் வழியாக ஒரு மிகப்பெரிய மாறுதல்களை நிச்சயமாக செய்ய முடியும்.
எனவே ஒரு வெளிப்படை தன்மையோடு எல்லோருக்கும் சரியாக இந்த சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நக்சா திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு அனைத்து பகுதிகளில் இருக்கக்கூடிய பொதுமக்கள், துறை சார்ந்த அலுவலர்கள், பல்வேறு இடங்களில் இருக்கக்கூடிய சமூக ஆர்வலர்கள், அங்கு இருக்கக்கூடிய குடியிருப்பு நல சங்கங்கள் ஆகியோர் நகராட்சி நில அளவை பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இதன் மூலமாக இவற்றை விரைவாக செய்து முடித்தால் நிச்சயமாக நம்முடைய நகரின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒரு அம்சமாக இது திகழும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் / மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நில அளவை பதிவேடுகள் துறை) திரு.த.விஜயகுமார், விருதுநகர் நகராட்சி பொறியாளர் திரு.ஆர்.எட்வின் பிரைட் ஜோஸ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply