பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காரீப் பருவத்தில் வாழை மற்றும் வெங்காயம் பயிர்களுக்கு உடனடியாக காப்பீடு செய்து பயன்பெறலாம்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) காரீப் 2016 பருவம் முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொகுப்பு -XIV-ல் (Cluster- XIV)-ன் கீழ் வரும் நமது விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்சுரன்ஸ் கம்பெனி லிட் (SBI General Insurance Company Limited) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மாநில அரசின் பங்களிப்புடன் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காரீப் பருவம் ஆரம்பமாகியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் காரீப் பருவ தோட்டக்கலைப்பயிர்களான வாழைப்பயிருக்கு மங்களம், திருத்தங்கல், நத்தம்பட்டி ஆகிய குறுவட்டங்கள் மற்றும் வெங்காயம் பயிருக்கு காரியாபட்டி, முடுக்கன்குளம், மல்லி ஆகிய குறுவட்டங்களுக்கு பயிர் காப்பீடு செய்திட அறிவிப்பு வரப்பெற்றுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறா விவசாயிகள் விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் காப்பீட்டு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
பயிர் காப்பீட்டுத் தொகையில், விவசாயிகள் 5 சதவீதம் மட்டும் அதாவது காரீப் பருவ தோட்டக்கலைப் பயிர்களான வாழை ஏக்கருக்கு ரூ.4426/- மற்றும் வெங்காயம் ஏக்கருக்கு ரூ.1573/- எனவும் பயிர் காப்பீடு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எனவே, விவசாயிகள் கடைசி நேர தாமதத்தை தவிர்த்து உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டின் நடப்பு காரீப் பருவத்தில் வெங்காயப் பயிருக்கு பதிவு செய்ய கடைசி நாள்: 01.09.2025 எனவும் மற்றும் வாழைப்பயிர்களுக்கு பதிவு செய்ய கடைசி நாள் 16.09.2025 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.எனவே, விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீட்டை (Crop Insurance) அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC) தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீட்டு கட்டணம் (Premium) செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply