விருதுநகர் முதலீட்டாளர்கள் சந்திப்பு - 2025 (Virudhunagar Investor Meet 2025)"
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி பொருட்காட்சி வளாகத்தில் நடைபெற்று வரும் விருதுநகர் 4 ஆவது புத்தகத்திருவிழாவில் புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழலை வலுப்படுத்தும் நோக்கத்தோடு, விருதுநகர் மாவட்டத்தின் முன்னணி தொழில்முனைவோர்கள் மூலம் புதிய தொழில்முனைவோருக்கு வழிகாட்டி முதலீடு செய்யும் சூழலை மேம்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட "விருதுநகர் முதலீட்டாளர்கள் சந்திப்பு - 2025 (Virudhunagar Investor Meet 2025)" சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.அசோகன் அவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்(General Partner, July Ventures) திரு.எம்.வி.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் (21.11.2025) தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத்துறையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ((StartupTN) என்பது அனைத்து புத்தாக்க தொழில் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு புத்தொழில் மற்றும் புத்தாக்க சூழலை மேம்படுத்துவதற்கு, உலக சந்தைக்கு தேவையான புதிய தொழில் முயற்சிகளுக்கு தகுந்த வழிகாட்டுதல் வழங்குதல், நிதி திரட்டுவதற்கான வழிமுறையை உருவாக்கி கொடுத்தல், தொழில் வளர்ச்சிக்கு தேவையான தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்தல், தொடக்க நிலையில் உள்ள தொழில் முனைவோர்களுக்கு தொழில் முனைவுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மேற்கொள்ளும் வகையில் தொடங்கப்பட்டு, இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்டார்ட் அப்பின் முயற்சியை எடுக்கவும், நகர்ப்புறங்களில் மட்டும் இல்லாமல் அனைத்து சிறிய கிராமங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது மூலம் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையிலும், தற்போது செய்யக் கூடிய தொழில்களுடன் புதிய தொழில்களும் வரவேண்டும் என்ற நோக்கிலும் இந்த முதலீட்டாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்வில், விருதுநகர் மாவட்டத்தின் தொழில்வளர்ச்சிக்கான கலந்துரையாடல், விருதுநகரின் Startup நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல், புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்வது எப்படி, அதன் மூலம் கிடைக்கப்பெறும் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி, இளம் தொழில்முனைவோர்க்கு வழிகாட்டுதல் என விருதுநகரின் தொழில்முனைவு சூழலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது பற்றி அனைத்து தொழில் முனைவோர்களுடனான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
மேலும், புதிதாக தொழிலை தொடங்கக் கூடியவர்கள், ஏற்கனவே இருக்கக்கூடிய தொழிலை விரிவு செய்யக்கூடியவர்களுக்கு தொழில் சார்ந்த அரசின் மானியங்கள், விரைவான ஒற்றைச்சாளர அனுமதிகள் மற்றும் சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டை மனைகள் உள்ளிட்டவை குறைத்து எடுத்துரைக்கப்பட்டன.இந்த நிகழ்வில் சென்னை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் உள்ள முதலீடு சார்ந்த முன்னணி முதலீட்டாளர்களும் கலந்து கொண்டு, அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.இந்நிகழ்வில் 80 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், 60 க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள், 40 புத்தாக்க சிந்தனையாளர்கள் கலந்து கொண்டு தங்களது புத்தாக்க தொழில்நுட்பங்களை முதலீட்டாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு காட்சிப்படுத்தினர். இக்கூட்டத்தில், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன்,சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், இ.ஆ.ப., அவர்கள், விருதுநகர் மாவட்டம் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்முனைவோர், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0
Leave a Reply