ஆனந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மனறங்களின் தொடக்க விழா நிகழ்ச்சி
ஆனந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மனறங்களின் தொடக்க விழா நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பத்திரிக்கையாளர், ஊடகவியல் பயிற்றுனர் திரு. அரவிந்தன் அவர்கள் கலந்து கொண்டார். பள்ளி தாளாளர் திருமதி ஆனந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்ந நிகழ்ச்சியில் மாணவி தாமரைச்செல்வி வரவேற்புரை ஆற்ற பள்ளி முதல்வர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். விருந்தினருக்கு பள்ளித் தாளாளர் திருமதி ஆனந்தி அவர்கள் பரிசு வழங்கி கௌரவம் செய்தார்.
சிறப்பு விருந்தினர் தனது உரையில் கூறியதாவது கல்வி என்பது வகுப்பறை பாடப் புத்தகத்தில் மட்டும் இருப்பது அல்ல அது எங்கும் பரவி இருக்கிறது. நாம் ஐம்புலன்களையும் விழிப்பாக வைத்திருந்தால் மட்டுமே அந்த கல்வியை அடைய முடியும். ஏன் எதற்கு எப்படி என்ற கேள்வியை எழுப்பினால் மட்டுமே அது சாத்தியப்படும். கேள்விகளை கேட்க கேட்க நிறைய கற்றுக் கொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டில் கல்வி என்பது சில பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. மற்றவர்கள் அவரவர் குலத் தொழிலை செய்தனர். காமராஜர் ஆட்சிக்கு வந்த பின்பு தான் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வியை கொண்டு வந்தார்.
மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிவதற்கு உதவியாக மதிய உணவு திட்டத்தையும் கொண்டு வந்தார். இதனை இன்று இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்கள் பின்பற்றுகின்றன. அதனால் தான் அவருடைய பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறோம். படிக்காமல் சச்சின் போல் புகழ் அடையலாம் என்று நினைக்கலாம். அது கோடியில் ஒருத்தரால்தான் முடியும். நீங்கள் என்னவாக ஆக விரும்பினாலும், உங்களுக்கு பின்னால் கல்வியை அடித்தளமாக இடுங்கள். அரசியல்வாதியாக இருந்தால் ஐந்து ஆண்டுகள்தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும். மாவட்ட ஆட்சியாளராக இருந்தால் 50 ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்யலாம். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுங்கள். கவலை இன்றி மகிழ்ச்சியுடன் இருங்கள் என்றார்.
மாணவர்களின் தனிப்பாடல், உரை வீச்சு, சேர்ந்திசைப் பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.மாணவன் தமிழ் இனியன் நன்றிஉரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
0
Leave a Reply