உலக கோப்பை வில்வித்தை: திராஜ் வரலாற்று சாதனை.
மெக்சிகோவில் நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை பைனல் தொடரில் இந்திய வீரர் திராஜ் பொம்மதேவரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
நடப்பு சீசனில் நடைபெற்ற நான்கு உலக கோப்பை ஸ்டேஜ் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட 32 வீரர்கள், தனிநபர் ரீகர்வ் மற்றும் காம்பவுண்டு பிரிவுகளில் பங்கேற்க தகுதி பெற்றனர். இந்தியா சார்பில் ரீகர்வ் பிரிவில் திராஜ் மட்டும் பங்கேற்றார்.
இறுதிப் போட்டியில் ஜப்பானின் நகானிஷி ஜுன்யாவை எதிர்கொண்ட திராஜ், முதல் நான்கு செட்களின் முடிவில் 3-5 என்ற கணக்கில் பின்தங்கினார். இருப்பினும், அடுத்த செட்டை 28-27 என கைப்பற்றி போட்டியை 5-5 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட்-ஆஃப் நடத்தப்பட்டது. இதில் திராஜ் 10 புள்ளிகளையும், ஜப்பான் வீரர் ஜுன்யா 9 புள்ளிகளையும் பெற்றனர். இதன் மூலம் திராஜ் 6-5 என்ற கணக்கில் திரில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
உலக கோப்பை பைனல் வில்வித்தை தொடரின் ரீகர்வ் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் திராஜ் பெற்றார்.
0
Leave a Reply