பூமியின் ‘இரண்டாவது நிலவு’.
‘2025 PN7’ என்ற விண்கல், பூமியின் இரண்டாவது நிலவு போன்ற நிலையில் சூரியனைச் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமிக்கு இயற்கையாக ஒரே ஒரு நிலவு மட்டுமே உள்ளது. பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான சராசரி தொலைவு சுமார் 3.84 லட்சம் கிலோமீட்டர்.
இந்நிலையில், ஹவாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 2025 ஆகஸ்ட் 29-ம் தேதி ‘2025 PN7’ என்ற சிறிய விண்கல்லைக் கண்டறிந்தனர்.
இந்த விண்கல் பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகிலேயே, சூரியனைச் சுற்றி வருகிறது. பூமியுடன் ஒத்த சுற்றுப்பாதையில் பயணிப்பதால், இது ‘குவாசி மூன்’ (Quasi-Moon) எனப்படும் பூமியின் தற்காலிகத் துணை நிலவு போன்ற வகையைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த விண்கல் கடந்த 1960-ம் ஆண்டு முதல் இதுபோன்ற சுற்றுப்பாதையில் இருப்பதாகவும், சுமார் 2083-ம் ஆண்டு வரை இந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பூமியுடனான இந்தச் சுற்றுப்பாதை உறவு மாறும்.
‘2025 PN7’ விண்கல்லின் அகலம் சுமார் 62 அடி, நீளம் சுமார் 98 அடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது நிலவைவிட பூமிக்கு மிகவும் அருகில் இருப்பது போல் தோன்றினாலும், அதன் சிறிய அளவு காரணமாக வெறும் கண்களால் பார்க்க முடியாது. சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மற்றும் வானியல் கருவிகளின் உதவியுடன் மட்டுமே இதைக் காண முடியும்.
மேலும், இந்த விண்கல்லால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பும் பூமியுடன் இதுபோன்ற சுற்றுப்பாதை உறவை கொண்டிருந்த பல ‘குவாசி மூன்’ பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
0
Leave a Reply