சுற்றுச்சூழல் தின கருத்தரங்கம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மிளகாய் வத்தல் மண்டபத்தில் (07.06.2024) கரிசல் இலக்கிய கழகம் சார்பில், சுற்றுச்சூழல் தின கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கரிசல் இலக்கியத்தையும், கரிசல் பண்பாட்டையும் நாமும் நமது வருங்காலச் சந்ததிகளும் அறிந்து கொள்ளவும், கரிசல் இலக்கியங்கள் பற்றிய ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துவதும், கரிசல் இலக்கியப் படைப்புகளை மக்களிடையே கொண்டு போய்ச் சேர்ப்பதும், புதிய படைப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், மாணவர்கள், பொதுமக்கள், இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும், வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தவும், கரிசல் இலக்கியத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் வகையில் “கரிசல் இலக்கிய கழகம்” உருவாக்கப்பட்டு, பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக இன்று சுற்றுச்சூழல் தின கருத்தரங்க நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கரிசல் மண்ணான நமது பகுதிகளில் நீர் நிலைகளை எவ்வாறு உருவாக்கி, பாதுகாத்தனர். நீரினை தேக்கி விவசாயத்திற்கும், குடிநீருக்கும் எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்ற குறிப்புகள் கரிசல் இலக்கியத்தில் இடம் பெற்றிருக்கின்றது. பண்டைய காலத்தில் நீர் நிலைகளை எவ்வாறு பாதுகாத்தனர் என்பது குறித்த பல்வேறு ஆய்வு அறிக்கைகள் தெளிவாக எடுத்துரைக்கிறது. நீர் அதிகமாக உள்ள பகுதிகளில் அதன் பெருமைகளை பேசுவதை விட, நீர் குறைவாக உள்ள பகுதிகளில் தான் நீரின் பெருமைகள் பற்றி உணர்ந்துள்ளனர்.நீர்நிலைகள் அனைத்து உயிரினங்களுக்கும் பயன்படும் வகையில் அதன் கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். இவ்வாறு பண்டைய காலங்களில் மிகவும் பாதுகாப்பாக இருந்த நீர்நிலைகள் தற்போது மாசடைந்து வருகின்றது.நீர்நிலைகளில் பல்வேறு இடங்களில் குப்பைகள் கொட்டி வந்துள்ள நிலை மாறி, தற்போது நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு அனைத்து பகுதிகளிலும் வசிக்கக்கூடிய மக்களுக்கு வந்திருக்கிறது. நமது மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் இயற்கை மற்றும் பல்லுயிர் சமநிலையை பாதுகாக்க கூடிய நிறைய பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன.
நமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய மேற்கு தொடர்ச்சி மலையானது பல்லுயிர் சமநிலையை பாதுகாக்க கூடிய ஒரு மையமாக செயல்பட்டு வருகிறது. மலைகளில் உற்பத்தியாக கூடிய நீரினை முறையாக மேலாண்மை செய்தால், நமது மாவட்டத்தினுடைய அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யலாம். இந்த இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கும், நீர்நிலைகளை பேணி பாதுகாப்பதற்கும், உரிய சிந்தனையை அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்ற வேலையை இந்த கரிசல் இலக்கிய கழகமானது தொடர்ந்து செய்யும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், எழுத்தாளர் பாமயன் அவர்கள் சுற்றுச்சூழலும், கரிசல் இலக்கியமும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து, எழுத்தாளர் பாமா, கரிசல் இலக்கிய கழக பொருளாளர் திரு.பெருமாள் சாமி ஆகியோர் சுற்றுச்சூழல் மற்றும் கரிசல் இலக்கியம் குறித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
முன்னதாக சுற்றுச் சூழல் குறித்த ஓவிய கண்காட்சியினை கரிசல் இலக்கிய கழக செயற்குழு உறுப்பினர் திரு.ரவீந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.மேலும், பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், தேவராட்டம், வாள் சண்டை, யோகா உள்ளிட்ட மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இந்நிகழ்ச்சியில் கரிசல் இலக்கிய செயலாளர் மரு.த.அறம் அவர்கள் வரவேற்புரையும், கரிசல் இலக்கிய கழக செயற்குழு உறுப்பினர் எழுத்தாளர் காமராஜ் அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply