எப்போதும் கையாலோ அல்லது இயர் பட்ஸாலோ காதுக்குள் குடைவதும் சொரிவதுமாக இருப்பது நல்ல பழக்கம் இல்லை
எப்போதும் கையாலோ அல்லது இயர் பட்ஸாலோ காதுக்குள் குடைவதும் சொரிவதுமாக இருப்பது நல்ல பழக்கம் இல்லை. இது மிகவும் ஆபத்தானதும் கூட. இதனால் காதுக்குள் இன்ஃபெக் ஷன் ஏற்படலாம்..காதுகளை குடைந்து பழகி விட்டால் மீண்டும் மீண்டும் குடைய வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அதுவும் குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்கள் எக்காரணம் கொண்டும் காதுகளைக் குடையக்கூடாது. இன்ஃபெக் ஷன் ஏதாவது ஏற்பட்டால் இவர்களுக்கு அதை குணப்படுத்துவது மிகவும் சிரமமாகும்.
காதுக்குள் அரிப்பு ஏற்பட பல காரணங்கள் உண்டு. முக்கியமான காரணம் ஜலதோஷம் மற்றும் நடு காதில் ஏற்படும் குறை அழுத்தம் காரணமாக சிலருக்கு காதுக்குள் அரிப்பு உண்டாகலாம். ஒவ்வாமை, வறண்ட சருமம், காது மெழுகு அதிகம் வெளியேறுதல் போன்றவற்றால் காதுக்குள் அரிப்பு ஏற்படும். காதுக்குள் போதுமான அளவு ஈரப்பதம் இல்லாததால் காதில் வறட்சி ஏற்பட்டு அரிப்பு ஏற்படலாம்.ஸ்கூபா டைவிங், நீச்சல் மற்றும் சர்ஃபிங் போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களிடம் இது அதிகமாகக் காணப்படும். எனவே, இவர்கள் நீந்தும்போது காதுகளை இயர் ப்ளக்ஸ் அல்லது ஷவர் கேப் பயன்படுத்தலாம்.
குளிர்காலத்தை விட, கோடையில்தான் இந்த பூஞ்சைத் தொற்று அதிகம் ஏற்படும். பொதுவாக, காதில் இருக்கும் மெழுகை சுத்தம் செய்ய சிலர் காட்டன் பயன்படுத்துவதால் காது மெழுகு இன்னும் உள்ளே ஆழமாக தள்ளிப் போய் சிக்கல்களை ஏற்படுத்தும். காதில் உருவாகும் மெழுகு காதை சுத்தமாக வைத்திருக்கவும், தொற்று நோய் உருவாவதை தடுக்கவும், பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதனை அடிக்கடி அகற்றுவது நல்லதல்ல. அதனால் காதை சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று விரல்களாலோ, சேஃப்டி பின் கொண்டோ, பைக் சாவி, முறுக்கப்பட்ட முரட்டு துணிகளாலோ அழுத்தி எடுக்கும்போது காது மெழுகை பின்னோக்கித் தள்ளுவதுடன், வலியும் ஏற்படும். அத்துடன் செவித்திறன் குறைபாடும் உண்டாகவும் வாய்ப்புண்டு.
முடியை அலசுவதற்காக உபயோகப்படுத்தப்படும் ஷாம்பூ மற்றும் ஹேர் ஸ்ப்ரே போன்ற பொருட்களின் ஒவ்வாமையினால் கூட காதுகளில் அரிப்பு, சிவந்து போகுதல், அழற்சி போன்றவை ஏற்படும். காது கேட்கும் கருவிகள் அணிந்திருந்தால் அவற்றை அடிக்கடி சுத்தம் செய்வதும் மிகவும் அவசியம்.காதில் வலி, அரிப்பு, சீழ் வடிதல் போன்றவை இருந்தால் தாமதப்படுத்தாமல் நல்ல காது மூக்கு தொண்டை (ENT) சிகிச்சை மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
0
Leave a Reply