ஜெட்ஏர்வேஸ் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்
இந்தியாவில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற விமான சேவை நிறுவனமாக இருந்தது ஜெட் ஏர்வேஸ். திடீரென நிதி நெருக்கடியில் சிக்கி தனது செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்தது.இதனிடையே கடன் மோசடி வழக்கில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டார். தற்போது அவருக்கு மனிதாபிமான அடிப்படையில் மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயிலுக்கு மும்பை உயர்நீதிமன்றம் இரண்டு மாதம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 538 கோடி ரூபாய் கடன் மோசடி செய்ததாக கனரா வங்கி சார்பில் சிபிஐயிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அதன் நிறுவனர் நரேஷ் கோயல் அவரது மனைவி அனிதா கோயல், அந்த நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து நரேஷ் கோயலை கைது செய்தது. தற்போது 71 வயதாகும் நரேஷ் கோயல், நீதிமன்ற காவலில் மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகிய இருவருமே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இடைக்கால ஜாமின் கேட்டு நரேஷ் கோயல் மனு தாக்கல் செய்திருந்தார்.
கடந்த பிப்ரவரியில் சிறப்பு நீதிமன்றம் கோயலுக்கு ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டது. இருப்பினும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவ சிகிச்சை பெற அனுமதி தந்தது. தகுதி அடிப்படையில் ஜாமின் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமின் வழங்க கோரி கோயல் மும்பை உயர்நீதிமன்றத்தை நாடினார். அவரது மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம் மருத்துவ காரணங்களுக்காகவும் மனிதாபிமான அடிப்படையிலும் இரண்டு மாதங்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.அத்துடன் ஒரு லட்சம் ஜாமீன் தொகையை கோயல் செலுத்த வேண்டும் என்றும் விசாரணை நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி மும்பையை விட்டு வெளியேறக்கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது. கோயலின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது கோயல் மும்பை ரிலையன்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 2017ஆம் ஆண்டுப் பிறகு நஷ்டத்தைச் சந்திக்கத் தொடங்கியது. இழப்பு அதிகமான நிலையில், 2019 ஏப்ரல் மாதம் ஜெட் ஏர்வேஸ் அதன் விமான சேவையை முழுமையாக நிறுத்தியது
0
Leave a Reply