'பாரா' ஆசிய விளையாட்டு: 3வது நாளில் இந்தியாவுக்கு 29 பதக்கங்கள் குவந்தது!
'பாரா' ஆசிய விளையாட்டு மூன்றாவது நாளான நேற்று, இந்தியா 5 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கம் கைப்பற்றியது.
ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு 5வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 168 பேர் பங்கேற்றுள்ளனர். முதல் இரண்டு நாளில் 35 பதக்கம் கைப்பற்றிய இந்திய நட்சத்திரங்கள் நேற்றும் தனது பதக்க வேட்டையைத் தொடர்ந்தனர்.
ஓட்டப் போட்டி
பெண்கள் 100 மீ. ('டி 35'): இந்தியாவின் பிரீத்தி பால், 13.98 வினாடி நேரத்தில் வந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஆண்கள் 100 மீ. ('டி 64'): பைனலில் இந்தியாவின் பிரனவ் தேசாய், 11.96 வினாடியில் வந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆண்கள் ஓட்டம் ('டி 47'): பைனலில் திலிப் மகது காவிட், 10.69 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
குண்டு எறிதல் போட்டி
ஆண்கள் குண்டு எறிதல் ('எப் 53'): பைனலில் இந்தியா சார்பில் ஆயுஷ் வர்மா (35) களமிறங்கினார். ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சமாக 8.16 மீ. தூரம் எறிந்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
பெண்கள் குண்டு எறிதல் ('எப் 34'): இந்தியாவின் பாக்யஸ்ரீ வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
ஈட்டி எறிதல் போட்டி
ஆண்கள் ஈட்டி எறிதல் ('எப் 12/13'): இந்தியாவின் மஞ்ஜீத் வியாஸ் வெள்ளி வென்றார்.
ஆண்கள் ஈட்டி எறிதல் ('எப் 55'): இந்தியாவின் சுஹ்செய்ன் (29.94 மீ.) வெண்கலம் வசப்படுத்தினார்.
வட்டு எறிதல் போட்டி
பெண்கள் வட்டு எறிதல் ('எப் 55'): இந்தியாவின் கரம்ஜோதி (21.60 மீ.) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆண்கள் வட்டு எறிதல் ('எப் 37'): இந்தியாவின் ஹனே (57.04 மீ.) வெண்கலம் வசப்படுத்தினார்.
வில்வித்தை போட்டி
காம்பவுண்டு பெண்கள் இரட்டையர்: பைனலில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, பயல் நாக் ஜோடி சீன ஜோடியைச் சந்தித்தது. முதல் செட் 36-36 என சமமானது. அடுத்தடுத்த செட்களில் (35-38, 34-38, 36-38) பின்தங்கிய இந்திய ஜோடி 141-150 எனத் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.
பவர் லிப்டிங் போட்டி
பெண்கள் பவர் லிப்டிங்: இந்தியா சார்பில் கஸ்தூரி ராஜாமணி, 42, (தமிழகம்) பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 103 கிலோ தூக்கினார். அடுத்து கடைசி 3வது வாய்ப்பில் 108 கிலோ தூக்கி, கஸ்தூரி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.
பேட்மிண்டன் போட்டி
ஆண்கள் இரட்டையர் ('எஸ்.எச் 6'): லீக் போட்டியில் இந்தியாவின் சிவராஜன் சோலைமலை - கிருஷ்ணா ஜோடி 6-21, 8-21 என சீன ஜோடியிடம் தோற்றது. முடிவில் 3 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வென்று இரண்டாமிடம் பெற, வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
உயரம் தாண்டுதல் போட்டி
ஆண்கள் உயரம் தாண்டுதல் ('டி 64'): இந்தியா சார்பில் பிரவீன் குமார், பான்டி பங்கேற்றனர். இதில் 2.05 மீ. உயரம் தாண்டிய பிரவீன் குமார், ஆசிய பாரா சாதனையுடன் தங்கப் பதக்கம் வசப்படுத்தினார். 1.92 மீ. தாண்டிய பான்டிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
0
Leave a Reply