25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


புரட்டாசி சனிக்கிழமை  பற்றிய புராண கதை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புரட்டாசி சனிக்கிழமை பற்றிய புராண கதை

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். புரட்டாசி சனிக்கிழமைகளில் காகத்திற்கு எள்ளும் வெல்லமும் கலந்த சாதம் வைத்தால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும். மறந்து கூட சில தவறுகளை செய்யக்கூடாது அப்படி செய்தால் பணப்பிரச்சினை வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. சனிபகவானைப் பார்த்து பலரும் பயப்படுகின்றனர். காரணம் சனியின் பார்வை பயங்கரமானது. மக்கள் தன்னைப்பார்த்து பயப்படுவதை விட தன்மீது அன்பு செலுத்த வேண்டும் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் சனிபகவான் விரும்புகிறார். சனிபகவானுக்கு பெருமைப்படுத்த அந்த ஏழுமலையானே ஒரு புரட்டாசி சனிக்கிழமை நாளில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார். இது பற்றிய புராண கதை ஒன்று உள்ளது. 

சனி உஷஸ் எனப்படும் சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மங்களமானதாகவும், அனைத்து சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு உகந்த நாட்களாகவும் விளங்குகின்றன. இது ஏன் எப்படி என்று பல கேள்விகள் எழலாம்.. சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன். கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள். கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள்.

. அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, "சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.

அங்கே வந்த நாரதர், "சனீஸ்வரா! யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தால் மங்களமாகி விடுவாய்!" என்று கூறினார். கண்ணனை மகிழ்விக்க நான் என்ன செய்ய வேண்டும்?" என்று சனீஸ்வரன் கேட்டார். அதற்கு நாரதர், "ஹோலிகா என்று இரணியனுக்கொரு சகோதரி இருந்தாள். அவளுக்குத் தீயால் சுடப்படாமல் இருக்கும் விசேஷத் தன்மை உண்டு. பிரகலாதனைப் பல விதமான தண்டனைகளுக்கு உள்ளாக்கியும் அவன் அவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்ட இரணியன், ஹோலிகாவிடம் பிரகலாதனை ஒப்படைத்தான். பிரகலாதனைத் தீயில் தள்ளிய ஹோலிகா, தானும் தீக்குள் இறங்கி அவனை வெளிவரமுடியாதபடி அழுத்தினாள். அப்போது நரசிம்மப் பெருமாள் ஹோலிகாவின் பிடியிலிருந்து பிரகலாதனைக் காத்து வெளியே அழைத்து வந்தார்.

ஹோலிகாவிடமிருந்து நரசிம்மர் பிரகலாதனைக் காத்த நாளைத்தான் ஹோலிப் பண்டிகையாக மக்கள் கொண்டாடுகின்றார்கள். அந்த ஹோலிகா பெண் என்பதால் நரசிம்மர் அவளைக் கொல்லாமல் விட்டுவிட்டார். இப்போது அவள் தன் சகோதரனான இரணியனைக் கொன்ற திருமாலைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறாள். திருமால் கண்ணனாக அவதாரம் செய்ததை அறிந்து கோகுலத்துக்கு அவள் வந்துவிட்டாள். ஹோலிப் பண்டிகை தினத்தன்று தன்னிடம் இருந்து பிரகலாதனை அவன் காத்த கண்ணனையும் அவன் தோழர்களையும் தீக்கு இரையாக்கிப் பழிதீர்க்கத் திட்டம் தீட்டியிருக்கிறாள். சனீஸ்வரா! நீ அந்த ஹோலிகாவைக் கண்டறிந்து அவளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டால், கண்ணனை மகிழ்விக்கலாம். அவன் அருளைப் பெறலாம். நீயும் மங்களகரமாக ஆகலாம்!" என்று உபதேசித்தார். 

ஹோலிப் பண்டிகை நாளன்று கண்ணனும் அவன் தோழர்களும் பெரிய பெரிய கொள்ளிக் கட்டைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, நரசிம்மர் மற்றும் பிரகலாதனின் திருநாமங்களைப் பாடி, ஹோலிகாவின் கொடும்பாவியை எரித்து ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கொள்ளிக்கட்டைகளுக்குள் ஹோலிகா ஒளிந்திருந்தாள். தீ மூட்டப்பட்டவுடன் கண்ணனையும் அவன் தோழர்களையும் உள்ளே இழுத்துவிட வேண்டும் என்று எண்ணிய அவள் மேல் சனீஸ்வரன் தன் பார்வையைச் செலுத்தினான். சனிபார்வை பட்டவுடனேயே ஹோலிகா தன் சக்திகள் அனைத்தையும் இழந்து விட்டாள். 

கண்ணன் தீ மூட்டினான். அத்தீயில் ஹோலிகா எரிந்து சாம்பலானாள். நாரதர் சனீச்வரனைக் கண்ணனிடம் அழைத்துச்சென்று நடந்தவற்றை விவரித்தார். அப்போது சனீஸ்வரனது தொண்டுக்கு மனமுகந்த கண்ணன், "சனீஸ்வரா! நீ இனிமேல் மங்களமானவனாகத் திகழ்வாய் என்று வரம் கொடுத்தார். அன்றைய தினம் புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் பக்தர்களுக்கு பிடித்தமானதாக இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்களை சனிபகவான் தொல்லை செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம். புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். காகத்திற்கு அன்று எள்ளும் வெல்லமும் கலந்த சாதம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News