திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துதல் தொடர்பாகசிறப்பு பயிற்சி வகுப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் (05.07.2024) தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி-II சார்பில் திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துதல் தொடர்பாக அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தொடங்கி வைத்தார்.திடக்கழிவு மேலாண்மையில் தொடர்ச்சியான செயல்பாடு முக்கியம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளில், எந்த ஊராட்சியில் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தொடர்ச்சியாக செயல்படுகிறார்களோ அங்கு மாற்றம் வந்திருக்கின்றது.
இந்தியாவினுடைய தலைநகராக இருக்கக்கூடிய டெல்லியில், சுற்றுச்சூழல் பிரச்சனை குறிப்பாக காற்றில் இருக்கக்கூடிய மாசின் காரணமாக நுரையீரல் பாதிப்பில் ஒருவருடைய சராசரி ஆயுள் காலம் சில ஆண்டுகள் குறைகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நுரையீரல் சம்பந்தமான மருத்துவரிடம் போகக்கூடிய நோய்களின் எண்ணிக்கை ஒரு மாதத்திற்கு 100 பேர் இருந்தால் அது சராசரியாக 120 முதல் 130 நபராக உயர்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு முக்கிய காரணம் நாம் எரிக்கக் கூடிய குப்பைகள்.சராசரியாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஓர் ஆண்டுக்கு குறிப்பாக சுகாதார கேடுகளால் பரவக்கூடிய தொற்றுநோய் என்று சொல்லக்கூடிய வயிற்றுப்போக்கு, காலரா மாதிரியான நோய்களினால் வருடத்திற்கு குறைந்தபட்சம் 15 ல் இருந்து 20 நாட்கள் உடல் நிலை சரியில்லாமல் போகிறார்கள். இது எந்தெந்த ஊர்களில் எந்தெந்த இடங்களில் எல்லாம் குப்பையை முறையாக பராமரிக்கிறார்களோ அங்கு இந்த நாட்களினுடைய எண்ணிக்கை குறைவு. வயதானவர்கள், நோய் எதிரப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் இந்த சுற்றுச்சூழல் பாதிப்பினால் நோய்களுக்கு ஆட்படுகின்றனர்.
பொதுமக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொடுத்தாலும், அவர்களுக்கு ஆரோக்கியத்திற்கான வேலையை செய்வது மிக மிக முக்கியமானது. சுகாதாரம் பேணுவது மற்றும் குடிநீரை வழங்குதல் ஆகியவை உள்ளாட்சி அமைப்பினுடைய இரண்டு கைகள்.கடைகள், வணிக வளாகங்கள், பெரிய நிறுவனங்கள் அவர்களுடைய திடக்கழிவு மேலாண்மையை அவர்களே செய்ய வேண்டும். குப்பைகளை மறுசுழற்சி செய்ய வேண்டும்.குப்பைகள் கொட்டுவது, திறந்த வெளி மலம் கழித்தல், குப்பைகள் எரிப்பது குறித்த மக்களின் மனநிலையை மாற்றுவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மாற்றத்தை உருவாக்க முடியும். இந்தியாவைப் போன்ற சம வளர்ச்சி உள்ள நாடுகளில் கூட குப்பைகளை சிறப்பாக கையாளுகிறார்கள். நீங்கள் நினைத்தால் அது நம் நாட்டிலும் முடியும்.நம் கிராமத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்றால், மக்களிடையே குப்பை மேலாண்மை குறித்தும், குப்பை மேலாண்மை பழக்கவழக்கத்தை மாற்றுவதற்கும் முயற்சி செய்ய வேண்டும். பல கிராமங்களில் இது சிறப்பாக செய்திருக்கிறார்கள்.ஊராட்சிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது, நிதி ஆதாரங்களை அதிகம் வழங்குவது, புதிய உபகரணங்களை வழங்குவது போன்ற காரணங்களை தாண்டி இவற்றையெல்லாம் விட திடக்கழிவு மேலாண்மையில் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு தொடர்ச்சியான செயல்பாடு முக்கியம்.
இதெல்லாம் செய்ய வேண்டியது கோரிக்கையோ, வேண்டுகோளோ, அரசின் அறிவுறுத்ததோ அல்ல. இது சட்டபூர்வமானது. திடக்கழிவு மேலாண்மை சட்டத்தின்படி உள்ளாட்சி அமைப்புகள் திடக்கழிவு மேலாண்மையை முழுமையாக செய்வது, அவர்களுக்கான சட்டபூர்வமான கடமை. அந்த சட்டபூர்வமான கடமைகளை எந்த உள்ளாட்சி அமைப்புகள் செய்யவில்லையோ, அவர்களுக்கு தனிப்பட்ட விதத்தில் பலமுறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதற்கென்று தனியாக ஒரு உயர் நீதிமன்றத்தை போன்று அதிகாரம் உள்ள நீதி அமைப்பு இருக்கின்றது. அது பசுமை தீர்ப்பாயம். அந்த தீர்ப்பாயத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய பணி சுற்றுச்சூழல் சம்பந்தமான பிரச்சினைகளை தீவிரமாக ஆய்வு செய்து அதற்குரிய உத்தரவுகளை பிறப்பிப்பது.தினந்தோறும், செய்தித்தாள்கள், சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை பார்த்தால், அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுமாடு குறித்து தான் உள்ளது.எனவே, இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும். வந்திருக்கக்கூடிய ஊராட்சி தலைவர்களுக்கும், செயலாளர்களுக்கும் பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய சட்டப்பூர்வமான கடமைகள் மற்றும் அடிப்படை கடமை இந்த இரண்டும் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
0
Leave a Reply