வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் விற்பனைக்குழுவில் 7 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சொந்த கட்டிடத்தில் விருதுநகர், இராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை இயங்கி வருகின்றன. வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியவை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் விளையும் நெல், பருத்தி விதை, உளுந்து, சோளம், எள், நிலக்கடலை, மிளகாய் வத்தல், கொப்பரை தேங்காய், பாசிப்பயறு, குதிரைவாலி, கம்பு, மல்லி, கரும்பு, வெல்லம், முந்திரி, சூரியகாந்தி விதை மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளை பொருட்களையும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்து உலர வைத்து காய வைப்பதற்கு உலர்கள வசதியும், விளைபொருட்களை சேமித்து வைக்க 17400 மெ.டன் கொள்ளளவு கொண்ட 16 குடோன்கள் பரிவர்த்தனை கூடம், ஏலக்கொட்டகை வசதியும் மற்றும் மூன்று குளிர்பதன கிட்டங்கி வசதியும் உள்ளன. எனவே விவசாயிகள் தாங்கள் விளைவித்த அனைத்து வேளாண் விளைப்பொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கிகளில் இருப்பு வைத்து பயன பெற கேட்டுக்; கொள்ளப்படுகிறது.
பொருளீட்டுக்கடன் வசதி :
சிறு, குறு விவசாயிகளுக்கு,விளைபொருட்களின் மொத்த மதிப்பில் 75 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு, விளைபொருட்களின் மொத்த மதிப்பில் 50 சதவீதமும் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பொருளீட்டு கடன் பெறலாம். விவசாயிகள் கடன் பெற்ற 15 நாட்களுக்கு வட்டி கிடையாது. அதன் பிறகு 5 சதவீத வட்டி மட்டும் வசூலிக்கப்படும். அதிகபட்சமாக கிட்டங்கியில் விளைபொருட்களை 180 நாட்கள் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். கொள்முதல் செய்யும் வியாபாரிகள், விவசாயிகளுக்கு உடனடியாக பணப்பட்டுவாடா செய்திட, ஏதுவாக வியாபாரிகளுக்கும் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. வியாபாரிகளிடம் இருந்து பொருளீட்டு கடனுக்காக 9 சதவீதம் வட்டியும் மற்றும் 180 நாட்கள் வரை இருப்பு வைத்து பயன் அடையலாம். FPO-களுக்கு ரூ.10.00 இலட்சம் வரை பொருளீட்டுக்கடன், 5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
குறைந்த வாடகையில் இருப்பு வைக்கும் வசதி:
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருள்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருப்பு வைப்பதற்கு நாள் ஒன்றுக்கு 1 குவிண்டாலுக்கு 25 பைசா வீதமும், வியாபாரிகள் நாள் ஒன்றுக்கு 1 குவிண்டாலுக்கு 50 பைசா வீதமும் குறைந்த வாடகையில் இருப்பு வைத்து பயன் பெறலாம்.
மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் (e-National Agriculture Market):
விருதுநகர், இராஜபாளையம், சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தைகள் (e-NAM) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் விளைபொருட்கள் தரப்பகுப்பாய்வு செய்யப்பட்டு மின்னணு முறையில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு உரிய கொள்முதல் தொகை உடனடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
விலை ஆதரவு திட்டம் (Price Support Scheme - PSS)
மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின்கீழ் (Price Support Scheme - PSS) சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் வாயிலாக NAFED நிறுவனத்தின் மூலம் உளுந்து கிலோ ஒன்றுக்கு ரூ.78/- என்ற குறைந்தபட்ச ஆதார விலையில் (MSP) கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனவே சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை பகுதி விவசாயிகள் சம்மந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் அசல் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகிய விவரங்களை சமர்ப்பித்து 25.03.2026-க்குள் பதிவு செய்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும், சேமித்து வைப்பதற்கும் மற்றும் பொருளீட்டுகடன் பெறுவதற்கும் 9952341770 என்ற எண்ணில் விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளரையும், 8248405989 என்ற எண்ணில் இராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளரையும், 9003356172 என்ற எண்ணில் சாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளரையும், 7904537699 என்ற எண்ணில் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைகூட மேற்பார்வையாளரையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply