மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்கள்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில் (24.06.2024) நடைபெற்றது.இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டாமாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்கள். முன்னதாக, சிவகாசி வட்டம், திருத்தங்கலைச் சேர்ந்த செல்வன் சு.சூரிய பிரகாஷ் தனது தாய், தந்தை இருவரும் சிறுவயதிலேயே இறந்துவிட்டதாகவும், தனது பாட்டியின் கண்காணிப்பில் படித்ததாகவும், தனது பாட்டியும் (24.04.2024) அன்று காலமாகிவிட்டதாகவும், தற்போது யாருடைய ஆதரவும் இல்லாமல் தொண்டு நிறுவனம் மூலம் அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் முதலாம் ஆண்டு (பி.காம்) முடித்துள்ளேன் என்றும், தனது படிப்பிற்கு உதவி செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் மனு கொடுத்ததன் பேரில், அந்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.10,000/- க்கான காசோலையினையும்,
சிவகாசி வட்டம், எரிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தந்தையை இழந்த செல்வி ர.தன்யாஸ்ரீ (3-ம் வகுப்பு), செல்வன் ர.ஜெயகணேசன் (5-ம் வகுப்பு) மாணவர்களுக்கு கல்வி மற்றும் பராமரிப்பு தொகை வழங்க கோரி அவர்களின் தாயார் திருமதி நாகம்மாள் என்பவர் மனு அளித்ததன் அடிப்படையில், அந்த மாணவர்களுக்கு கல்வி மற்றும் பராமரிப்பு செலவிற்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.5,000/- க்கான காசோலையினையும்,விருதுநகர் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் 1 பயனாளிகளுக்கு தலா ரூ.13,200/- மதிப்பிலான ஸ்மார்ட் கைபேசியினையும், 1 பயனாளிக்கு ரூ.3,200/- மதிப்பிலான பிரைய்லி கைக்கடிகாரம், கருப்புக்கண்னாடி, மடக்கு ஊன்றுகோல் ஆகியவற்றையும்,இக்கூட்டத்தில், விண்ணப்பம் அளித்த சிவகாசி வட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்த திருமதி கிருஷ்ணவேனி என்பவருக்கு உடனடி தீர்வாகவும், சாத்தூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வின் போது தையல் இயந்திரம் வேண்டி மனு அளித்த திருமதி காளீஸ்வரி என்பவருக்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2 நபர்களுக்கு தலா ரூ.12,500/- வீதம் மொத்தம் ரூ.25,000ஃ- மதிப்பிலான தையல் இயந்திரங்களையும்,மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்த சாத்தூர் வட்டம் நள்ளி கிராமத்தைச் சேர்ந்த லேட் திரு.கருப்பசாமி மற்றும் லேட் திரு.மாரிமுத்து ஆகியோரின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.2 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.4 இலட்சம் இழப்பீட்டு தொகைக்கான காசோலைகளையும்,என மொத்தம் 9 பயனாளிகளுக்கு ரூ.4.56 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் வழங்கினார்.
பின்னர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்கள் பிடித்த கல்லூரி மாணவர்களுக்கும், கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்கள் பிடித்த பள்ளி மாணவர்களுக்கும், என வெற்றி பெற்ற 12 பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
0
Leave a Reply