தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (01.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஒவ்வொரு குழந்தையையும் மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் விதமாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வருகின்ற 15.09.2026 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 60 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 அரசு மருத்துவமனைகள், 1 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் 15.09.2026 அன்று முதல் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தலா 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு சராசரியாக 25 முதல் 30 குழந்தைகள் பிறக்கின்றன.அதன்படி, விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது, தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள், தங்க மோதிரம் வைப்பறைகள், அதற்கான பாதுகாப்பு வசதிகள், நிகழ்ச்சி நடைபெறும் இடம், பயனாளிகள் அமர்வதற்கான ஏற்பாடுகள், வருகை தரும் பயனாளிகளுக்கு முறையாக வசதிகளை ஏற்படுத்தி தருதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் வசதி, சுகாதார வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங், மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.வே.யசோதாமணி, மருத்துவர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
0
Leave a Reply