மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா 2026-2027 போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்(25.08.2026) பார்வையிட்டார்.
தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மேலும், கல்வித்திறனை மேம்படுத்துவதோடு மாணவர்களிடையே உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்த்திடும் வகையிலும் மாவட்டம் முழுவதும் கலைத்திருவிழாக்களை நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், மாவட்டத்தில் கலைத்திருவிழா நிகழ்ச்சிகள் மூலம் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி மற்றும் நரிக்குடி ஆகிய ஒன்றியங்களில் பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு ஓவியம், களிமண் சிற்பம், கீ போர்டு, நடனம், நாடகம், சித்திரம் வரைதல், செதுக்கு சிற்பம், இசை, நடிப்பு, பாடல், பலகுரல், பேச்சு, ஓவியம், ரங்கோலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
ஊராட்சி ஒன்றிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் 24.08.2026 மற்றும் 25.08.2026 ஆகிய தினங்கள் விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.இதில், 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் 524 அரசுப்பள்ளி மாணவர்கள், 282 அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் 348 அரசுப்பள்ளி மாணவர்கள், 225 அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் என மொத்தம் 1379 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் நடத்தப்படும் போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே, மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டு, மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply