விருதுநகர் மாவட்டம் சுவை, தாளித மற்றும் மணமூட்டும் பயிர்கள் ஏற்றுமதிக்கான பயிற்சி மற்றும் உற்பத்தியாளர் வணிகர் இணைப்புக்கூட்டம்
விருதுநகர் அம்பாள் கிராண்ட் ஹோட்டல் அரங்கத்தில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நடைபெற்ற சுவை, தாளித மற்றும் மணமூட்டும் பயிர்கள் ஏற்றுமதிக்கான பயிற்சி மற்றும் உற்பத்தியாளர் வணிகர் இணைப்புக்கூட்டத்தினை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை முதன்மை செயலாளர்/ஆணையர் திரு.ஜி.பிரகாஷ்.,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் ஆகியோர் (01.10.2024) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
சுவை, தாளித மற்றும் மணமூட்டும் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முக்கிய பங்குவகிக்கின்றது. பல்வகை காலநிலை மண்டலங்களை கொண்ட தமிழகத்தில், மிதவெட்பமண்டல பயிர்களான கிராம்பு, மிளகு, ஏலக்காய், பூண்டு, மற்றும் வெட்பமண்டல பயிர்களான மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மஞ்சள், இலவங்கபட்டை போன்ற நறுமணப்பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. மிளகு மற்றும் ஏலக்காய் உற்பத்தியில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும், கிராம்பு, ஜாதிக்காய் உற்பத்தியில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் திகழ்கின்றது. இந்தியாவின் மொத்த நறுமணப்பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 21 சதவிகிதம் ஆகும்.
2023-24 ஆம் ஆண்டில், சுமார் 3,23,749 டன் அளவுடைய மிளகாய், மஞ்சள், சீரகம், மிளகு, ஏலக்காய், வெந்தயம் மற்றும் கிராம்பு ஆகிய நறுமணப்பொருட்களை தழிழ்நாடு ஏற்றுமதி செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில், கன்னியாகுமரி, கிராம்பு, இராமநாதபுரம் முண்டுவத்தல், கொடைக்கானல் மலைபூண்டு, ஈரோடு மஞ்சள் போன்ற நறுமணப்பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெறப்பட்டுள்ளது. நறுமணப்பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது இந்திய நறுமணப்பொருட்கள் வாரியம்.விவசாயத்திற்கு உண்டான எதிர்காலம் இன்னும் வருகின்ற காலத்தில் நாம் நினைத்து பார்க்க முடியாத வளர்ச்சியில் இருக்கப் போகிறது. விவசாயத்துறை பொறுத்தவரையில் இந்தியா வல்லரசாக மாறுவதற்கு உண்டான அனைத்து விதமான மூல காரணிகள் தயாராக உள்ளது.விவசாய பொருட்கள் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுகளுக்கு சென்ற ஏற்றுமதி பொருட்கள் 10 வருடத்தில் ஒரு இலட்சம் கோடி ஆகும். மேலும் 2023-2024 ஆண்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்த விவசாய பொருட்கள் மதிப்பு ரூ.2.40 இலட்சம் கோடி ஆகும். பத்து வருடங்களில் ரூ.1.40 இலட்சம் கோடி அளவிற்கு கூடுதலாக வளர்ந்து இருக்கிறது. இது ஒரு பெருமைக்குரிய ஒன்றாக இருக்கிறது.
இதில் கணிசமான அளவு 15 சதவீதம் பங்கு தமிழக மாநிலத்தைச் சார்ந்தது என்பது நமக்கு பெருமைக்குரிய விஷயமாக பார்க்க முடிகிறது.ஒரு துறை வளர வேண்டும் என்றால் ஏற்றுமதி மிக முக்கியம். ஏற்றுமதி பொருளாதாரம் எந்த துறையில் இருக்கிறதோ அந்தத் துறை தான் கட்டுக்கடங்காத ஒரு வளர்ச்சியும், ஒரு அசுரத்தனமான வேகமும் கிடைக்கும். விவசாயத்துறையில் உள்ள அங்க உறுப்பினர்களான விவசாயிகள், வியாபாரிகள், சந்தைப்படுத்துபவர்கள், வல்லுனர்கள், விஞ்ஞானிகள் இதுபோன்ற நிறைய பேர் சேர்ந்து தான் இந்த அமைப்பு.இந்த அமைப்பில் உள்ளவர்கள் பொருளாதார ரீதியில் அனைவரும் நலமாக அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால் ஏற்றுமதியை அதிகப்படுத்த வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் அந்நிய செலவாணிகள் மூலம் விவசாயத்தில் பல்வேறு விதமான புதிய யுத்திகளை கொண்டு வந்து, விவசாயிகளுக்கு லாபத்தை அதிகம் ஆக்குவதற்கு என்னென்ன அடிப்படையான பணிகள் செய்ய வேண்டுமோ அதற்குரிய புதிய கற்பிதங்களை நாம் தெரிந்து கொள்ளலாம்.
காலத்தினுடைய போக்கிலே இன்னும் நிறைய வளர்ச்சிகள் வந்தாலும் கூட, அதை வேகப்படுத்துவது தான் வேளாண்துறை அலுவலர்களுக்குரிய முக்கிய வேலை. அதை உன்னிப்பாக கவனித்து, கிரகித்து என்னென்ன வேலைகளை களத்தில் செல்ல செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டியது விவசாயிகளுடைய பணி. இதை முறையானபடி சந்தைப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற தொழில் நுட்பங்களை எல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டியது அலுவலர்களது பணி. இது போன்ற ஒவ்வொருவருக்கும் ஒரு பணிகள் இருக்கின்றது.பூச்சிக்கொல்லிகள் அதிகம் பயன்படுத்தாத இயற்கை முறையிலும், தரமான முறையிலும் விவசாயம் செய்து ஒரு பொருளை எடுத்தாலே அதனுடைய மதிப்பு அதிகம்.வேளாண்மை விற்பனைத்துறை மூலமாக மதுரை மல்லி, வத்தல், கிராம்பு உள்ளிட்ட 58 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு உள்ளதால் அந்த பொருள்களுக்கு உண்டான பொருளாதார மதிப்பு அதிகமாகிறது என்பது உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்ட உண்மை. இந்தியாவில் மட்டுமே நறுமண பொருட்கள் அதிகம் விளைகின்றன. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி உலக சந்தைகளில் நம்முடைய பொருட்களை சந்தைப்படுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ச்சியாக நம்முடைய வரலாறு முழுமைக்கும் இந்தியா குறிப்பிட்ட ஒரு 8 பொருள்களில் உலக அளவில் தொடர்ச்சியாக ஒரு ஏற்றுமதியை கடந்த சில ஆயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியாக செய்து வருவது நமது வரலாற்று பக்கங்களிலிருந்து பார்க்க முடிகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில் விளைவிக்கக்கூடிய கொடைக்கானல் மலைப்பூண்டாக இருக்கட்டும், கிராம்பாக இருக்கட்டும், வத்தலாக இருக்கட்டும் அதற்கு இந்தியா முழுமைக்கும் மேற்கு நாடுகளிலும், கிழக்கு மத்திய நாடுகளிலும் இன்னும் தேவை இருக்கிறது. இந்தியாவில் ஏற்றுமதி ஆகக்கூடிய மொத்த பொருட்களில் நான்கில் ஒரு பங்கு தமிழ்நாடு தான் முக்கிய பங்கு வைக்கிறது. அதில் சில தயாரிப்புகளில் இந்திய அளவில் அதிகமான ஏற்றுமதியை நமது மாநிலம் செய்து வருகிறது.இந்தத் துறையில் அடுத்து வரக்கூடிய ஒரு 50 ஆண்டுகள் மிகப்பெரிய சந்தை வாய்ப்பு இருக்கிறது. சாப்பிடுவதற்கு தயாராக கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள் அல்லது சமைப்பதற்கு தயாராக இருக்கக்கூடிய உணவுப் பொருட்களுக்கான சந்தைவாய்ப்பு கடந்த 10 ஆண்டுகளில் 2 அல்லது 3 மடங்கு அதிகமாக இருக்கிறது. 2030 அல்லது 2050-ம் ஆண்டுகளில் மொத்த உணவு தேவைகளில் 50 அல்லது 60 விழுக்காடு, சாப்பிடுவதற்கு தயாராக கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள் அல்லது சமைப்பதற்கு தயாராக இருக்கக்கூடிய உணவுப் பொருட்களாக தான் இருக்கும் என்று ஆய்வு அறிக்கை கூறுகிறது.
எனவே இதற்கு மிக அடிப்படையாக இருக்கக் கூடியது சுவை, தாளித மற்றும் நறுமண பொருட்கள். எனவே இன்னும் நமது பகுதியில் குறிப்பாக இந்த கரிசல் பூமியான குறிப்பாக ராமநாதபுரத்தினுடைய பகுதிகளில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு பகுதிகளிலும் குண்டு மிளகாய் வத்தலின் உற்பத்தி அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. மற்ற பகுதிகளில் தொடர்ச்சியான நமது செயல்பாடுகளின் காரணமாக உற்பத்தி செய்வதற்கும், உலகம் முழுவதும் சந்தைப்படுத்துவதற்கும் மிக பெரிய வாய்ப்பு உள்ளது.எனவே இங்கு வருகை தந்திருக்கக் கூடிய வணிகர்கள், வேளாண் உற்பத்தியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், இதில் ஏற்படக்கூடிய நவீன மாற்றங்களையும், அடுத்து வரக்கூடிய அரை நூற்றாண்டுகளுக்கு இது எவ்வளவு பெரிய வாய்ப்பு தருகிறது என்பதையும், நாம் புரிந்து கொண்டால் நிச்சயமாக இதனால் ஏற்படக்கூடிய பொருளாதார வளர்ச்சி ஏழை எளிய விவசாயிகளுக்கு நாம் அனைவரும் கொண்டு செல்ல முடியும். வர்த்தகர்களுக்கும் கொண்டு செல்ல முடியும். வணிக பொருளாதாரத்திலும் பெரிய வாய்ப்புகளை பெற முடியும் என்பதை புரிந்து கொள்வதற்கு இந்த நிகழ்ச்சி உறுதுணையாக இருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களிடையே 20-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திருமதி நாச்சியார் அம்மாள், தமிழகத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள், விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பிரநிதிகள் என சுமார் 300 நபர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
0
Leave a Reply